Skip to main content

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!

Published on 13/12/2017 | Edited on 14/12/2017
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்! 

‘கூகுள்’- ஒரு தேடுதளமானாலும் அதை இந்தியர்கள் படுத்தும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியர்களால் கூகுள் பல ‘சோதனை’களை சந்தித்ததாகவும், அவர்கள் எழுப்பும் கேள்விகள் புரியாமல் குழம்பிப் போனதாகவும் அந்த நிறுவனமே அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டது. அந்தளவிற்கு கூகுளுக்கும் இந்தியர்களுக்குமான உறவு என்பது பிரிக்கமுடியாததாய் இருந்திருக்கிறது என்பதே உண்மை.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட, குறிப்பாக ‘எப்படி இதைச் செய்வது?’ உள்ளிட்ட தகவல்களை சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டது. வாருங்கள்.. நீங்கள் தேடிய விஷயங்களெல்லாம் அதில் இருக்கிறதா என கொஞ்சம் தேடிப் பார்க்கலாம்.

1. பான் அட்டையோடு ஆதாரை இணைப்பது எப்படி?

இந்திய மக்கள்தொகையில் சுமார் 111 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. நடப்புக் கணக்குப்படி 25 கோடி பேர் பான் அட்டை வைத்திருக்கின்றனர். ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் இந்த ‘டிஜிட்டல் இந்தியாவில்(!)’ பான் அட்டையோடு ஆதாரை இணைப்பது எப்படி? என்ற கேள்விதான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.



2. ஜியோ போன் புக் செய்வது எப்படி?

சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மலிவு விலை போன்கள் விற்பனைக்கு வருமென அறிவிக்கப்பட்டது. இந்த போன்களை வாங்க வேண்டுமென்றால் முன்கூட்டியே புக் செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்ததால், பலருக்கு அதுபற்றிய வழிமுறைகள் தெரியவில்லை. தற்போதுவரை கிட்டத்தட்ட 14 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதாக கணக்கு காட்டுகிறது ரிலையன்ஸ் நிறுவனம். செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. பிட்காயின்களை இந்தியாவில் வாங்குவது எப்படி?

பிட்காயின் என்பது ஒருவகையான டிஜிட்டல் பணம். ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் இந்த வகை பணம் 16 மடங்கு பிரதிபலன்களைப் பெற்றுத்தரும் என சொல்லப்படுகிறது. உலகில் ஆயிரக்கணக்கான கிரிப்டோ கரன்சிக்கள் இருந்தாலும், பிட்காயின்கள் மட்டுமே மிகப் பிரபலமானவையாக பார்க்கப்படுகின்றன. இதை எப்படி வாங்குவது என்பதைத்தான் மாங்குமாங்கென்று தேடியிருக்கிறார்கள் இந்தியர்கள். ஏற்கெனவே, சுவிஸ் வங்கி சவால்களில் திணறிக்கொண்டிருக்கும் பிரதமருக்கு, பிட்காயின்கள் கூடுதல் சாவல்களைக் கொடுக்குமா பொருத்திருந்து பார்ப்போம்.

4. மொபைல்போன்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி?

ஸ்கிரீன்ஷாட் எடுப்பது என்பது ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் சர்வதேச பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் வன்பொருள், மென்பொருள் வடிவமைப்புகள் இருப்பதால், ஸ்கிரீன்ஷாட்டுகளை எடுப்பது பல சமயங்களில் குழப்பமான ஒன்றாக இருக்கிறது. யூடியூப்பில் இதுகுறித்து விளக்கமளிக்க 16 லட்சத்து 60 ஆயிரம் வீடியோக்கள் இருக்கிறதென்றால் நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள் அது எவ்வளவு அத்தியாவசிய தேவை என்று.



5. முகத்தில் ஒட்டியிருக்கும் ஹோலி பவுடரை நீக்குவது எப்படி?

இந்தியாவில் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றுதான் ‘ஹோலி’. வண்ணப்பவுடர்களை முகத்தில் பூசி விளையாடும் வழக்கமும் இந்த பண்டிகையில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வண்ணப் பொடிகளை கவனமாக எப்படி கையாளுவது என்ற தேடல்கள் கூகுளில் அதிகமாக இருப்பது வழக்கம். இந்தாண்டு முகத்தில் ஒட்டியிருக்கும் ஹோலி பவுடரை நீக்குவது எப்படி என தேடியிருக்கிறார்கள் இந்தியர்கள்.

6. ஜிஎஸ்டி தாக்கல் செய்வது எப்படி?

மிகப்பெரிய வரிச்சீர்திருத்தம் என பல பில்டப்புகளைச் சொல்லி சமீபத்தில் மத்திய அரசால் அமல்ப்படுத்தப்பட்டது ஜி.எஸ்.டி. சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் இந்த ஜி.எஸ்.டி. வரித்தாக்கல் செய்வது எப்படி என எக்கச்சக்கமான இந்தியர்கள் கூகுளில் தேடியிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் வரை 39 லட்சம் பேர் ஜி.எஸ்.டி வரித்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதே பிரச்சனையென்றால், ஜி.எஸ்.டி என்றாலே எங்களுக்கு தெரியாது என பல அமைச்சர்கள் முகம் சுழித்ததை எந்தக் கணக்கில் சேர்ப்பது.

7. மியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?

ஷேர் மார்க்கெட் எனப்படும் சந்தைகளில் சொந்தப் பணத்தை முதலீடு செய்து, நேரம் கிடைக்கும்போது அதிக லாபம் ஈட்டுவதில்தான், தற்போதைய சூழலில் சராசரி இந்தியர்களின் கவலை அடங்கியிருக்கிறது. எந்தெந்த நிறுவனங்களில், எவ்வெப்போது, எப்படி முதலீடு செய்வது என்பதை கூகுளிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் இந்தியர்கள் கில்லாடிகளாம்.



8. பிட்காயின்களை சொந்தமாக்குவது எப்படி?

முதலீடு செய்வது அனைத்துகாலத்திற்குமான வியாபாரத் தந்திரமாக பார்க்கப்படுகிறது. தங்கம், நகை, ஷேர் மார்க்கெட் என்ற காலங்கள் போய் இன்று பிட்காயினில் வந்து நிற்கின்றனர் இந்தியர்கள்.

9. பிக் பாஸ் சீசன் 11 பிரபலங்களுக்கு வாக்களிப்பது எப்படி?

எண்டிமால் நிறுவனத்தின் உருவாக்கமான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியர்களையும் விட்டுவைக்கவில்லை. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை திரையில் கொண்டுவந்து, அவர்கள் மீதான நேரடியான அபிப்ராயங்களை ரசிகர்களுக்கு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு ஓட்டு போடுவது குறித்துதான் இந்தியர்கள் அதிகம் தேடியிருக்கிறார்கள். 2 கோடி வாக்குகளை ஓவியாவிற்காக பதிவுசெய்து அன்புமணியையே அதிரவைத்த தமிழர்களிடம் கேட்டிருக்கலாமே.. எப்படி ஓட்டு போடுவது என்று.

10. இந்தியாவில் எத்தீரியம் (Ethereum) வாங்குவது எப்படி?

கிரிப்டோகரன்சிக்களின் வரிசையில் பிட்காயின்களைவிட அதிக மதிப்பை எத்தீரியம் கிரிப்டோகரன்சிக்கள் வழங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த எத்தீரியம் அதிகளவில் பிரபலமாகி வருவதும் கருத்தில் கொள்ளவேண்டியது. இதை எப்படி இந்தியாவில் வாங்குவது என்பது பற்றிதான் இந்தியர்கள் தேடியிருக்கிறார்கள்.



கூகுளிடம் கேட்கக்கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டு, அதைக் கலங்கடிப்பது மாதிரியான மீம்ஸ்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களை கிரங்கடித்தன. அந்த வகை மீம்ஸ்கள் நீண்ட காலம் டிரெண்டிங்கில் இருந்ததென்றால், எந்தளவுக்கு கூகுள் இன்னல்களைச் சந்தித்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இது ஒருபுறமிருக்க பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றபோது, அவரின் சாதி என்ன என்பதையும் பெரும்பாலான இந்தியர்கள் தேடியதாக கூகுள் நிறுவனம் தகவல் வெளியிட்டது. முன்னேற்றப் பாதையில் அனைவரையும் அழைத்துச் சென்று, ஆரோக்கியமான வாழ்க்கை அமைய அறிவியலைப் பயன்படுத்தினால் எந்நாளும் கொண்டாட்டமே.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்