மலிவான விளம்பரம்:
விஷால் போட்டி குறித்து வைகைச்செல்வன்
நடிகர் விஷாலின் போட்டி தோல்வியில்தான் முடியும் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த அவர்,
நடிகர் விஷாலின் போட்டி தோல்வியில்தான் முடியும். அவருக்கு விழுகிற வாக்குகள் திமுகவுக்கு விழுகிற வாக்குகளை பிரிக்குமே தவிர, அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மேலும், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப்போல விஷால் இப்படி ஒரு நெருப்பாற்றலில் நீந்திப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்.

ஆர்.கே.நகர் தேர்தல் என்பது வெறும் நடிகர் சங்கத் தேர்தலோ, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலோ அல்ல. இது மக்கள் தீர்ப்பு. இந்த மக்கள் தீர்ப்பு, திமுக கோட்டையாக இருந்த 1977 காலக்கட்டத்திலேயே அதிமுக நின்று வென்ற தொகுதி. அந்த தொகுதியில்தான் ஜெயலலிதா இருமுறை நின்று வென்றிருக்கிறார்.
ஆகவே அவர் விட்டுச்சென்றிருக்கக் கூடிய இடத்தை அவருடைய இயக்கத்திற்குத்தான் தருவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விஷாலின் போட்டி என்பது அவர் ஒரு மலிவான விளம்பரத்தை தேடிக்கொள்வதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்