Skip to main content

கையாலாகாத, காட்டிக் கொடுத்த கூட்டத்திடம்

Published on 28/11/2017 | Edited on 28/11/2017
கையாலாகாத, காட்டிக்கொடுத்த கூட்டத்திடம் சின்னம் இருந்து என்ன பயன்? - நாஞ்சில் சம்பத் 

டிடிவி தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:

இரட்டை இலை விவகாரத்தில் மறைந்த ஜானகி அம்மாள் ஒதுங்கியது போல சசிகலாவும், தினகரனும் பெருந்தன்மையாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் பக்கம் இருக்கும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளாரே?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனைவியாக இருந்தவர் வி.என்.ஜானகி. அன்றைக்கு ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களின் தூண்டுதலால் விருப்பம் இல்லாத முதல் அமைச்சர் பொறுப்பை அவர் ஏற்றார். ஆனால் ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கும், மக்கள் மன்றத்தில் அவருக்கு கிடைத்த மகத்தான வரவேற்பும் ஜானகி அம்மையாரை திரும்ப திரும்ப யோசிக்க வைத்தது.

அவருடைய போதாமையும், இயலாமையும், முதுமையும் இந்த சுமையை இனிமேல் நாம் சுமக்க தேவையில்லை என்கிற பெருந்தன்மையான முடிவை எடுத்து ஜெயலலிதா கையில் எல்லா பொறுப்பையும் ஒப்படைத்தார்கள்.

அந்த நிலைமையோடு, இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற நிலைமையை ஒப்பிடுவது வேலுமணியின் அறியாமையை காட்டுகிறது. இங்கே இயலாமை கிடையாது, போதாமை கிடையாது, முதுமை கிடையாது, எந்தவித அறைகூவலையும், அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

மக்கள் மன்றத்தில் எங்களுக்கு மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது என்பதை டி.டி.வி. தினகரன் தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலம் நிரூபித்து வருகிறார். ஆகவே வேலுமணி தான் சொன்னதை திரும்பப் பெற்றுக்கொண்டு, அன்றைக்கு ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கைப்போல இன்றும் செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டிருக்கிற டிடிவி தினகரனை ஏற்பதற்கு வேலுமணி போன்றவர்கள் முன்வர வேண்டுமே தவிர, ஏதோ பெரிய மேதாவி என நினைத்துக்கொண்டு இதுபோன்று கருத்து சொல்வது ஆரோக்கியமான போக்கு அல்ல.

அதிமுகவை உடைத்து விடலாம் என நினைத்த டிடிவி தினகரனுக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

மத்திய அரசின் காலடியில் விழுந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து கட்சியையும், ஆட்சியையும் காட்டிக்கொடுத்தவர்கள் இரட்டை இலை சின்னத்தை பெற்றிருக்கிறார்கள். அதனால் வெட்கப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான். எங்களுக்கு எந்த வேதனையும் இல்லை.

கைவிட்டுப்போன இரட்டை இலை சின்னத்தை மீட்டு, மீண்டும் இந்த கழகத்தை வலிவோடும், பொலிவோடும் வழி நடத்துகிற வல்லமை டிடிவி தினகரனுக்கு இருக்கிற காரணத்தால் சின்னத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

அதிலும் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இதுபோன்ற ஒரு சின்னத் தை அறிமுகம் செய்வதோ, மக்களிடம் கொண்டு செல்வதோ ஒரு பிரச்சனையாக இருக்கும் என்றுகூட கருதவில்லை. ஆகவே சின்னம் யாருடைய கையில் இருக்கிறது என்பதை பொறுத்துதான் வெற்றியே தவிர, கையாலாகாதவர்கள் கையிலும், காட்டிக்கொடுத்தவர்கள் கையிலும் சின்னம் இருக்குமேயானால் சின்னத்திற்கே அவமானம்தான் வரும் என்பதை தேர்தல் முடிவு சொல்லும்.

உங்கள் அணியில் இருந்த ராஜ்ய சபா எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திடீரென எடப்பாடியை சந்தித்து, அவரது அணிக்கு தாவியுள்ளனரே?

அச்சத்தினால் போயிருக்கிறார்கள். தங்களுடைய பதவிகளுக்கு ஆபத்து வரும் என போயிருக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்து வருகிற ஆதாயத்திற்கு ஏதாவது இடையூறு வரும் என கருதி போயிருக்கிறார்கள்.

52 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட திருச்சி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

துணிச்சலாக தேர்தலை எதிர்கொள்வது. டிசம்பர் 1ஆம் தேதி டிடிவி தினகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வட்டத்திலும் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக நியமிக்கப்பட்டனர்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்