Skip to main content

GST வரி குறைப்பு

Published on 16/11/2017 | Edited on 16/11/2017
GST வரி குறைப்பு

பொருட்கள், பயன்கள் - பொதுமக்களுக்கென்ன பயன்?    

நம் அனைவரையும் பணமதிப்புநீக்க  நடவடிக்கை அடித்துத்  துவைத்தது என்றால், ஜி.எஸ்.டி.  காயப்போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வரி இழப்பு ஏற்படும் என தெரிந்தும்  'பல' காரணங்களுக்காக  177 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 'இந்த வரிக்குறைப்பு மக்களுக்கானது' என்று GST கவுன்சில் உறுப்பினரான   பீகார் துணை முதல்வர் சுஷீல் குமார் மோடி கூறியிருக்கிறார். மோடி அப்படித்தான் கூறுவார்.  உணவகங்களில் 18% ஆக இருந்த GST, இன்று முதல் 5% ஆக குறைந்திருக்கிறது. இது சற்று ஆசுவாசம் தருவதாகயிருந்தாலும்    நாம் மேலும்  ஆராய்ந்தால் இது ஏழைகளுக்கு கொஞ்சம் மட்டுமே  நன்மை தரும்  திட்டமாகவே இருக்கிறது. பொதுவாக வரி என்றாலே அது வாடிக்கையாளரின் தலையில்தான் விழும் என்பது கவனிக்கவேண்டிய விஷயம்.

ஆட்சியாளர்கள் ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு பட்டியலை  28,18,12 சதவீதம் மற்றும் முற்றிலும் நீக்கப்பட்டவை என பிரித்தாலும் நாம் அதை வேறு விதமாகவே பிரிக்க வேண்டியுள்ளது.







இதுவும், அதுவும்  ஒன்றா?

அழகுசாதன பொருட்களுக்கும், ஜிம்னாஸ்டிக், தடகள கருவிகளுக்கும், புல்டோசர், சரக்கு லாரிகள் போன்ற வாகனங்களுக்கும், அணு உலைகளுக்கும், சாப்பாட்டிற்கும், தீயணைப்பான்களுக்கும், துப்புரவு, கழிவறை பொருட்களுக்கும் 18 சதவீதமும், கிரைண்டருக்கும், ஆயுதம் தாங்கிய போர் வாகனங்களுக்கும், உயிர்காக்கும் (மருத்துவத்திற்கு பயன்படும்) ஆக்சிஜன் சிலிண்டருக்கும், உணவுக்கு சுவை கூட்டும் பொருட்களுக்கும், விவசாயம் சார்ந்த இயந்திரங்களின் உதிரி பாகங்களுக்கும் 12 சதவீதமும், புகையிலை பொருட்களுக்கும், சிமெண்ட், பெயிண்ட் ஆகியவற்றிற்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி. குறைந்துள்ளது என்பதால் இந்த பொருட்களை வாங்க முடியுமா?

அணு உலை கருவிகளுக்கும், போக்குவரத்து சிக்னல், பாதுகாப்பு, கட்டுப்பாட்டு கருவிகளுக்கும், டாங்க்(tank ) மற்றும் இதர ஆயுதம் தாங்கிய போர் வாகனங்களுக்கும் எதற்காக வரிகுறைப்பு ? இதை சாதாரண மக்களில்  யார் வாங்கப்போகிறார்கள்? 






தொலைநோக்கு பார்வையோ?

சிமெண்டிற்கு ஜி.எஸ்.டி. 28%, சிமெண்டாலான பொருட்களுக்கு 18%. சிறிய அளவில் செய்யப்படும்  கட்டிட வேலைகளுக்கு கண்டிப்பாக இந்த வரிகள் விலையை அதிகப்படுத்தியிருக்கின்றன.   

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் அரசாங்கம்...

தூய்மை இந்தியா என தெருத்தெருவாக கூவிவிட்டு, கழிவறை பொருட்களுக்கும், துப்புரவு பொருட்களுக்கும் 18% ஜி.எஸ்.டி. விதிப்பது எவ்வித நியாயம். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி செல்பவர்கள் நாங்கள்.  எங்களுக்கு பசுமை இந்தியா பற்றித்  தெரியாது என்று  கூறும் வகையில் விவசாயம் சார்ந்த இயந்திரபொருட்களின் வரி உள்ளது. 









எது ஆடம்பரம்?

ஒரு வீடு கட்ட நினைப்பது (ஆடம்பரமற்ற) தவறா?  சிமெண்ட், பெயிண்ட்க்கு மட்டும் 56 சதவீதம் (இரண்டிற்கும் சேர்த்து) ஜி.எஸ்.டி. விதித்திருக்கிறார்கள். அவர்களே கூறுகின்றனர் 28% வரி உள்ள அனைத்தும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஆடம்பர பொருட்கள் என... 

இது குஜராத் மற்றும் உத்திர பிரதேச தேர்தலுக்கான அறிவிப்பு  என்று அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் சரி,  முதலிலேயே கூறியதுதான், எல்லா வரியையும் கடைசியில்  வாடிக்கையாளர்தான் செலுத்த வேண்டும்.

கமல் குமார் 

சார்ந்த செய்திகள்