Skip to main content

அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 17/06/2018 | Edited on 17/06/2018


அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு 13.6.2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செயலை, மாநில சுயாட்சியின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே திமுக கருதுகிறது. அணைகள் பாதுகாப்பு குறித்து 1982-லேயே விவாதிக்கப்பட்டு, 1987-ல் முதல் வரைவு மசோதா வெளியிடப்பட்டாலும், மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இந்த அணைகள் பாதுகாப்பு மசோதா இருந்ததால் கடும் எதிர்ப்பு உருவானது. அதனால் இருபத்தைந்து வருடம் கழித்து 2010ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போது,இந்த மசோதா முதன் முதலில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் மாநிலங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து,இந்த மசோதா மக்களவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் “விரும்பும் மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்தில் அணை பாதுகாப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றினால் இந்த அணை பாதுகாப்பு சட்டம் அந்த மாநிலத்திற்குப் பொருந்தும்” என்று மாநிலங்களுக்கு “விருப்புரிமை” வழங்கப்பட்டிருந்தது.

 

 

ஆனால் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதலில் “2016 மசோதா” என்றும், இப்போது “2018 மசோதா” என்றும் பெயர் மாற்றம் பெற்று, நாட்டில் உள்ள ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைகளைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் அந்த “விருப்புரிமை” மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் பறிக்கப்பட்டிருக்கிறது. மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒரு அதிகாரத்தையே அபகரித்திடும் உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் இந்த மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள எந்த மத்திய அரசும், மாநிலங்களையும் அவற்றின் உரிமைகளையும் பாதிக்கும் இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற முன் வராது;மாநில அரசுகளின் அதிகாரத்தையும் கைப்பற்றித் தன்பைக்குள் போட்டுக்கொள்ள நினைக்காது. அதை மீறி இப்படியொரு மசோதாவை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. அரசு , “2018 அணை பாதுகாப்பு மசோதாவை” இதுவரை மாநிலங்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்கும் அடிப்படை ஜனநாயகக் கடமையைக்கூட நிறைவேற்றவில்லை. அதற்குள் மத்திய அமைச்சரவை மாநிலங்களைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன்னிச்சையாகவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள “பொதுப்பட்டியல்” அதிகாரங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துவந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது மாநிலப் பட்டியல் பிரிவு 17ல் இருக்கும் இந்த அதிகாரத்திலும் கை வைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனுமே நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்பில் உள்ள மாநிலம் ஆகும். இதை விட முக்கியமாக முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகள் கேரளாவில் இருந்தாலும், இன்றைக்கும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த “அணை பாதுகாப்பு சட்டம்” தமிழகத்திற்கு உள்ள அந்த உரிமையை நிலைநாட்டியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு, பாஜகவின் புதிய மசோதாவில் ரகசியமும் மர்மமும் பாதுகாக்கப்படுகிறது. இந்தப் புதிய வரைவு மசோதா தமிழக அரசுக்கு இதுவரை அனுப்பப்படவில்லை. அணைகள் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது மாநில அரசின் கடமை. அந்தப் பொறுப்புணர்வு எந்த மாநில அரசுக்கும் இருக்கும் என்பதை மத்திய அரசு ஏனோ உணரத் தவறி, இது போன்ற மசோதாவைக் கொண்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் அமையவிருக்கும் ஒரு ஆணையம்,மேட்டூர் அணை, கல்லணை போன்றவற்றின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யும் என்பது ,மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் அப்பட்டமாகக் குறுக்கிடுவதாகும்.

 

 

ஆகவே மாநிலப் பட்டியலில் இருக்கும் அதிகாரத்தைப் புறக்கணித்திடும் விதத்தில், அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பை மாநில அரசே கவனித்துக் கொள்ளும் என்றும்; அணைகளின் பாதுகாப்பை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ளும் என்றும்; மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று என்றும்; அதிமுக அரசு நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, பாஜக அரசின் இந்த எதிர்மறை முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு அளித்துள்ள அதிகாரங்களைப் பறிக்கும் இது போன்ற எதேச்சதிகாரச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு, மோதல் போக்கைப் பின்பற்றிவருவதை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, மத்திய - மாநில அரசுகளிடையே சுமுகமான நல்லுறவுகளை வளர்த்து,அவற்றை மதித்துப்போற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் விலகுகிறேன்”- சுப்புலட்சுமி ஜெகதீசன்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Resigning based on desire to retire”- Subbulakshmi Jagatheesan

 

திமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். முதல்வர், கட்சி மற்றும் அரசுப்பணிகளை நாடே பாராட்டும் வகையில் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், “2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.

 

தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின். அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

 

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும். கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என  தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

“ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு முதல் மரியாதை’; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

'First honor to One Rupee Idli Patty'; Resilience of Chief Minister Stalin

 

1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

 

தொண்ணூறுகளின் துவக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு இட்லி கடையை துவங்கினார். கடந்த 30 வருடங்களாக கடையை நடத்திக்கொண்டு வரும் இவர் வெகு காலமாக தனது கடையில் இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். அத்தியாவசியப் பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி போன்ற விலையேற்றங்கள் பல வந்தாலும் இட்லியை ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் இட்லிக்கடை இருக்கும் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த விலையில் காலை உணவினை அருந்தி தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.

 

இந்நிலையில் அண்ணாவின் பிறந்த நாளான இன்று 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 

1920 களில் ஜஸ்டிஸ் பார்ட்டி சென்னை மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு திட்டத்தை துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழக முதல்வரால் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. ஜஸ்டிஸ் பார்டியால் 1920களில் துவங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்று அதன் நூற்றாண்டு விழாவை எட்டியுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையிலும் மேலும் விரிவு படுத்தும் நோக்கிலும் துவக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில்  இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை துவங்கியது முதல் நடந்த வரலாற்று சம்பவங்களை தொகுத்து தமிழக அரசின் செய்தி தொலைத் தொடர்பு துறையால் புத்தகமாக கொண்டுவரப்பட்ட ஆவண நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கமலாத்தாள் பாட்டி பெற்றுக்கொண்டார். 

 

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒடுக்கப்பட்டோர் பிள்ளைகள், ஏழை எளியோர் வீட்டுப் பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்கு செல்வது தடைபடக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கத்தால் இத்திட்டம் துவங்கப்பட்டது. அன்றுதான் கடந்த நூற்றாண்டின் மாபெரும் இயக்கத்துக்கான விதை தூவப்பட்டது. அதற்காகவே சுயமரியாதை சமூக நீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி இட ஒதுக்கீடு தரப்பட்டது. தகுதியோ சாதியோ கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் நினைத்தனர். அவர்கள் நினைத்த திட்டத்தை நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என நினைக்கும் பொழுது உள்ளபடியே நான் அளவிட முடியாத மகிழ்ச்சிக்கு ஆளாகிறேன்” என கூறினார்.