Skip to main content

நேருவும் காந்தியும் தலைவர்கள் இல்லையா? பாஜகவின் தகிடுதித்தம்!

Published on 14/11/2017 | Edited on 14/11/2017
நேருவும் காந்தியும் தலைவர்கள் இல்லையா? பாஜகவின் தகிடுதித்தம்! 

பாஜக வெளியிட்டுள்ள ஒரு புத்தகத்தில் தலைவர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதில் நேரு மற்றும் காந்தியின் பெயர் இல்லை.

மகாபுருஷர்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள அந்தப் புத்தகத்தில் நாட்டின் விடுதலைக்கு போடுபடாத, சிறைக்குச் செல்லாத, ஜனநாயகம் புரியாத பலருடைய பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்த தேசத்தந்தை காந்தி, இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாகவும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராகவும், இந்தியாவை மதசார்பற்ற நாடாக உருவாக்குவதில் முன்னிலை வகித்தவருமான ஜவஹர்லால் நேரு ஆகியோரை இருட்டடிப்புச் செய்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கு சில நாட்கள் முன்னதாக இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியான ராம் நாத் கோவிந்த் பேசிய போதும் ஜவஹர்லால் நேருவை தவிர்த்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தை உத்தரப்பிரதேசத்தில் பள்ளி உயர்வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒரு தேர்வுக்காக கட்டாயம் படிக்கும்படி அந்த மாநில அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. சிறப்பாக பதில் அளிக்கும் மாணவர்களுக்கு பரிசு என்றும் அறிவித்துள்ளது.

பாஜகவின் தலைவர்கள் பட்டியல் எத்தகையோரை தலைவர்களாக பட்டியிலிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த அளவுக்கு வரலாற்றை அப்பட்டமாக மறைக்கும் சிறுமைத்தனத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.

வரலாற்றை திரிப்பதும், மறைப்பதும் இயலாது என்பதே உண்மை. அடுத்து வருகிற தலைமுறைகள் முந்தைய வரலாறை படித்து மனதளவில் ஒப்பிட்டு முடிவு செய்யும். பாஜக போடும் புத்தகத்தில் இருப்பவர்கள் மட்டுமே தலைவர்கள் அல்ல.

சமத்துவம், ஜனநாயகம் மீது நேரு எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பது வரலாற்றில் பாரபட்சம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய வரலாறுகளை மறைப்பவர்களும், தடம் தெரியாமல் அழிப்பவர்களும் என்றேனும் ஒருநாள் அம்பலப்பட்டே ஆவார்கள்.



ஜனநாயகத்தை நிறுவனமயப்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் நிலவும் வறுமையையும் சமத்துவத்தையும் சந்தைப் பொருளாதாரம் கையாள முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால், உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி போராடும் மக்களுடைய ஒற்றுமை நல்லதோர் சமுதாயத்தை உருவாக்க உதவும் என்று நேரு நம்பினார். மூன்றாம் உலகநாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி, காலனியாதிக்கத்துக்கும் எதேச்சாதிகாரத்திற்கும் ஆளாகிக் கிடந்த நாடுகளை மீட்க ஒரு அமைப்பை உருவாக்கியவர் நேரு.

பாஜகவின் தலைவர்கள் பட்டியலில் காந்தியும் நேருவும் இடம்பெறாததை குறையாக பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு மாபெரும் தலைவர்கள் என்பதை பாஜக மறைமுகமாக உணர்ந்திருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேரு இடம்பெற்றால் நேருவோடு மோடியை ஒப்பிடுவார்கள். அப்படி ஒப்பிட்டால் மோடி நேருவின் விரல் நகத்தளவுகூட தேறமாட்டார். காந்தி இடம்பெற்றால் காந்தியை கொன்றவர்கள் யார் என்கிற விவரமும் தெரியவரும்.

எதுக்குடா வம்பு என்றுதான் அவர்கள் இருவரையும் பாஜக பட்டியலில் தவிர்த்திருக்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டு அந்த புத்தகத்தை தயாரித்த பாஜக பாவிகளை மன்னிப்போம்.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்