Skip to main content

நீதிமன்றங்களில் அரசியல் மேடைகள்!

Published on 31/08/2017 | Edited on 31/08/2017
நீதிமன்றங்களில் அரசியல் மேடைகள்!
-கோவி.லெனின்

”முரண்பாடான காரணங்களைக் கூறி, வழக்குகள் தொடர்ந்து, இந்த  உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்கிறார்” என்ற கருத்தைத் தெரிவித்து, தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் கிரிராஜன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ராஜேஷ்.

தி.மு.க. தொண்டர்கள் சீரமைத்த சேலம் மாவட்டம் கச்சராயன் ஏரியை பார்வையிடச் சென்ற அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தார்கள் என்பது மனுதாரரின் வாதம். ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவிருந்த மனிதசங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்ளச்  சென்றபோது தன்னை போலீசார் கைது செய்ததாக மு.க.ஸ்டாலினே பேட்டியளித்திருக்கிறார் எனக் கூறி, நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என தி.மு.க. தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார் எனப் பதிவு செய்கின்றன ஊடகங்கள். 

நீதிமன்றங்கள் அரசியல் மேடைகளாவது புதிதன்று. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தின் வாயிலாக அரசியல் கருத்துகளை எடுத்து வைப்பது போராட்ட முறைகளில் ஒன்று என்பது நெடுங்கால வரலாறு.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1929  ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது பகத்சிங், “நாங்கள் யாரையும் கொல்கின்ற நோக்கத்தில் குண்டுகளை வீசவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை குறி வைத்தே வீசப்பட்டன. மக்களை ஏமாற்றி வரும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. நீடிக்கவும் விடமாட்டோம் என்பதே எம் நோக்கம்” எனத் தன் அரசியல் பார்வையை நீதிமன்றத்தில் முழங்கினார். அதே மனஉறுதியுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்த் தியாகம் செய்தனர் தோழர் பகத்சிங்கும் அவரது தோழர்களும்.



விடுதலைப் போராட்டக் களத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நீதிமன்றங்களை அரசியல் மேடைகளாக்கியுள்ளனர். சுதந்திர இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தினர் நீதிமன்ற வாதங்களை அரசியல் மேடைகளாக்கி, உண்மையாக சமூக-பொருளாதார விடுதலையை வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சென்னை மாகாணத்தை ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தபோது, பள்ளிகளில் இந்தி மொழித்  திணிக்கப்படுவதைக் கண்டித்து 1938ஆம் ஆண்டில், முதல் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்ட தளகர்த்தரான தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, அவர் தனது கொள்கை முழங்கும் அரசியல் மேடையாகவே நீதிமன்றத்தை மாற்றினார்.

“இந்த நீதிமன்றம் காங்கிரஸ் அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தாங்களும் (நீதிபதி) பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டும் கனம் முதல்மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி நீதிமன்றங்களில் நியாயத்தை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகும். ஆதலால் இந்த நீதிமன்றத்தின் நியாயத்தில்- இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கையில்லை. எனவே கோர்ட்டார் அவர்கள் திருப்தியடையும் வகையில் தங்களால் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க இடமுண்டோ அதனையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாய்க் கேட்டுக்கொள்கிறேன்” 

சிங்கத்தின் கர்ஜனை போன்ற இந்த கம்பீர வார்த்தைகளைத் தொடர்ந்து பெல்லாரி சிறையில் பெரியார் அடைக்கப்பட்டார். அதுபோலவே, சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை 1957 நவம்பர் 26ல் பெரியார் முன்னெடுத்தபோது அதில் பங்கேற்ற திராவிடர் கழகத்தினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலமும் கொள்கை பிரகடனமாகவே அமைந்தது. சாதி ஒழிப்பை வலியுறுத்தி சட்டத்தை  எரிக்கத் தங்களுக்கு உரிமை உண்டு என்றும், இதற்காக வழக்காட விரும்பவில்லை என்றும், நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்பதாகவும் கூறி ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர். மூன்றாண்டுகள்  வரையிலான தண்டனையில், 5 பேர் சிறையிலேயே இறந்தனர். 13 பேர் சிறைக்கொடுமைகளின் தாக்கத்தால் பின்னர் இறந்தனர்.

பொதுவாழ்வில் தியாக உணர்வு கொண்ட இயக்கத்தினர் நீதிமன்றங்களை அரசியல் மேடைகளாக்குவது வரலாற்றில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற மத்திய அரசின் நிலையைக் கண்டித்து அரசியல் சட்டத்தின் 17வது பிரிவை எரிக்கும் போராட்டத்தை 1963  நவம்பர் 17ஆம் நாள் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியது. 

நீதிமன்றத்தில் அண்ணா கொடுதத வாக்குமூலத்தில், “மக்களாட்சி முறையில் ஆளவந்தார்கள் புகுத்தும் அநீதியான திட்டங்களை விழிப்புணர்ச்சியுடன் கண்டறிந்து, உள்ளத்து உரத்துடன் எதிர்க்க-ஆற்றல் பெற்ற எதிர்ப்பு சக்தி இல்லாது போய்விடுமானால், மக்களாட்சி முறை கேலிக்கூத்தாகி, இறுதியில் கொடுங்கோன்மையிலும் கேடுகெட்டதாகிப்போகும்” எனத் தன் அரசியல் முழக்கத்தை முன்வைத்து, நீதிமன்றம் அளித்த 6 மாத சிறைத்தண்டனையை ஏற்றார். அண்ணா வழியில் கலைஞர், மதியழகன், என்.வி.நடராசன் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சிறை புகுந்தனர்.

  1986ஆம் ஆண்டு மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து தி.மு.க நடத்திய அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கலைஞர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, ‘‘நாங்கள் சட்டத்தின் வாசகங்கள் அடங்கிய நகலைத்தான் எரித்தோம். அதற்காகத் தண்டனை என்றால், புரட்சிக்கவிஞர் பாடியதுபோல, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்” என்றார். சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரின் பதவியைப் பறித்த எம்.ஜி.ஆர் அரசு, அவர்களை சிறைப்படுத்தியதுடன், கலைஞருக்கு சிறை சீருடையை அணிவித்தது.

ஈழப்பிரச்சினைக்காக பொடா சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் எனப் பல வழக்குகளை எதிர்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நீதிமன்றங்களையும்-தீர்ப்பாயங்களையும் அரசியல் மேடையாக மாற்றி, ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்ட நியாயத்தை முன்வைத்திருக்கிறார். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தன் மீது புகார்கள் சுமத்தப்பட்டபோது, நீதிமன்றத்தை எதிர்கொண்டிருக்கிறார். ஒருமுறை தன் மீது சுமத்தப்பட்ட புகாருக்காக நேரடியாக, காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், ‘முடிந்தால் வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று மனு கொடுக்க முயன்றபோது, உயரதிகாரிகள் பின்வாசல் வழியாக ஓட்டமெடுத்த நிகழ்வுகளும் உண்டு.



சில வாரங்களுக்கு முன், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரியைப் பார்வையிடுவதற்காக விமானத்தில் கோவை வந்து தரையிறங்கி, சாலை வழியாக புறப்பட்ட தி.மு.க செயல்தலைவர் கைது செய்யப்பட்டார். அதற்கு நீட் தேர்வு போராட்டத்தைக் காரணம் காட்டியது அரசு. மாலையில் சேலத்தில் நடக்கவிருந்த மனிதசங்கிலி போராட்டத்திற்காக காலையில் கோவையில் கைது செய்ததுதான் அரசியல். இதனை முன்னிறுத்த வேண்டிய நிலையில், “நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முயற்சித்தது கிடையாது” என்று பேட்டியளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

தமிழக அரசியலில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழல் வழக்குகளை சந்திக்கும் அரசியல்வாதிகளே அதிகம். ஜெயலலிதா பாணியில் வாய்தா மேல் வாய்தா வாங்குவதன் மூலம் கட்சி வழக்கறிஞர்களின் தொழில் சிறக்கிறது. அரசியல்-சமூகக் கொள்கைகளை முன்வைக்கும் வாதங்கள் குறைந்து, ‘சுமூக’த் தீர்வுக்கான சட்டரீதியான வழிவகைகள் ஆராயப்படுகின்றன. 

போராட்டக் களங்களும்கூட காலை முதல் மாலை வரையான ஒருநாள் பொழுதுபோக்கு சிறைச்சாலைகளாக மாறிவிட்டன.  அந்த அடையாள கைது நடவடிக்கைக்குக் காவல்துறையினர் தயாராவதற்கு முன்பே, போராட்டம் நடைபெறும் இடத்தருகே உள்ள ஏ.சி. திருமண மண்டபத்தை ‘புக்’ செய்து வைக்கும் புத்திசாலி நிர்வாகிகள் கட்சி மேலிடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள். அரசியல் போக்குகள் மாறும்போது, நீதிமன்றங்களின் கருத்துகள் விமர்சனப் பார்வையுடன் வெளிப்படுகின்றன.  

மக்களுக்கானப் போராட்டத்தில் உறுதியாக இருப்பவர்கள் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவது வரலாற்றுத் தொடர்ச்சி. அந்த செயலுக்காக சட்டத்தின் பார்வையில் நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்பதே பொதுநல அரசியல்.     


சார்ந்த செய்திகள்