Skip to main content

“தோல்வி நிரந்தரமாகிவிடும்; தூக்கி நிறுத்துங்கள்!” -அதிமுக தொண்டன் ‘ஸ்கேன்!’

indiraprojects-large indiraprojects-mobile

 

தமிழகத்தின் அரசியலைக் கரைத்துக்குடித்த அவர் இன்றுவரையிலும் அதிமுகவில் ஒரு அடிமட்டத் தொண்டர்தான். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர்,  அவ்வப்போது, நடப்பு அரசியலை நம்மிடம் பகிர்ந்துகொள்வார். மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து “மனக்குமுறல் நிறைய இருக்கிறது. கொட்டித் தீர்க்க வேண்டும்.’ என்று நம்மைத் தொடர்ந்து அழைத்தபடியே இருந்தார். அவரைச் சந்தித்தோம். 


“அதிமுக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை. கோர்வையாக எனக்குச் சொல்ல வராது. முதலில் குறித்துக்கொள்ளுங்கள்.” என்று குமுறலை வெளிப்படுத்தினார். அந்த அதிமுக அடிமட்டத் தொண்டரின் ஆதங்கம் இதோ – 

m

 

என்ன நடந்தாலும் இரட்டை இலைதான்! 

“எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நான்  எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தேன். பின், அவருடைய மன்றத்தில் இணைந்தேன். மன்றத்தின் வளர்ச்சிக்காக உழைத்தேன். எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கிய பின், என்னைப் போன்ற கோடிக்கணக்கானோர், எதையுமே எதிர்பார்க்காமல் அவருடைய கட்சியில் இணைந்தோம். கட்சி வளர்ச்சிக்காக, அடிமட்டத் தொண்டர்களாக நிறைய பணியாற்றினோம். அரசியலில் என்ன மாற்றம் நடந்தாலும், காலம் காலமாக நான் மட்டுமல்ல,  என்னைப் போல் உள்ள லட்சோபலட்சம் தொண்டர்களின் குடும்பங்களும் இரட்டை இலையைத் தவிர வேறு கட்சி சின்னத்துக்கு ஓட்டுப் போட்டதில்லை. 

 

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், திக்குத் தெரியாமல் கட்சி போய்விடுமோ என்று அச்சப்பட்டோம். ஆனால், ஆபத்பாந்தவனாக வந்து நின்னாங்க ஜெயலலிதா.  இயக்கம் பிளவுபட்டது. ஆனாலும்,  பிளவுபட்ட இயக்கம், பின்னாளில் இணைந்தது. அப்போது ஆனந்தக் கூத்தாடி அகமகிழ்ந்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஜெயலலிதாவுக்குப் பிறகு,  இந்த  இயக்கம் சுயநலக் கும்பலின் கரங்களுக்குச் சென்றது. அதை, மீட்டெடுப்பதற்கு,  இன்னொரு ஆபத்பாந்தவனை ஜெயலலிதா ஆன்மா அனுப்பாதா? என்று ஏங்கிக் கிடந்த ஒன்றரைக் கோடித் தொண்டர்களில் நானும் ஒருவன். 

 

மீட்கப்பட்டது; முறியடிக்கப்பட்டது!

முதலில் சுயநலக் கும்பலுக்கு, பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகிய நீங்கள் இருவரும் அடிபணிந்தீர்கள். இருந்தாலும்,  சிறிது காலத்திலேயே,  அடிமைப் பெண் எம்.ஜி.ஆரைப் போல நிமிர்ந்து நின்று, சசிகலா கும்பலிடம் இருந்து இந்த இயக்கத்தை மீட்டு விட்டீர்கள். சாதாரணத் தொண்டர்களாக இருந்து, கட்சியில், படிப்படியாக வளர்ந்தவர்கள்தான் நீங்கள் இருவரும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்; ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர். கட்சியில் இருவருக்கும் முக்கிய பொறுப்புகள்; கட்சியை வழி நடத்தும் பொறுப்புகள். இந்த நிலை உருவானதும், நாங்களே பதவிக்கு வந்து விட்டது போன்ற உணர்வில் மகிழ்ந்தோம். அ.தி.மு.க. என்னும் ஆலமர கட்சியில் மட்டும்தான், சாதாரண தொண்டனும் உயர் பொறுப்புகளுக்கு வர முடியும் என்பதை, மீண்டும் ஒரு முறை தாங்கள் இருவரும் ஒருங்கிணைப்பாளர்; இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புக்கு வந்து நிரூபித்துவிட்டீர்கள்.


இருந்த போதும், இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று, துரத்தியடிக்கப்பட்ட சசிகலா கும்பல், பண பலத்தாலும், குறுக்கு எண்ணத்தாலும், தொடர்ந்து முயற்சித்தது. இருந்தாலும், தங்கள் இருவரின் சாதுர்யத்தாலும், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் தொண்டர்களின் பலத்தாலும், அவையெல்லாம் முறியடிக்கப்பட்டன. 

இந்தச் சமயத்தில்தான், கட்சிக்கு சோதனை வைப்பது போல, லோக்சபா தேர்தல் வந்தது.  நம்மை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, சசிகலா கும்பல்,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில், ஜெயலலிதாவின் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி, தேர்தல் களத்தைச் சந்தித்தது. 

 

தோற்றாலும் ஆறுதல் அடைந்தோம்!

குறிப்பிட்ட இன மக்களை மட்டுமே நம்பி நின்ற சசிகலா கும்பல், அவர்களை வைத்து எப்படியும் கரையேறிவிடுவோம் என நம்பினர். அந்தக் குறிப்பிட்ட இனம் அதிகமாக இருக்கும் சில பகுதிகளில் மட்டுமே, குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஓட்டுக்களை அவர்கள் பெற்றனரே தவிர, அவர்களால், களத்தில் இரட்டை இலையை வீழ்த்தி வெற்றி பெற முடியவில்லை. இதற்குக் காரணம், அ.தி.மு.க.,வின் ஆணி வேராக இருக்கும் அடிமட்டத் தொண்டர்கள் அத்தனை பேரும், அ.தி.மு.க.,வை காப்பாற்ற ஓட்டளித்ததுதான். ஆனாலும், வெற்றி விளிம்புக்கு இரட்டை இலையால் செல்ல முடியவில்லை; அது தான்  வேதனை. பூலாவரி சுகுமாரன், வத்தலக்குண்டு ஆறுமுகம், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் போன்றோரின் குருதியில் பூத்த மலர்தான் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை அழிக்க, சுயநலக் கும்பலான சசிகலா கும்பலால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே, மாபெரும் வெற்றிதான். இப்படிச் சொல்வதைவிட,  பெரும் ஆறுதல் என்று கூறமுடியும்.  

 

தோல்வியின் போதெல்லாம் ஜெயலலிதா!

இந்தத் தேர்தல் தோல்விக்குப் பின், நாம் முழுமையான சுய பரிசோதனை மேற்கொள்ளத் தயாராகி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதெல்லாவற்றையும் புறம் தள்ளி வைத்து விட்டு, அதைத்தான் நாம் செய்திருக்க வேண்டும். இப்படித்தான், கடந்த காலங்களில் நடந்துள்ளது. கட்சிக்கு தேர்தல் களத்தில் தோல்வி என்ற சோதனை வரும்போதெல்லாம், இதுதான் நடந்திருக்கிறது. 1996-ல், மிக மோசமான தோல்வியை அ.தி.மு.க., சந்தித்தது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஜெயலலிதா.  தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி, படு தோல்வியைச் சந்தித்தது.  அவர் சற்றும் தாமதிக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யத் துவங்கினார். கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியையும் சென்னைக்கு வரவழைத்து, தனித்தனியாகக் கேட்டறிந்தார். சென்னை, வட பழனி,  விஜய சேஷ மகாலில்தான், இந்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. 

 

k

 

அதோடு அவர்  நிறுத்தவில்லை. கட்சியின் மூத்த தலைவராக இருந்த கே.ஏ.கிருஷ்ணசாமியை, தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து, தொண்டர்களைச் சந்தித்துப் பேசச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை அறிந்து வந்து, தோல்விக்கான காரணங்களைச் சொன்னார் கிருஷ்ணசாமி.  வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சசிகலா கும்பல்   நடத்திய ஆடம்பரத் திருமணமும், அந்தக் கும்பல் தமிழகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போட்ட ஆட்டமும்தான் தோல்விக்கான காரணம் என, வெளிப்படையாக ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை ஜெயலலிதாவும் அறிந்து கொண்டார்.  பின்,  1999-ல் லோக்சபா தேர்தல் வந்தது. அப்போதும் கட்சிக்குப் பெரும் பின்னடைவுதான். இம்முறையும், தோல்விக்கான காரணத்தை அறிய முயன்றார் ஜெயலலிதா. சென்னை, கிண்டி, டான்சி வளாகத்தில் வைத்து கட்சிக்காரர்களைச் சந்தித்தார். தொகுதிவாரியாக தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டன. கழக நிர்வாகிகளிடம் நேரடியாகவே கேட்டறிந்தார் ஜெயலலிதா. 

 

அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன!

2004-ல் நடந்த லோக்சபா தேர்தலில், நாற்பதுக்கு நாற்பதும் தோல்வி. இந்தத் தோல்விக்குப் பின்னும், ஜெயலலிதா தோல்வியை நினைத்து மூலையில் முடங்கி விடவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, கழகத்தை மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். மிகவும் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கோபிச்செட்டிபாளையம் என்.ஆர்.கோவிந்தராஜர், நாமக்கல் அன்பழகன், பெரியகுளம் தினகரன் போன்றவர்களுக்கு  ராஜ்யசபா உறுப்பினர் பொறுப்புகளை வழங்கினார். அமைச்சர்களிடம் குவிந்து கிடந்த அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. இதனால், புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, கட்சி மீண்டும் வலிமையையும்,  பொலிவையும் பெற்றது. 

 

 

இதனாலேயே, 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., அமைத்த மெகா கூட்டணியையும் மீறி, அ.தி.மு.க.,வால்  68 இடங்களை வெல்ல முடிந்தது. தி.மு.க., ஆட்சிப் பொறுப்புக்கு வந்தாலும், ஐந்தாண்டு காலமும், அக்கட்சியால், தமிழகத்தில் மைனாரிட்டி நிலையிலேயே ஆட்சிப் பொறுப்பில் இருக்க முடிந்தது. இப்படியொரு இக்கட்டை, தி.மு.க.,வுக்கு ஏற்படுத்தி, தமிழகத்தில் அ.தி.மு.க.,வை பிரதான கட்சி என்ற அந்தஸ்துடனேயே இருக்க வைத்திருந்தார் ஜெயலலிதா.  தான்  மறையும் வரையில், தமிழகத்தில்  மிகப் பெரிய ஆளுமைக்குச் சொந்தக்காரராக இருந்தவர் ஜெயலலிதா. அவரே, ஒவ்வொரு முறையும் கட்சிக்கு தோல்வியும்; சோதனையும் வரும்போது,   அதற்கான காரணங்களைக் கண்டறிந்து,  சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். இது வரலாறு. ஒவ்வொரு முறையும், அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்திருப்பதை விரும்பாத ஜெயலலிதா,  தொடர்ந்து அதிகாரங்களைப் பரவலாக்கிக் கொண்டே வந்தார். 

 

ஜெயலலிதாவைக் காட்டிலும் கூடுதல் ஆளுமை உடையவர்களா?

இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான தோல்விக்கு என்ன காரணம்? இதை அறிந்து அதைக் களைய வேண்டாமா? இது குறித்து, பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய நீங்கள் இருவரும், சிந்திக்கக்கூட நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இது நியாயமா? ஜெயலலிதாவை விட கூடுதல் ஆளுமையோடு இருவரும் இருக்கிறோம் என்ற எண்ணம் உங்களை ஆட்கொண்டு விட்டதோ, என்ற எண்ணம்தான், தற்போதைய சூழலை ஆழ்ந்து கவனிக்கும் என்னைப் போன்ற ஒவ்வொரு தொண்டனுக்கும் ஏற்படுகிறது.  இந்தத் தேர்தலில், இவ்வளவு மோசமான தோல்வியை கட்சி சந்தித்ததற்கு உங்கள் இருவரைச் சுற்றிலும் உள்ள சுயநலக் கும்பல்கள், என்ன காரணத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததுதான், இந்த மோசமான தோல்விக்குக் காரணம் என்று அவர்கள் கூறுவதாக அறிகிறோம்.

 

துறைகள் அனைத்திலும் தலைவிரித்தாடும் லஞ்சம்!

 

உண்மையான நிலை அதுவல்ல. தற்போதைய அ.தி.மு.க., ஆட்சி மீது, மக்களுக்கு எந்த விதத்திலும் நல்ல அபிப்ராயம் இல்லை. ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த கோபம்தான், இரட்டை இலை இருந்தும், அ.தி.மு.க., என்னும் ஆலமரம் சாய்ந்திருக்கிறது.  இதை, என்னைப் போன்றவர்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டுமென்று அவசியமில்லை.  உங்கள் உள் மனதுக்கு நிச்சயம் தெரியும். அரசின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, பொதுமக்களின் அன்றாடத் தேவையாக இருக்கும் சுகாதாரத் துறை சுகாதாரமற்று பயணிக்கிறது.  எல்லா நிலைகளிலும் லஞ்சம் நீக்கமற நிறைந்திருக்கிறது. எல்லாத் துறைகளுமே அப்படித்தான் செயல்படுகிறது.  முதல்வர், துணை முதல்வர் என்ற பெரிய அந்தஸ்தில் இருக்கும் உங்கள் இருவரையும் கூட, எளிதில் சந்தித்து விடலாம். ஆனால், துறைகளின் அமைச்சர்களாக இருப்பவர்களை, என்னைப் போன்ற கட்சியின் நீண்ட கால தொண்டன்கூட சந்திக்க முடியவில்லை. 

 

இரும்புத்திரைக்குப் பின்னால் அமைச்சர்கள்!

பணம் கொடுத்தால் மட்டுமே, இந்த ஆட்சியில் காரியம் சாதிக்க முடியும் என்ற அவலமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும், புரோக்கர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.  இதற்குத்தான், லட்சோபலட்சம் தொண்டர்கள் இணைந்து இந்த இயக்கம் நீண்ட காலம் நிலைக்கப் பாடுபட்டார்களா? தொண்டர்களாலும், கழக நிர்வாகிகளாலும்  கூட எளிதில் அணுக முடியாத ஒரு இரும்புத் திரையை, அமைச்சர்கள் போட்டு வைத்திருப்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அதுவும் கூட ஒரு அவலமான நிலைதான்.  அதுமட்டுமல்ல,  கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைப் புறக்கணிக்கும் இவர்கள் அனைவரும் தி.மு.க.,வுடன் ரகசியக் கூட்டணி வைத்துள்ளனரே? அந்த விவரங்களாவது, உங்கள் இருவருக்கும் தெரியுமா? லஞ்ச - லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போலத்தானே, வருமானவரித்துறை, அமைச்சர்கள் இல்லங்களிலும், தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்திச் சென்றது? அப்போது கூட, உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. மாறாக, ஊழலில் ஊறித் திளைக்கும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் காப்பாற்றவே முயன்றீர்கள்.

 

திமுகவுக்கு ஏற்பட்ட நிலைதான் அதிமுகவுக்கும்!

இதெல்லாம் கட்சிக்குள் பெரும் புகைச்சலாகக் கிளம்பிய போது, அதை நாங்கள் நம்ப மறுத்தோம். ஆனால், கட்சி இன்று பெரும் தோல்வியை சந்தித்த பின்னும், நீங்கள் இருவரும் தொடர்ந்து அமைதி காட்டுகிறீர்களே? அதுதான், நடந்ததையெல்லாம் நிஜம் என்று எங்கள் முகத்தில் அறைகிறது. தி.மு.க., ஆட்சியில், அமைச்சர்கள் கோடிகளைக் குவித்து,  சிற்றரசர்களைப் போல் வலம் வந்தார்கள் என்று நாம்தானே  அவர்களைக் குற்றம் சாட்டினோம். அது மக்கள் மனதில் பதிந்து, அந்த ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியது. அதனால்,  அந்த ஆட்சிக்கும், தி.மு.க.வுக்கும் எதிராக மக்கள் கொந்தளித்தனர். ஆனால், இன்று நடப்பது என்ன? தற்போதைய தமிழக அமைச்சரவையில் அமைச்சர்கள் பலரும், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெறப் போகின்றனர் என்ற எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களைப் புறம்தள்ள முடியவில்லை. இதே நிலை நீடித்தால், தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்பட எவ்வளவு நேரம் பிடிக்கும்?

 

தோல்விக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை!

மிகமிக சாமான்யர்களாக இருந்துதான், தற்போதைய உயர்ந்த நிலையை எட்டியிருக்கும் நீங்கள் இருவரும், அ.தி.மு.க. என்னும் ஆலமரம், அழிவின் விளிம்பில் நிற்பதை அறிந்து, அதில் இருந்து காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை இன்னும் எங்களுக்கு உள்ளது.  தமிழகம் முழுவதும் கட்சி, மிகப் பெரிய தோல்வியை சந்தித்தபோதும், தேனியில் மட்டும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருக்கிறார். இது நமக்கான ஆறுதல் வெற்றி. ஆனால், அதே தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறோம். அது யாருடைய கவனக்குறைவு? அல்லது உள்ளடி வேலையா? இதைக் கண்டறிந்து களைய வேண்டாமா? கழகத்துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஏற்கனவே அவரது சொந்தத் தொகுதியான ஒரத்தநாட்டில் 2016-ல் தோல்வி அடைந்தார். தற்போது, அவரது சொந்த மாவட்டமான தஞ்சாவூரில் இருக்கும் தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், அவரது தீவிர ஆதரவாளரான காந்தியை நிறுத்தியும், கட்சிக்கு படு தோல்வி. இதற்கு யார் காரணம்? கண்டறிய வேண்டாமா?

 

திருவாரூர் திமுக தலைவர்  கருணாநிதியின் சொந்த ஊர். அந்த ஊரில் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் அவர் வென்றார். அவரது மறைவுக்குப் பின் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் நிறுத்தப்பட்ட பூண்டி கலைவாணன், கருணாநிதியைக் காட்டிலும் கூடுதல் ஓட்டு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அப்படியென்றால், திருவாரூரில் நடந்தது என்ன? யோசிக்க வேண்டாமா? தோல்விக்கு யார் மீது நடவடிக்கை? அந்த மாவட்ட அமைச்சர் ஆர்.காமராஜ் இதற்கு பொறுப்பேற்க வேண்டாமா? அ.தி.மு.க., 1973-ல், முதன் முதலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து வென்ற தொகுதி - திண்டுக்கல் லோக்சபா தொகுதி. அதனாலேயே, திண்டுக்கல்லை, புண்ணிய பூமியாக அ.தி.மு.க.,வின் ஒவ்வொரு தொண்டனும் நினைக்கிறான். ஆனால், அங்கே கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டவர் படு மோசமான தோல்வியை அடைந்திருக்கிறார். எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.,வின் வேலுச்சாமி, ஐந்தே கால் லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் ஓட்டு வித்தியாசம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். 

 

s

 

இதற்குக் காரணம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆகியோருக்கு இடையே நடக்கும் பனிப்போர்தான் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அவர்களுக்கு எதிராக எப்போது சாட்டையைச் சுழற்றுவீர்கள்? திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்ட கழக வேட்பாளர் முனியாண்டி, கட்சியின் அடிமட்டத் தொண்டர். அவர், அங்கே வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால், அங்கே ராஜன் செல்லப்பா, அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரிடையே நடந்த கருத்து மோதலால், கட்சி தோல்வி அடைந்திருக்கிறது.   அதேபோல், சென்னை பெரம்பூரில் தோல்வி. காரணம், அமைச்சர் ஜெயக்குமார். அதுபோல வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளின் மிகமோசமான தோல்விக்கு காரணம் அமைச்சர்கள் கே.சி.வீரமணியும் நிலோபர்கபீலும்தான். இங்கும் கோஷ்டிப் பூசலாலேயே கட்சிக்கு தோல்வி.   காரணமான இவர்கள் மீது எடுக்கவிருக்கும் நடவடிக்கை என்ன?

 

w

 

அதிமுகவை விட்டு விலகிச்சென்ற வாக்கு வங்கி!

கட்சியில், ஜாதி-மதம் என்று பார்க்காமல், அனைவருக்கும் பதவிகளை வாரி வழங்கியவர் ஜெயலலிதா.  ஆனால், சசிகலாவின் ஆதிக்கம் அதிகமான பிறகு, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கே ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். இருந்தாலும், அவர்களையெல்லாம் ஓரளவுக்கு அடக்கியே வைத்திருந்தார் ஜெயலலிதா.  சசிகலா கும்பல் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியதால், ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்த தலித் ஓட்டு வங்கி, முழுமையாக நம்மை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த நிஜத்தை அறிந்த பிறகாவது, தலித் ஓட்டுக்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இந்தத் தேர்தலில், சசிகலா ஆதரவு நிலை எடுத்தவர்கள் மட்டுமே, அக்கும்பல் நடத்தும் கட்சியைத் தாங்கிப் பிடித்தனர்.  சசிகலா ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி போன்ற தொகுதிகளில் மட்டும், அ.ம.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் ஓட்டுக்கள் வரை பெற்றனர். மற்ற தொகுதிகளில் சொல்லிக் கொள்ளும்படியான ஓட்டுக்களை அவர்கள் பெறவில்லை. இது நமக்கான ஆறுதல். 

 

ஆனால், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள், முழுமையாக தினகரன் பக்கம் நிற்பார்களேயானால், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு, நம் அமைச்சரவையில் ஏன் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்?, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் எட்டு அமைச்சர்கள் வரையில் கொடுத்திருப்பது ஏன்? இனியாவது, அந்த நிலையை மாற்ற வேண்டாமா? இப்படிப்பட்ட அமைச்சர்கள் சிலர்தான், தேர்தல் நேரத்தில், அ.ம.மு.க.,வுக்கு, மறைமுகமாக நிதி அளித்ததோடு, தேர்தல் வேலையும் பார்த்தனர் என்பதை, இன்னுமா உளவுத்துறையினர் உங்களுக்குச் சொல்லவில்லை?  எம்.ஜி.ஆர்., காலம் முதற்கொண்டு, இன்று வரையிலும், பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வருபவர் தம்பிதுரை. அவராலேயே, கொங்கு பகுதியில் பெரிய அளவிலான தோல்வி கிடைத்திருக்கிறது. அவரால் கட்சிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அவரே நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். இனியும் ஏன் அவரைப் போன்றோருக்கு ஓய்வளிக்கக் கூடாது?

 

முகம் சுளிக்க வைக்கும் தலைவர்கள்!

விரைவில் ராஜ்யசபாவுக்கான தேர்தல் வரவிருக்கிறது. கட்சிக்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் தகுதியான நபர்களாகப் பார்த்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதைவிடுத்து, பணம் உள்ளவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்றால், கட்சிக்கு தோல்வி என்பது நிரந்தரமாகிவிடும். கட்சி, படு பாதாளத்தில் இருக்கும் இந்த நிலையில், அதைத் தூக்கி நிறுத்துவதற்கான எந்த முயற்சியும் யாராலும் எடுக்கப்படவில்லை. ஆனால், இன்னாருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று, டில்லிக்கு ஆளாளுக்கு காவடி எடுப்பது தொண்டர்களாகிய எங்களை முகம் சுளிக்க வைக்கிறது. பதவிகள் வரும்; போகும். ஆனால், கட்சி என்னும் ஆலமரம் இருந்தால்தான், எதுவுமே நடக்கும். இதை, இந்த நிலையிலாவது முதல்வர் மற்றும்  துணை முதல்வராக இருக்கும் தாங்கள் இருவரும் புரிந்து கொண்டு, கட்சியைத் தூக்கி நிறுத்தும் காரியங்களில் இறங்க வேண்டும். 

 

இல்லையென்றால், ரஜினி என்னும் புதிய சுனாமி(?)  தமிழக அரசியலுக்கு வரவிருக்கும் சூழ்நிலையில், அ.தி.மு.க., என்னும் ஓட்டைப் படகு, சுனாமி அலையால் வீழ்த்தப்பட்டு, படகு இருந்த சுவடே தெரியாமல் போய்விட நேரிடும்.  என்ன நடக்கப் போகிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்றாலும், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை, உண்மையான தொண்டர்களில் ஒருவனாக, கடைக் கோடியில் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.” என்று நீண்ட பெருமூச்சுவிட்டார். 


அதிமுக என்ற ஆலமரம் ஒரேயடியாகச் சாய்ந்துவிடக் கூடாது என்ற கவலை இவரைப் போன்ற தொண்டர்களை ரொம்பவே வாட்டி வதைக்கிறது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...