
உலகம் ஒன்றுதான். ஆனால், நாட்டுக்கு நாடு ஆட்சி முறையும், பொருளாதார நிலையும் வெவ்வேறாக இருக்கிறது. எண்ணெய் வளம்மிக்க சவுதி அரேபியா, உலக அளவில் பணக்கார நாடாகத் திகழ்கிறது. அதன் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மன்னர்களின் வாழ்க்கையோ பிரம்மிப்பாக இருக்கிறது. சவுதி கலாச்சாரம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிரட்சியானது. அங்கேயும் இப்போது ‘மாற்றம்’ தென்படுகிறது.
கட்டுப்பாடுகள் தளர்கின்றன!
90 வயதில் காலமானார் சவுதி அரேபியாவின் 6-வது மன்னர் அப்துல்லா. அதன் பிறகு, 7-வது மன்னராகப் பதவியேற்றார் சல்மான் பின் அப்துல் அஜீஸ். இப்போது அவருக்கு வயது 81. அவரது மகன் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வயது 32தான் ஆகிறது. இவர், மன்னரான தன் தந்தையின் ஆசியுடன், சவுதி அரேபியாவில் பல அதிரடிகளைச் செய்து வருகிறார்.
இஸ்லாமிய வகாபிய கொள்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் சவுதி அரேபியாவில், ஆண்களும் பெண்களும் பொதுஇடங்களில் பழகுவதற்குத் தடை இருக்கிறது. போக்குவரத்தோ, பொழுதுபோக்கோ, எங்கும் ஆண்களையும் பெண்களையும் பிரித்தே வைத்திருக்கின்றனர். சாப்பிடும்போது புர்காவால் தங்களின் முகத்தைப் பெண்கள் மறைத்துக்கொள்ள முடியாது என்பதால், ஹோட்டல்களில் ஆண் துணையில்லாமல் பெண்களை அனுமதிப்பது இல்லை. ஹோட்டல்களில் குடும்பத்தினருடன் வருபவர்களையும் தனியாக வரும் ஆண்களையும் பிரித்தே வைத்திருக்கின்றனர். பெண்கள் தனியாக எங்கும் வெளியில் செல்லக்கூடாது. அந்த நாட்டின் சட்டங்கள் கடுமையானவை. உலகில் குற்றங்களுக்கு கடும்தண்டனை விதிக்கும் நாடுகளில் முதன்மையானது சவுதி. பலாத்காரம், கொலை, மதத்தை அவமதித்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல், போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு தலையைத் துண்டித்து மரணதண்டனை நிறைவேற்றுகின்றனர்.

பெண்களுக்கான சுதந்திரமும், உரிமைகளும் சவுதியில் கலாச்சாரத்தின் பெயரால் தடுக்கப்படுகின்றன என்று உலக நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், சவுதி பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்து, அமைச்சரவை குழுவுக்கு அறிக்கையும் அனுப்பி, சவுதி பெண்களின் விழிகளை விரிய வைத்திருக்கிறார் இளவரசர் சல்மான். மேலும், விஷன்-2030 திட்டத்தின் கீழ், 2018-ல் "சவுதியில் உள்ள மூன்று விளையாட்டு அரங்குகளிலும் பெண்களை அனுமதிப்போம்' என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சவுதி அரசு.
ஸ்டார் ஹோட்டலில் ராஜ கைதிகள்!
ஊழல் ஒழிப்புக்குழு ஏற்படுத்தி, சக இளவரசர்கள் 11 பேர், முன்னாள் அமைச்சர்கள் 12 பேர், தொழிலதிபர்கள் என 38 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித்பின் தலாலும் அடக்கம். அதிகார துஷ்பிரயோகம் செய்து, பொது மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு கமிஷன் செயல்படும் என்று முனைப்பு காட்ட ஆரம்பித்திருக்கிறது சவுதி அரச நிர்வாகம். ஆனாலும், சீர்திருத்தத்தில் இறங்கியிருக்கும் இளவரசர் சல்மானின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கின்றன.
ஆயிரக்கணக்கில் பெருகிவிட்ட மன்னர் குடும்பத்தினரிடையே நடக்கின்ற அரசியல் இது. தனக்கு எதிரானவர்களை ஓரம்கட்டிவிட்டு, அதிகாரப் போட்டியில் தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், வலுப்படுத்துவதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் இளவரசர். ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் மரணமடைந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனியும் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்று மாற்றுப் பொருளாதார விஷயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியிலேயே முடிந்தன. அமெரிக்க ஆதரவு இருந்தாலும் லெபனான், சிரியா, ஈரான், ஏமன் போன்ற அண்டைநாடுகளுடன் தொடந்து அவர் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருவது சவுதிக்கு நல்லதல்ல. கைது செய்யப்பட்ட இளவரசர்கள், ரியாத்தில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் என்கிற ஆடம்பர ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர். மன்னர் பரம்பரையில் வரும் தனது ரத்த சொந்தங்கள் என்பதால், சிறைவாசம் என்கிற பெயரில் அவர்களை ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்திருப்பது கேலிக்குரியது. கைதிகளே ஆனாலும் சொகுசு வாழ்க்கையை விட்டுவிட முடியாது என்பது, மன்னர் பரம்பரையினரின் ஆடம்பர வாழ்க்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.
இளவரசர்களின் இன்னொரு முகம்!
அல்வாலித்பின் தலாலும் ஓர் இளவரசரே. இவருக்கு வந்த வாழ்வைப் பாருங்களேன்! ரூ.2770 கோடி மதிப்பில், "பறக்கும் அரண்மனை' என்று சொல்லப்படும் விமானம் இவரிடம் உண்டு. அந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப்பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதிநவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளைக் கொண்ட மீட்டிங் ஹால், ரோல்ஸ்ராய் கார் நிறுத்தும் சொகுசு அறை என அத்தனையும் உண்டு. ரியாத்தில் உள்ள இவரது மாளிகையில் 420 அறைகள் உள்ளன. 5 செயற்கை ஏரிகளை உருவாக்கி வைத்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் இவருக்கு 26-வது இடம் என்று பட்டியல் வெளியிட்டது "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை. அவ்வளவுதான் கொதித்தெழுந்துவிட்டார் அல்வாலித் பின் தலால். தனது சொத்து மதிப்பை எப்படிக் குறைத்து மதிப்பிடலாம் என்று "ஃபோர்ப்ஸ்' பத்திரிகை ஆசிரியர் ராண்டால் லேன், கட்டுரையாளர் கெர்ரி டோலன் மீது வழக்கே தொடர்ந்துவிட்டார்.
ஷரியத் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தி வரும் சவுதி மன்னர்களின் வாழ்க்கை அதற்கு நேர்மாறாக இருக்கிறது. சவுதி அரண்மனைச் சுவர்களைத் தாண்டி எந்த ரகசியமும் வெளிவந்துவிடாது என்றாலும், அவ்வப்போது சவுதி இளவரசர்களின் இன்னொரு முகத்தை தோலுரிக்கும் சம்பவங்களும் நடந்துவிடுகின்றன.
அமெரிக்கா -லாஸ் ஏஞ்சல்ஸில் பெவர்லி ஹில்ஸ் என்னும் இடத்தில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் இருந்து ரத்தக்காயங்களுடன் தப்பி வந்த ஓர் இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தங்களை பலாத்காரம் செய்துவிட்டதாக மேலும் நான்கு பெண்களிடமிருந்து இதே ரீதியிலான புகார்கள் வர, அந்த நபரையும் அவருடன் இருந்த 20 பேரையும் கைது செய்தனர். அந்த நபர் வேறு யாருமல்ல... சவுதி இளவரசர் மஜித் அப்துல்அஜீஸ் அல்சவுத் ஆவார்.
இளவரசிகளுக்கும் சுதந்திரமில்லை!
மறைந்த மன்னர் அப்துல்லா தனது மகன்களான சாஹர், ஜவஹர், ஹலா, மஹா நால்வரையும் வீட்டுச் சிறைபோல ஏறத்தாழ 10 ஆண்டுகள் அரண்மனைக்குள்ளேயே வைத்திருந்தார். அந்த அவலநிலையை சமூக வலைத்தளம் மூலம் இளவரசிகள் வெளியிட்டனர். மன்னரின் மறைவுக்குப் பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி, இளவரசிகளுக்கு மருத்துவ சிகிச்சை கூட கிடைக்கவில்லை. இளவரசிகளின் நிலையை 2004-ல் "நியூயார்க் போஸ்ட்' வெளியிட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் என சவுதி இளவரசிகளுக்கான ஆதரவுக் குரல் பெருகியது.
மன்னர் பரம்பரையின் ஆடம்பரம்!
கிங் அப்துல்லாசிஸுக்கு மொத்தம் 22 மனைவிகள். இவர்கள் வழியாக 45 குழந்தைகள். இப்படித்தான் சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தினர் பல்லாயிரக்கணக்கில் உருவானார்கள். அப்துல்லாசிஸின் மகனும் இரண்டாம் அரசருமான கிங் சாத்துக்கு மகன்கள் மட்டும் 53 பேர். தோராயமாக, இந்தக் குடும்பத்திலிருந்து 15,000-க்கும் மேற்பட்ட இளவரசர்கள், இளவரசிகள் உருவானார்கள். இவர்களின் ஆடம்பர அரச வாழ்க்கைக்காக, சவுதி அரசாங்கம் ஒவ்வோர் இளவரசருக்கும் பெரும் தொகையைக் கொட்டிக் கொடுக்கிறது. அரசரின் நேரடி மகனென்றால், மாதம் ஒன்றுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவுக்காக வழங்கப்படுகிறது. பேரக்குழந்தைகளுக்கு மாதம்தோறும் 8 ஆயிரம் டாலர்கள் வரை கொடுக்கிறார்கள். மன்னர் வாரிசுகளுக்குத் திருமணம் நடந்தால், 3 மில்லியன் டாலர்கள் வரை அரண்மனை கட்டிக்கொள்வதற்காக திருமணப் பரிசாக வழங்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் மொத்த பட்ஜெட்டில், மன்னர் குடும்பத்தின் செலவுகளுக்காக மில்லியன் கணக்கில் டாலர்கள் ஒதுக்கப்படுகிறது. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எங்கும் எதிலும் முன்னுரிமை தரப்படுகிறது. இவர்களே எண்ணெய் நிறுவனங்களில் கவுரவ தலைவர்களாக இருக்கின்றனர்.
மக்கள் மது அருந்த தடை இருந்தாலும் அரண்மனையில் கிளப், பார் எல்லாம் உண்டு என்பதை சவுதி இளவரசர் ஒருவரே ஜீன்சேசன் என்ற புனைப்பெயரில் எழுதிய "இளவரசியின் டைரி' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கிளப்புகளில் இருந்த ஆண்களுக்கு இளம்பெண்கள் உதவியாக இருந்ததை எழுதியுள்ளார்.
மன்னர் எவ்வழியோ மக்களும் அவ்வழி’ என்னும் பழமொழிக்கு ஏற்ப, சவுதி ஷேக்குகளின் அத்துமீறலும் தொடரவே செய்கிறது. வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் அரேபிய ஷேக்குகள், இந்தியா, வங்காள தேசம், மலேசியா, இலங்கை, எகிப்து போன்ற நாடுகளுக்குப் பறக்கின்றனர். அங்கிருக்கும் ஏழை இஸ்லாமியப் பெண்களை பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்குகின்றனர். இஸ்லாமிய முறைப்படி திருமணமும் செய்து கொள்கின்றனர். அவர்களை அரேபியாவுக்கு அழைத்து வந்து, தங்களின் மனைவிமார்களின் வரிசையில் சேர்த்துக் கொள்கின்றனர். அந்த ஏழைப் பெண்கள் காலமெல்லாம் ஷேக்குகளின் வீட்டில் அடிமையாகவே வாழ்ந்து சாகின்றனர்.
இந்த நிலை மாறுமா? மன்னர் குடும்பத்தினரின் தேவையற்ற செலவுகளை ஊழல் ஒழிப்பிலும் பெண்ணுரிமை காப்பதிலும் முன்னுரிமை காட்டும் இளவரசர் சல்மான் கட்டுப்படுத்துவாரா? என்பதெல்லாம் சவுதி மக்களின் நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-சி.என்.இராமகிருஷ்ணன்