Skip to main content

'அது போனமாசம்; இது இந்த மாசம்!' - தினகரன் வாய்ஸின் பின்னணி!



 

ttv stalin thiru



திமுக - காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக (2014 தேர்தலை தவிர) நீடித்து வருகிறது. இனியும் அந்த கூட்டணி நிலைத்து நிற்குமா? என திமுக, காங்கிரஸ் கட்சிகளின் இரண்டாம் நிலை தலைவர்களிடையே வாத-பிரதிவாதங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. 
 

 

 

திமுக மீது கசப்புணர்வுடன் இருந்து வந்த ராகுல்காந்தி, கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிறகு, திமுகவுடனான கூட்டணி நீடிக்க வேண்டும் என கவனம் செலுத்தி வருகிறார். இதன் பொருட்டு சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மு.க.ஸ்டாலினிடம் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ராகுல்காந்தி. 
 

மேலும், திமுக-காங்கிரஸ் பிரிந்து விடக்கூடாது என திமுகவின் கிச்சன் கேபினெட்டும் விரும்புகிறது. குறிப்பாக திமுகவின் ஓ.எம்.ஜி.குரூப் திட்டமிடுகிறது. ஆனால், கூட்டணி உறவு நீடிக்க, 'மரியாதைக்குரிய எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் ' என காங்கிரஸ் தலைமையும், 'கூட்டணி நீடிக்க வேண்டுமானால் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசு மாற்றப்பட வேண்டும்' என்று திமுக தலைமையும்  விரும்புகின்றன. இந்த விவகாரம் திருநாவுக்கரசுக்கு தெரிந்தே இருக்கிறது. 
 

இந்த நிலையில், கடந்த மாதம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, "திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தினகரனும் இணைய வேண்டும்"  என பதிலளித்திருந்தார் திருநாவுக்கரசு. இந்த பதிலால் டென்சனான தினகரன், "போகாத ஊருக்கு வழிச் சொல்கிறார் திருநாவுக்கரசு" என கடுமையாக பதிலடி தந்திருந்தார்.
 

திமுக கூட்டணியில் பத்தோடு பதினொன்றாக இருக்க முடியாது என்கிற கருத்தில்தான் தினகரன் அப்படி சொன்னார் என்கிறார் அ.ம.மு.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவர். கடந்த மாதம் அப்படிச் சொன்ன தினகரன் தற்போது, "திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் அதனுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார். 
 

 

 


தினகரனின் இந்த பேட்டியும் அரசியல் கட்சிகளிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது. தினகரன் வாய்ஸின் பின்னணி குறித்து விசாரித்தபோது, "நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்புகிறார் தினகரன். திருநாவுக்கரசுக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகியுள்ள தமிழக அரசு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதுகுறித்து எடப்பாடி ஆலோசித்து வருவதாகவும் தினகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 

 

 

அதன்படி, விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், குறிப்பிட்ட சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் அமைப்பு ரீதியான கட்டமைப்பில் அ.ம.மு.க.பின்தங்கி இருப்பதால் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் சொற்ப வாக்குகள் கூட வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் என்பதால், தென் மாவட்டங்களில் அமைப்பு ரீதியாக வாக்குகளை வைத்திருக்கும் காங்கிரசுடன் இணைவது தமக்கு பலன் தரும் என நம்வுகிறார் தினகரன். 
 

இந்த நம்பிக்கையை அவரிடம் விதைத்தவர் திருநாவுக்கரசு. அதனால்தான், காங்கிரசுடன் கூட்டணி வைக்க விரும்பும் தினகரன், தனது விருப்பத்தை வெளிப்படையாகச் சொல்லும்போதுதான், 'திமுக இல்லையெனில் வேறொரு கூட்டணி இருக்கிறது' என்கிற நம்பிக்கையில், தேர்தல் நேரத்தில் தனது சீட் பேரத்தை திமுகவுடன் அதிகரிக்க காங்கிரஸ் முயற்சிக்கும். இதற்கு திமுக சம்மதிக்காது. மாறாக, திமுக தரும் எண்ணிக்கையை காங்கிரசும் ஏற்காது. இதனால் கூட்டணி உடையும். அப்போது காங்கிரசுடன் நாம் கூட்டணி வைக்கலாம் என்கிற திட்டத்தில்தான் அப்படி வாய்ஸ் கொடுத்தார் தினகரன். 
 

மேலும், அவரது பேச்சின் பின்னணியில்,  நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் வரும்பட்சத்தில் நிச்சயம் தனது தலைமைக்கு திமுக நெருக்கடித் தரும் என நினைக்கும் திருநாவுக்கரசரின் யோசனையும் இருக்கிறது " என்று விவரிக்கின்றனர்.

 

 



 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க

சார்ந்த செய்திகள்