Skip to main content

சென்னையின் பசியாற்றும் அக்கா, தாத்தா...

Published on 28/12/2017 | Edited on 28/12/2017
 சென்னையின் பசியாற்றும் அக்கா, தாத்தா...   

ஃபேஸ்புக் 'ஃபுட்டீ'ஸின் ஃபேவரிட் இவர்கள்   
                                 
சென்னைக்கு புதிதாக வரும்   எல்லோரையும் பயமுறுத்தும் மூன்று  விஷயங்கள், நல்ல வேலை கிடைக்குமா, தங்க கம்மியான காசுல வீடு கிடைக்குமா, அப்புறம் மிக முக்கியமாக  'பசியும் போகணும் அதே நேரத்துல ருசியாகவும் இருக்கணும்'  என்பது போல சாப்பாடு எங்கேயாவது  கிடைக்குமா  இந்த மூனும் கிடைச்சுருச்சுனா சென்னை வாழ்க்கை "டேக் இட்  ஈசியா" மாறிடும். பெரிய கடைகள் பிரபலமாவும், சுவையாகவும் இருந்தாலும், ஜிஎஸ்டி போட்டு பில் கொடுக்கும்போது சாப்பாட்டை  விட வரி நிறையா இருக்குதேனு தோன்றும். மாளிகை மாதிரி  கடை ஆடம்பரமா இருக்காது, உட்கார சேர் கிடையாது, முக்கியமா ஜிஎஸ்டி கிடையாது. ஆனா கவனிப்பும் சுவையும், வயிறையும் மனசையும் நிறைவாக்கும். நாம இப்போ அந்த மாதிரி  கடைகள் பற்றிதான் பார்க்கப் போகிறோம். இந்தக் கடைகள் எளியவர்களுக்கானவை மட்டுமல்ல, இவற்றின் சுவை ஃபேஸ்புக், யூட்யூப் என இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம்.  


சுந்தரி அக்கா கடை 



சென்னைக்கு வந்தா மெரினா வராம யாரும் போகமாட்டாங்க. அந்தளவுக்கு மெரினா ஸ்பெஷல். சென்னைக்கு மெரினா எவ்வளவு ஸ்பெஷலோ மெரினாவுக்கு மீன் குழம்பும், சுந்தரி அக்கா கடையும் ஸ்பெஷல். வெறும் முப்பது ரூபா போதும், தட்டுல வாழ இலை போட்டு மீன்குழம்போட  சாப்பாடு கிடைக்கும். கடையளவு சின்னதுதான். கடைக்கு சாப்பிட போனா கியூவுல நின்னுதான் சாப்பாடு வாங்கனும், அந்த அளவுக்கு கூட்டம் இருக்கும். புயலானாலும் மழையானாலும்  இங்க மக்கள் கூட்டம் இருந்துட்டுதான் இருக்கும். இந்த கடைய 2000ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை வெற்றிகரமா  நடத்திட்டு வராங்க சுந்தரி அக்கா. குறைந்த விலையில் சாப்பாடு கொடுக்கும் சுந்தரி அக்கா வருஷத்துல ஒரு நாள் (நவம்பர் 1 தன் கணவர் இறந்த நாளில்) மட்டும் கடைக்கு வரும் அனைத்து  வாடிக்கையாளர்க்கும் இலவசமா சாப்பாடு கொடுக்குறாங்க. ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சுவையான உணவு கொடுக்கும் சுந்தரி அக்காவுக்கு  சந்தானம் 'சகுனி'ல சொல்றமாரி மெரினால சிலையே வைக்கலாம்.

மோர்  தாத்தா 



"ராகுல் தாத்தா" கேள்விப்பட்டிருக்கோம், அது என்ன 'மோர் தாத்தா' அப்படினு கேக்குறீங்களா... சென்னையில் இரவு நேரத்துல திடீர்னு மோர் குடிக்கனும் என்று தோன்றினால், திருவான்மியூர் கடற்கரை பக்கத்துல சைக்கிளில்  திக்கான மோர்ல மாங்காய் துண்டுகள் மற்றும் காராபூந்தி போட்டு சுவையான மோர் கிடைக்கும். அதை விற்பனை செய்யும் இராமானுஜம்தான் "மோர் தாத்தா".  தினமும் இரவு ஒன்பது மணி முதல் பனிரெண்டு மணிவரை இங்க மோர் கிடைக்கும். இவர் மோர் விற்பனை செய்யத்  தொடங்கி கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆகுது.  என்னதான் கடல் காற்று கூலிங்கா வீசினாலும், மோர் தாத்தா கையில குடிக்குற மோரோட கூலிங்கும் சுவையும் தனிதான். இரண்டு மோர் குடிச்சா மறுநாள் காலையில வரைக்கும் கூட பசி இருக்காது. விலையோ குறைவு, மனசோ  நிறைவு.

சேட்டு சப்பாத்தி  கடை 


சேட்டுனு சொன்னவுடனே நமக்கு முதலில் ஞாபகம் வருவது அடகுக்  கடைதான். ஆனா இங்க ஒரு சேட்டு கடை இருக்கு. இங்க அடகு வைக்கப்  போகமுடியாது. அடுக்கடுக்கா சப்பாத்தி சாப்பிட போகலாம். "சேட்டு" சப்பாத்தி கடை சைதாபேட்டைல உள்ள பஜார் ரோட்டோட கடைசியிலதான் இருக்கு. இந்தக்  கடை சுமார் முப்பது ஆண்டுகளா இயங்கிக்கிட்டு வருது. இந்த கடையோட மாஸ்டர், ஓனர் எல்லாமே குப்தாதான். இங்க மூனு வேளையும்  சப்பாத்தி கிடைக்கும், மதியம் வெரைட்டி ரைஸும் கிடைக்கும். சப்பாத்தி ஒன்னு பத்து ரூபா, மதியம் வெரைட்டி ரைஸ் இருபது ரூபா தான். இங்க சப்பாத்திக்குக்  கொடுக்கும்  சன்னாவும், தக்காளி தொக்கும் இன்னும் அருமையா இருக்கும். இன்னொரு விஷயம் கடைக்கு பெயர் பலகை கூட கிடையாது. சைதாப்பேட்டை பக்கம் போனா சேட்டு கையால போட்ட சப்பாத்தி சாப்பிட்டுட்டு வாங்க.

பாட்டி கடை 



பாட்டி கடை துரைசாமி ரோட்ல இருக்கு இங்க சாப்பிட வர இரண்டு காரணம் இருக்கு. ஒன்னு பாட்டியோட குணம், அப்புறம் அவுங்க கையாள சமைக்குற சாப்பாடு. 
எண்பது வயசுலயும் அவ்வளவு  வேகமா பார்சல் கட்றாங்க. வரும்  வாடிக்கையாளர்கள  அன்போடு  கவனிக்குறாங்க. இவுங்க வேலை செய்றத பார்த்தா நாமதான் வயசானவுங்க மாதிரி  தெரிவோம், அம்புட்டு ஸ்பீடு. இங்க பூரி, பொங்கல், இட்லினு குறைந்த விலையில் சிறந்த உணவை முப்பது ஆண்டுகளுக்கும் மேல் கொடுத்துட்டு வராங்க நம்ம பாட்டி. 
 
விலைவாசி எகிறிப்போன சென்னையில் பலர் வயிறாறவும் மனதாறவும், பசிக்கடலில் மூழ்காமல் நீந்தவும் இவர்களைப் போன்ற மனிதர்கள்தான் காரணம்...

-ஹரிஹரசுதன்

சார்ந்த செய்திகள்