Skip to main content

தினகரன் கற்பனை குதிரையில் பறக்கிறார்

Published on 07/12/2017 | Edited on 08/12/2017
தினகரன் கற்பனை குதிரையில் பறக்கிறார்
-வைகைச்செல்வன் கிண்டல்



ஆளும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் நக்கீரன் இணையதளத்திற்கு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கக் கூடாது என எதிர்ப்பது ஏன்?

ஜெ. மறைவுக்குப் பின்னர் இரண்டு அணியாக பிரிந்து, நாங்கள் ஒற்றுமையாக இருந்தபோது தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் அவர் தனியாக பிரிந்து செல்கிறார். நாங்கள் மொத்தமாக உழைத்த உழைப்பை அவர் சொந்தம் கொண்டாடுவது அழகல்ல. ஆகவே அவருக்கு உண்மையான செல்வாக்கு மக்கள் மத்தியில் இருக்கும் என்றால் ஏதோ ஒரு சின்னத்தில் போட்டி போட்டு வெற்றி பெற்று வர வேண்டுமே தவிர, பிறருடைய உழைப்பில் குளிர் காயக்கூடாது. தொப்பி சின்னம் குலுக்கல் முறையில் அவருக்கு கிடைத்தால் அதில் எங்களுக்கு பயமில்லை. புலியைப் பார்த்து பூனை சூடுபோடக்கூடாது.

நடிகர் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு ஆளும் கட்சியியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுகிறதே? 

தனக்கு பரிந்துரை செய்ய தொகுதியில் உள்ள இரண்டு வாக்காளர்களையே அவர் சரிசெய்ய முடியாதபோது, 2 லட்சத்திற்கு மேல் உள்ள தொகுதியில் அவர் எப்படி வாக்குகள் பெற முடியும். தனது நம்பிக்கைக்குரியவர்களையே அவரால் தக்க வைக்க முடியவில்லை. அப்புறம் தொகுதி வாக்காளர்களிடையே எப்படி வாக்கு கோர முடியும். 


500 பேர் கொண்ட நடிகர் சங்கத் தேர்தல் அல்ல. இது பொதுத்தேர்தல். பொதுமக்களை சந்தித்து நன்மதிப்பை பெற்றால்தான் வெற்றி வாய்ப்பை பெற முடியும். நடிகர் 
சங்கத் தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் வெற்றிப்பெற்றதைப்போல ஆர்.கே.நகரிலும் வெற்றிப்பெற்றுவிடுவோம் என மாயத்தோற்றத்தை உருவாக்கிப்பார்த்தார். மண்ணைக் கவ்வினார்.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியில் பிடியில் 
இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்களே?

இவை கற்பனையான எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் என்பது தனி அமைப்பு. இதில் அரசு தலையிட முடியாது. 
              
வேண்டுமென்றே தினகரன் போன்ற பெயர் வைத்தவர்களை தேடிப்பிடித்து வாக்காளர்களை குழப்ப போட்டியிட வைத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டுகிறார்களே?

ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி நடக்கிற விஷயம். நான் இரண்டு முறை போட்டியிட்போது இப்படி நடந்திருக்கிறது. 

தினகரன் வெற்றி பெறுவார் என உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்ட ஆளும் கட்சியினர், அவருக்கு தொப்பி சின்னம் கிடைக்கக் கூடாது என எதிர்த்து வருகின்றனர் என திவாகரன் கூறுகிறாரே?

தவறான கருத்து.  கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்கிறார்கள். சொற்ப வாக்குகளைக் கூட பெற முடியாது.  கற்பனை குதிரையை தட்டிவிட்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள். இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடும் தினகரன், அதிமுகவுக்கு எதிராக பேசும் தகுதியை இழந்துவிட்டார்.    

- வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்