ஜெ.வின் அரசியல் வாரிசு: திருமாவளவன் சொன்னது உண்மைதான்: தமிமுன் அன்சாரி (EXCLUSIVE)
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக இந்த இடைத்தேர்தலின் மூலம் மக்களால் டிடிவி தினரகன் அடையாளம் காணப்பட்டிருக்கிறார் என்று நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த அவர்:-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக புதிய சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தினகரனுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு. அவர் வெற்றி பெறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்று சொன்னால் அந்த தொகுதியில் உள்ள சிறுபான்மை மக்களான கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் கடந்த தேர்தல்களிலேயே அவரை ஆதரிக்க முன் வந்தனர். இந்த முறையும் அதுதான் நிகழும் என்று எதிர்ப்பாத்தேன்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இவருக்கு கொடுத்த நெருக்கடிகளை அவர்கள் கூர்ந்து கவனித்தார்கள். டிடிவி தினகரனுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க முடிவு செய்தார்கள். அதனுடைய விளைவாக கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் கொத்துக் கொத்தாக அவருக்கு வாக்களித்துள்ளனர். நேற்று தினகரனுக்கு நான் போனில் வாழ்த்து தெரிவித்தபோது இதனை அவரே சொன்னார்.
அதுமட்டுமல்லாமல் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும், அவர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்திலேயே பரவலாக வாக்களித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. காரணம், மத்திய அரசும், மாநில அரசும் அவருக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டதை யாரும் விரும்பவில்லை.

அவருடைய தொலைக்காட்சி பேட்டிகள் ஒரு வசீகரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் முழுக்க இதுதான் பரவலான மனநிலை. அந்த மனநிலையைத்தான் ஆர்.கே.நகர் மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இந்த வெற்றி மூலம் அவர் உருவெடுத்திருக்கிறார்.
அதே நேரத்தில் திராவிட இயக்கத்தின் பற்றாளன் என்ற அடிப்படையிலும், தமிழர் என்ற அடிப்படையிலும் திமுக வைப்பு தொகை இழந்ததை நான் மிகுந்த கவலையுடன் பார்க்கிறேன். சமூக நீதிக்காக போராடக் கூடிய ஒரு அரசியல் கட்சி பலவீனம் அடைவதை நாங்கள் விரும்பவில்லை. நேற்று நானும், தனியரசு எம்எல்ஏவும் மிகவும் கவலையுடன் இதனை பேசிக்கொண்டோம். அதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கக் கூடிய வாக்குகள் மாற்று அரசியல் கட்சிகளுக்கு ஒரு நம்பிக்கையையும், பலத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது என்தையும் மறுப்பதற்கில்லை.
எது எப்படி இருந்தாலும் தினகரனுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி என்பது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அனைவரும் மதிக்க வேண்டும்.
நேற்று தினகரனிடம் பேசும்போது, மதச்சார்பின்மை, சமூக நீதி, தமிழர் நலன், திராவிட இயக்க அரசியல் ஆகியவற்றை காக்கும் பெரும் பொறுப்பை மக்கள் உங்களுக்கு உணர்த்திருக்கிறார்கள், அதுவும் சிறுபான்மை மக்கள் உங்களை அதிகமாக நம்பியிருக்கிறார்கள் என்று கூறியபோது, நீங்கள் சொன்ன நம்பிக்கைகளை நிச்சயமாக நான் காப்பாற்றுவேன் என்று பதிலளித்தார். அவருடைய வெற்றிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிமுக தலைமை இந்த வெற்றி குறித்து மீளாய்வு செய்ய வேண்டும். பாஜகவுடன் நிழல் உறவு கொண்டிருந்ததும், மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்ததும், கவர்னரின் நடவக்கையை வேடிக்கை பார்த்ததும் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை இதன் மூலம் உணர வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார் என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே
உண்மைதான். அய்யா எம்.ஜி.ஆர். அவரை தொடர்ந்து ஜெயலலிதா அம்மா என்ற வரிசையில், அவருடைய அரசியல் வாரிசாக இந்த இடைத்தேர்தலின் மூலம் மக்களால் டிடிவி தினரகன் அடையாளம் காணப்பட்டிருக்கிறார் என்பதை ஏற்பதுதான் எதார்த்தமாகும். இவ்வாறு கூறியுள்ளார்.
-வே.ராஜவேல்