Child case CBCID Investigation begins

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி சென்று மிரட்டினார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி.ஜெயராமை காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்தனர். பூவை ஜெகன்மூர்த்தியிடமும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடமும் தொடர்ந்து துருவி துருவி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் குற்ற வழக்கில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தன்னை கைது செய்ய பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Advertisment

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “28 ஆண்டுகள் பணியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி மீது இதுபோன்ற நடவடிக்கையை அரசு எடுத்தது ஏன்?” என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், 'இந்த வழக்கில் தமக்கு தொடர்பு இல்லை என்ற கருத்தை மனுதாரர் ஏடிஜிபி ஜெயராம் தரப்பு முன்வைத்த நிலையில் அவருடைய வாதத்தை ஏற்று தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தது. 'விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பதாக சொன்ன பிறகும் ஏன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்' என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, 'ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான உரிய விரிவான விளக்கத்தை பதிலாக கொடுக்க வேண்டும்' என தமிழக காவல் துறைக்கும் தமிழக அரசிற்கும் சம்மன் பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் திரும்பப் பெறப்போவதில்லை எனத் தெரிவித்தது. இந்த விசாரணையின் போது உயர் அதிகாரிகள் மூலம் எந்த ஒரு பாதிப்பும் விசாரணையில் இருக்கக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை வழங்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் கைது உத்தரவுக்கும், தமிழக அரசு எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர்.

Child  case CBCID Investigation begins

Advertisment

இதனைத் தொடர்ந்து சிறுவன் கடத்தல் வழக்கை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கலாமே? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்குத் தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்த இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த கடத்தல் வழக்கு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை திருவாலங்காடு போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.