Skip to main content

பஞ்சராக்கிய பன்ச் வசனங்கள்!!!

Published on 01/01/2018 | Edited on 01/01/2018


2017இன் வைரல் ரியல் லைஃப் பன்ச்கள்  

ஹாலிவுட், பாலிவுட் , டோலிவுட் அப்புறம் நம்ம கோலிவுட் இப்படி அத்தனை மொழி சினிமா  ஸ்டார்களும்  பேசிய பன்ச் டயலாக்ஸ்  கடந்த ஆண்டு பிரபலமானதோ இல்லையோ, நம்ம  தமிழக அரசியல்வாதிகள் பேசிய பன்ச் டயலாக்குகள்   இணையத்தில் பிரபலம், ஹிட், வைரல், எல்லாமே ஆகின...  அந்த பன்ச்களில் பெஸ்ட்டை கொஞ்சம் திருப்பிப் பார்க்கலாம். 

காறித்துப்புனா தொடச்சுக்குவேன்  



இந்த வசனத்தை  கேட்டவுடனேயே  நமக்கு சிலிர்த்தால் நாமெல்லாம் 'நாசா'வின் ரசிகர்கள் தான். ஆம், இணையத்தில் நாசா என்று அன்புடன் அழைக்கப்படும்  டி.டி.வி. தினகரன் அணியில் செய்தித்தொடர்பாளர் பொறுப்பில் இருக்கும் நாஞ்சில் சம்பத் தான். ஒரு தனியார்  தொலைக்காட்சியில் அவரை நேர்காணல் நடத்தியபோது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அவரைப்  பார்த்து நீங்கள் 'சசிகலாவையும் தினகரனையும் தலைவராக ஏற்றுக்கொண்டீர்களே, சூழலுக்குத்  தகுந்தாற்போல  மாறிடுவீங்களா?' என்று கேட்ட பொழுது, "ஆமா சூழலுக்கு தகுந்தமாதிரி  மாறிடணும்" என்கிறார். சளைக்காத தொகுப்பாளர், "இந்த நிகழ்ச்சிய பார்த்துட்டு வெளிய உங்கள ஏதாவது..." என்று முடிக்கும் முன்னரே, "என்ன காறித்துப்பிடுவாங்களா... துப்புனா தொடச்சுக்குவேன் " என்று அவர் அடித்த பன்ச்சில் தொகுப்பாளர் சற்று தடுமாறிப் போனார்.  இதன் பின், 'துப்புனா தொடச்சுக்குவேன்'  சமூகவலைதளத்துல தீயா பரவி மீம்ஸா வலம் வந்துச்சு.

வேட்டியை மடிச்சுக் காட்டினா நானும் ரௌடிதான்



விஜயின் மெர்சல் இந்தியா முழுவதும் பிரபலமாக  இவர் தான் முக்கிய காரணம். அந்த பிஆர்ஓ  வேற யாருமில்ல "ஆன்டி இந்தியன்" என்ற வசனத்திற்கு சொந்தக்காரர் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா  தான் . மெர்சல்ல  வர ஒரு வசனத்துக்கு கோபப்பட்டவரு அந்த விஜயே மெர்சல் ஆகுற மாதிரி,  திருமாவளவனை எதிர்த்து பா.ஜ.க காரைக்குடியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ரொம்பப்  பேரு நினைச்சுட்டிருக்கான்  ரௌடினு, வேட்டிய மடிச்சுக்  கட்டினா ராஜாவும் ரௌடி தான் " என்று கூற கரகோஷம் எழுந்தது.  'இது போதும் எனக்கு இது போதுமே' என்று  இணையவாசிகள் அந்த பன்ச்ச  வைத்து  வீடியோ மீம்ஸ் ,போட்டோ மீம்ஸ் என்று போட  அந்த நாளோட ஹீரோ + வில்லனா  இருந்தாரு  ராஜா .

ஏய்...  எச்சக்கல்ல...



'ஒரு நாயகன் உதயமாகிறான்' என்பதைப்  போல ஜெயலலிதா இறந்தவுடன் அவரின் பிம்பம் என்று கூறி இரு நாயகிகள் தமிழகத்தில் உருவாகினர். இதில் குட்டி அம்மா தீபா கட்சி தொடங்கி கண்களை மூடி மூடிப்  பேசியவர் திடீரென ஒரு நாள், போயஸ் இல்லத்தில் தன் கணவர் மாதவனுடன் வந்து சகோதரர்  தீபக்குடன் சண்டை போட்டார்."நீ தான தீபக் வரச்சொன்ன,  ஏன் இப்ப இல்லனு சொல்ற? மாதவன  கைநீட்டி அடிக்க வர? இந்த  காசுக்கு ஆசைப்பட்டு இப்படியெல்லாம் பண்ணாத... ஏய் போடா  எச்சக்கல்ல" என திட்ட நம்ம குட்டி அம்மாவா இப்படி பேசுறதுனு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடைசியில் தீபா  மீம்ஸ் உருவாக்குபவர்களின் தத்துபிள்ளையாகவே மாறிவிட்டார்.

 நீங்க ஷட்-அப் பண்ணுங்க

வடகொரிய ஆர்மிக்குப் போட்டியாக  ஆர்மி  ஒன்று தமிழகத்தில்  'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் உருவாகியது. ஆம்...அதே தான்... 'ஓவியா ஆர்மி' தான் அது. இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். 'பிக் பாஸ்' வீட்டில்  அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது நடிகர் கஞ்சா கருப்பு ஓவியாவிடம் கோபமாக பேச, ஓவியா அவரிடம்  'நீங்க ஷட்-அப் பண்ணுங்க'னு சொல்வார். அந்த ஒத்த பன்ச் தமிழ்நாட்டில்  உள்ள  இளைஞர்கள் மனதில்  பெரிய தாக்கத்தை   ஏற்படுத்தி ஒரு ஆர்மியையே உருவாக்கியது. ஒரு சினிமா பாடலும் வந்தது. சாதா ஓவியாவை  தலைவி ஓவியாவாக  மாற்றியது  இந்த ஒரு பன்ச்   .

பிரஷர் குக்கர் வாங்குனதே எதிரிகளின் பிரஷரை ஏத்தத்தான் 

ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில்  நடைபெற்ற இடைத்தேர்தல் தான் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தை  அலங்கரித்தது.  சென்ற முறை டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக இருந்த முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, இந்த முறை ஓ.பன்னீர்செல்வத்தின் அணியை சேர்த்துக்கொண்டு  மதுசூதனனை  ஆதரிக்க, இவர்களை சமாளிக்க வியூகம் வகுத்து தனக்கு சென்ற முறை அளித்த  தொப்பி சின்னத்தை கைப்பற்ற நினைத்தார் டிடிவி. ஆனால் தேர்தல் ஆணையம் சுயேட்சை   வேட்பாளருக்கு தொப்பி சின்னம்  இல்லை என்று கூறி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை  வழங்கியது. அப்போது பத்திரிக்கையாளர்களிடம்  "பிரஷர் குக்கர் வாங்குனதே எதிரிகளின் பிரஷரை ஏத்தத்தான்" என்று கூறினார். கடைசியில் 'தொப்பி இல்லனா என்ன குக்கரை வைத்து அனைத்து கட்சிக்கும் தொப்பியை போடுவோம்' என்று அவரே வெற்றிபெற்றார்.

இதை மிஸ் பண்ணிடாதீங்க...


போர் வரட்டும்... பாத்துக்கலாம் 

ஒரு வழியாக அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். இன்னும் கட்சி, கொள்கைகள், செயல்பாடுகள் என்று வேலைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லையென்றாலும் அந்த ஒரு அறிவிப்பு வருவதற்கே ஆண்டாண்டுகளாக காத்திருந்தனர் ரசிகர்கள். கடந்த மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் கடைசி நாள் பேசிய போது, கட்சி அறிவிப்பை எதிர்பார்த்தவர்களுக்கு "போர் வரட்டும் பாத்துக்கலாம்' என்று பேசி பில்ட்-அப் ஏற்றினார். அப்பொழுது அது வைரல் ஆனது.

ஹரிஹரசுதன்      

சார்ந்த செய்திகள்