Skip to main content

தீபாவை விட மோசமா பா.ஜ.க?

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
தீபாவை விட மோசமா பா.ஜ.க? பிரபலம் கிடைக்காத ப்ராப்ளம்! 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை திமுக முதன்முதலில் அறிவித்தது. அந்தக் கட்சியைத் தொடர்ந்து தினகரன் போட்டியிடுவதும் உறுதி செய்யப்பட்டது. ஆளும் அதிமுக சார்பில் இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அணிகளுக்குள் மோதல் இருப்பதாக கூறப்பட்டது.



ஆனால், அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டு கடந்த இடைத்தேர்தலில் ஒபிஎஸ் தரப்பில் போட்டியிட்ட மதுசூதனனையே வேட்பாளராக அறிவித்தார்கள்.

இந்த வேட்பாளர்கள் மூவருமே வெள்ளிக்கிழமை மதியம் அரை மணிநேர இடைவெளி விட்டு அடுத்தடுத்து வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தினகரன் மிகப்பெரிய கூட்டத்துடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். வெளிமாவட்ட ஆட்களை அழைத்து வந்தார் என்று கூறினார். தொகுதியில் வெளிமாவட்ட ஆட்களை தினகரன் தங்கவைத்திருப்பதாக புகார் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதரவுக் கூட்டத்தை பார்த்து ஆளும் தரப்பினர் அஞ்சுவதாக தினகரன் தரப்பினர் குற்றம்சாட்டினர். இவர்கள் இருவருக்கும் இடையே திமுக வேட்பாளர் மனுவைத் தாக்கல் செய்தவுடன் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டார்.

வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னர் தினகரன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். ஆனால், மனுவைத் தாக்கல் செய்தபிறகு ஆளும் தரப்பினர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார்கள். இதையும்கூட அதிமுகவில் ஒரு பிரிவினர் கமுக்கமாக விமர்சனம் செய்தார்கள்.

கடந்த தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததை காரணமாக காட்டித்தான் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும்படி நீதிமன்றம் தலையிட்ட நிலையில், ஆளும்தரப்பு இரட்டை இலையை போராடி பெற்றுள்ள நிலையில், தினகரனுக்கு தொப்பிச் சின்னத்தை கொடுக்கக்கூடாது என்று இபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் ஏன் தடை கோருகிறார்கள் என்றும் அதிமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

இவர்கள் ஒருபக்கம் தேர்தலில் கவனம் செலுத்தினாலும், மத்தியில் ஆளும் கட்சியான பாஜக, திராவிடக் கட்சிகளுக்கு இடமில்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் குரல் எழுப்பும் பாஜக, இதுவரை தனது வேட்பாளரை அறிவிக்க முடியாதது சமூக வலைத்தளங்களில் கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொருத்தமான வேட்பாளர் அந்தக் கட்சிக்கு இல்லையா?

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தமிழிசை, வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்டவர்கள் பிரபலங்கள் இல்லையா?

இங்கு வேட்பாளர்கள் கிடைக்காவிட்டால், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தாவது ஒரு வேட்பாளர் கண்டுபிடித்து அறிவிக்கலாமே?

ஜெ.தீபா கூட தனித்து போட்டியிடப் போவதாக துணிச்சலாக அறிவித்திருக்கிறார். மத்திய ஆளுங்கட்சியாகவும், தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சிப் பிடிக்கப் போகிற கட்சியாகவும் தமிழிசையும், எச்.ராஜாவும், பொன் ராதாகிருஷணனும் கூறும் பாஜகவால் ஒரு வேட்பாளரை அறிவிக்க முடியவில்லையா என்று சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் காணப்படுகின்றன.

கடந்த தேர்தலில் கங்கை அமரனை தனது வேட்பாளராக அறிவித்த பாஜக, இந்தத்தேர்தலில் பிரபலமான வேட்பாளரை அறிவிக்கப்போவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இதுவரை ஒரு பிரபலம் கூட கிடைக்காததும் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ப்ராப்ளமாக இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறுகிறார்கள்.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்