அக்கினிப் பரீட்சையில் மீண்டது திமுக!
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி இந்தியாவை உலுக்கியது ஒரு பிரச்சாரப் புயல்.
2ஜி அலைக்கற்றை வழக்கில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசுக்கு இழப்பு என்று மத்திய கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் வெளியிட்ட அறிக்கையை மையமாக வைத்தே அந்த புயல் சுழன்றடித்தது.
இந்த அறிக்கை இந்தியா முழுவதும் மிகப்பெரிய அரசியல் பூகம்பத்துக்கும் காரணமாக இருந்தது.

நிஜத்தில் இந்த விவகாரத்தின் பின்னணிதான் என்ன?
2ஜி அலைக்கற்றையை முதலில் வந்தோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல், ஏலம் விட்டிருந்தால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கும் என்பதுதான் தணிக்கையாளர் வினோத் ராயின் கணக்கு.
ஆனால், அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட்டுகள் என எல்லா எதிர்க்கட்சிகளும் இதை ஊழலாகவே சித்தரிக்கத் தொடங்கின. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் எதிரான அரசியலுக்காக பாஜகவும், மற்ற கட்சிகளும் இதை ஊதிப் பெரிதாக்கின. இந்த விஷயத்தில் அகில இந்திய மீடியாக்களும் தமிழக மீடியாக்களும் முக்கியமான பங்கை வகித்தன.
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை நூறு ரூபாய் நோட்டுக்களாக மாற்றி நூலில் கோர்த்தால் நிலாவுக்கு சென்று திரும்பலாம் என்கிற ரீதியில் இந்த பிரச்சாரம் மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
சுருக்கமாக சொல்லப்போனால், இழப்பு என்று காட்டப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயையும் அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது வீட்டுக்கு கொண்டுபோய் குவித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன.
முதலில் அரசுக்கு இழப்பு என்பதற்கும் ஊழல் என்பதற்குமான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, தமிழக அரசின் இலவச அரிசி திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். மத்திய தொகுப்பிலிருந்து கிலோவுக்கு சுமார் 10 ரூபாய் விலை கொடுத்து அரிசியை தமிழக அரசு வாங்குகிறது. அந்த அரிசியை குடும்பத்துக்கு 20 கிலோ என்ற விகிதத்தில் இலவசமாக கொடுக்கிறது. அதாவது குடும்பத்துக்கு மாதத்துக்கு 200 ரூபாய் என்ற அளவில் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஆனால், மக்கள் பயனடைகிறார்கள். இந்தத் தொகையை அரசுப் பொறுப்பில் உள்ள கட்சியின் ஊழலாக கூறினால் எப்படி தவறோ, அப்படியே 2ஜி அலைக்கற்றை விவகாரத்திலும் தவறாகும்.
அதாவது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முதலில் வந்தோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வினியோகித்ததால், ஏராளமான நிறுவனங்கள் இந்த அலைக்கற்றையை வாங்கி பயன்படுத்த முன்வந்தன. இதன்மூலமாக செல்போன் நிறுவனங்களுக்கு இடையே போட்டி கடுமையாகியது. அன்றைக்கு இருந்த அலைபேசிக் கட்டணங்கள் பல மடங்கு குறைந்தன. அலைபேசி உபயோகிப்பாளர்கள் 10 பைசா அளவில் பேச முடிந்தது என்ற வகையில் இதுவும் மக்கள் பயன்பாட்டுக்கான இழப்புதான் என்று ஆ.ராசா கூறினார்.
தொடக்கத்திலிருந்தே இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் எவ்வித பலனும் அடையவில்லை என்றே ஆ.ராசா உறுதியாக வாதாடினார். இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது இழப்பு 30 ஆயிரம் கோடி என்றே குறிப்பிட்டது. ஆ.ராசாவுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காமல் பலமுறை சிபிஐ வாய்தா வாங்கியது. அந்தச் சமயங்களில் நீதிபதி ஷைனி சிபிஐ வழக்கறிஞர்களை பலமுறை கடிந்துகொண்டார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட இந்த வழக்கு, மத்தியில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க உதவியது. தமிழகத்திலோ, 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் திமுகவை தோற்கடிக்க பயன்படுத்தப்பட்டது.

திமுகவுக்கு எதிரான மிகப்பெரிய களங்கமாகவும், கறையாகவும் நீடித்த இந்த வழக்கில் திமுக இப்போது விடுபட்டுள்ளது.
திமுக தனது வரலாற்றில் எத்தனையோ பொய் வழக்குகளையும் குற்றச்சாட்டுகளையும் சந்தித்திருக்கிறது.
சர்க்காரியா கமிஷன் முதல் 2ஜி வழக்குவரை, தான் சந்தித்த அத்தனை அக்கினிப் பரீட்சைகளிலும், திமுக சட்டரீதியாகவே வெற்றிபெற்றிருக்கிறது.
-ஆதனூர் சோழன்