Skip to main content

"நக்கீரனால்தான் நிர்மலாதேவியின் தொடர்புகளை வெளிக்கொண்டுவர முடியும்" – அன்று பெற்றோர் வைத்த நம்பிக்கை! 

"நக்கீரன் நிருபரா சார்?" என்று அவர் என்னிடம் முதலில் பேசிய பொழுது அவரது குரலில் கவலையும் பதற்றமும் இருந்தது. கடந்த மார்ச் 27 நக்கீரன் இதழில் 'கோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்' என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கருவறைக்குள் பெண் பக்தர்களுடன் தவறான செயலில் ஈடுபட்டு சிசிடிவியால் மாட்டியும், விவகாரம் மறைக்கப்பட்டதை எழுதியிருந்தோம். அந்த செய்தியைப் பார்த்துதான் தனக்கு நம்பிக்கை வந்ததாகக் கூறினார் தொலைபேசியில் பேசியவர். "என்ன விஷயம் சொல்லுங்கள்" என்று நாம் சொன்னபின் அவர் கூறிய விஷயங்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இன்று தமிழகத்தையே கொதிக்க வைக்கும் அந்த விஷயத்தை முதலில் கேட்டபோது, அப்படி ஒரு ஷாக். கல்வித்துறையில், அதுவும் பெற்றோருக்கு அடுத்த இடத்தில் மாணவர்கள் வைத்திருக்கும் ஒரு பெண் பேராசிரியரே இப்படி ஒரு காரியத்தைச் செய்வாரா என்ற அதிர்ச்சிதான் அது.

 

Nirmala news


நான் அருப்புக்கோட்டை சென்றேன். மாணவி ஒருவரின் தந்தை என்று சொன்ன அவர், அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு வரச்சொல்லி, என்னைச் சந்தித்தார். எச்சரிக்கை உணர்வோ என்னவோ, வாட்ஸப்பில் அனுப்பாமல், அந்த 20 நிமிட ஆடியோவை ‘ஷேர்-இட்’ மூலம்    பகிர்ந்துகொண்டார். தனது பெயரோ, புகைப்படமோ வரக்கூடாது என்று நிபந்தனையும் விதித்தார். “என் மன பாரம் நீங்கிவிட்டது; இனி எல்லாவற்றையும் நக்கீரன் பார்த்துக்கொள்ளும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

 

nirmaladevi


அந்த ஆடியோவைக் கேட்டபோது, ஒன்று புரிந்தது. எந்த ஒரு இடத்திலும் தான் பேச வந்த விஷயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒரு வார்த்தை கூட தவறி வெளியிடாமல், அதே நேரம் பேச வந்ததை முழுதாகப் புரிய வைத்த நுட்பமான பேச்சு அது. 'ஆப்பர்ச்யூனிட்டி', 'எல்லா வகையிலும் பேக்போனா இருக்கும்' என்று ஆசை காட்டுவதாகட்டும், 'கவர்னர் லெவல் விவிஐபி', 'வைஸ் சான்ஸ்லர்னாலே பொலிட்டிக்கல் பேக்க்ரௌண்ட் இருக்கும்', 'வெளியில சொன்னா எல்லாத்துக்கும் நெகட்டிவாக ஆய்டும்' என்று மிரட்டுவதாகட்டும் இரண்டிலும் ஒரு சைலன்ட் கில்லராக செயல்பட்டிருந்தார் அவர். "இந்தக் காலத்துல நான் சொல்ற விசயம்லாம் ரொம்ப சாதாரணம்னு உங்களுக்கே தெரியும்" என்று அழகாக ப்ரெயின் வாஷ் செய்ய முயன்றார் அவர். அவ்வளவு நேரம் பொறுமையாகப் பேச முடிகிறது என்றால் இது முதல் முறை என்பதாகத் தோன்றவில்லை எனக்கு. எத்தனை மாணவிகளை இப்படி அணுகியிருப்பாரோ, எத்தனை பேர் வெளியில் சொல்ல பயந்து புழுங்கியிருப்பார்களோ என்று நினைத்து கோபம் வந்தது. வாழ்வில் எப்படியாவது முன்னேறிவிடலாம் என்று எண்ணி ஏழை மாணவிகள் பலர் படிக்கும் ஒரு கலை கல்லூரியில் அந்த ஏழ்மையை வைத்தே தவறான பாதைக்கு அழைக்கும் இந்தக் கேவலம் வெளிப்படுத்தப்பட வேண்டும், நிர்மலாதேவி உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் தோலுரிக்க வேண்டும் என்று தோன்றியது. 

 

vice chancellorஏப்ரல் 8 நக்கீரன் இதழில் 'கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை - ஆடியோ ஆதாரம்' என்ற தலைப்பில், நிர்மலாதேவி விவகாரத்தை  அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டோம். தொடர்ந்து,  "கல்வித்துறை கழுகுகளுக்கு மாணவிகளை இரையாக்கிட துடிக்கும் கல்லூரி பேராசிரியை! -அதிரவைக்கும் ஆடியோ ஆதாரம்!" என்ற பெயரில் நக்கீரன் வலைத்தளத்திலும் சற்று விரிவாக வெளியிட்டோம். மாணவிகளின் நலன் கருதி அவர்களது பெயர், கல்லூரியின் பெயர், ஊர் பெயர் என எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், தவறு செய்த பேராசிரியையை விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். கல்லூரி செயலாளர், பல்கலைக்கழக பதிவாளர், துணை வேந்தர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பினோம். ஒருவரும் பொறுப்பான பதில் சொல்லாமல் நழுவ அதையும் வெளியிட்டோம். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினோம். 

 

registrar


நக்கீரன் வெளியிட்ட செய்தி மெல்லப் பரவியது.  அனைத்து ஊடகங்களும் விவரங்களை நம்மிடமிருந்து பெற்று  விஷயத்தைப் பெரிதாக்கினர் ('ஃபர்ஸ்ட் ஆன்' என்ற பெருமையோடு, இருந்தாலும் நன்றி). தமிழகம் முழுவதும் பேசப்பட்டு, இது குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு, ஆளுநர் இதற்கென அவசரமாக பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து, அங்கு ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தைத் தட்டி என,  இந்த விஷயம் பெரிதாகி நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன, திருப்திதான். 

 

Hindu screenshot


இன்னும் அந்தத் தந்தையின்  குரல் நினைவில் இருக்கிறது. “அட, தேவ தேவா என்று கடவுளின் மீது பாரத்தைப் போட்டு, சஸ்பெண்ட் செய்துவிட்டால் சரியாகிவிடாது. நிர்மலா தேவியை விடவே கூடாது. பெரிய லெவலில் விசாரணை நடத்தி, எவ்வளவு பெரிய விவிஐபிக்களாக இருந்தாலும் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும்; கூண்டில் ஏற்ற வேண்டும்.” என்று பரிதவித்த குரல். இப்பொழுது  இன்னும் பெரிய கேள்விகள் இருக்கின்றன. 'தேவை என்று சொன்ன அந்த மூன்று முக்கியஸ்தர்கள் யார்? மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இவர் சுட்டிக்காட்டும் மாணவிகளுக்கு மட்டும் எவ்விதத்தில் முதுகெலும்பாக நடந்துகொள்ளும்? இதற்குப் பின் இருக்கும் பெரும் புள்ளிகளை வெளிக்கொண்டுவந்து உரிய தண்டனை வாங்கித்தர வேண்டுமே? நக்கீரன் களமிறங்கும். அதைச் செய்யும்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்