Skip to main content

சேக்கிழாரா, கம்பரா? அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரே...

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
 சேக்கிழாரா... கம்பரா...

ஆஹா... அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரே...       





முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை,  அதிமுக  அமைச்சர்களின் குரல்கள் எல்லாம் கேட்டதே இல்லை. அவர்களின் குரல்களெல்லாம் எப்படித்தான் இருக்கும் என்பது மக்களுக்கு பெரிய ஆர்வமாகவே இருந்தது. ஜெயலலிதா  இறந்த பின்தான் அவர்களின் குரல்கள் எல்லாம் நம் காது குளிர கேட்க முடிந்தது. அவர்களின் பேச்சு திறமைகளெல்லாம் வெளியே வர வர, அவர்களின் செயல் திறன்களும் தெரிய ஆரம்பித்தது. சமீபத்தில்  முதலமைச்சர் பழனிச்சாமி தஞ்சையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், தஞ்சையின் சிறப்புகளையெல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லிக்  கொண்டிருக்கையில் திடீரென சமூக வலைதள போராளிகளுக்கு டாபிக் கொடுக்கும் வகையில், " கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார்" என்றார். மக்கள்  திகைத்து நிக்க, மீம்  கிரியேட்டர்கள் குதூகலமாகினர். "கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் தான" என்று  மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்தனர்.   இது போன்று மேடையில் குழம்புவதில்  முதல்வர் ஒன்றும் முதலாமவர் இல்லை. அமைச்சர்கள் பலரும் முன்னரே பின்னியிருக்கிறார்கள். 

திண்டுக்கல் சீனிவாசன், சமீபமாக வலைதள வாசிகளுக்கு  அதிகம் டாபிக் கொடுப்பவர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இட்லி சாப்பிட்ட  பிரச்சனையில் அப்ரூவராகி ஆப்பிள் சாப்பிட்டவர். இவர் சமீபத்தில் ஒரு மேடையில் பிரபல கர்நாடக சங்கீத பாடகர்   சுதா ரகுநாதனை, மேடையிலேயே 'ஏன்மா நீ நாட்டியம்  ஆடுற பொண்ணா?' என்று  கேட்டு பின்னர், பாடகர் என்றார். அதைத்  தொடர்ந்து அதே மேடையில் சரமாரியாக சுதா ரகுநாதன் என்ற பெயரை அமைச்சர் செங்கோட்டையன் 'சுதா ரகுராம்' என்று பொறுமையாக படித்து சொன்னார், அமைச்சர் பன்னீர் செல்வம் 'சுதா ரங்குனாதன்' என்றார். இவர்கள் பேசியதை கேட்ட  பாடகர் சுதா ரங்கநாதன் கண்டிப்பாக தன் பெயரையே வெறுக்கும் அளவிற்கு பெயரை வாசித்தனர் நம்  அமைச்சர்கள். ஏற்கனவே அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு மேடையில் நம் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் என்றார். சரி, 'ஒரு ஃப்ளோவுல சொல்லியிருப்பார்' என்று பார்த்தால் எல்லா மேடைகளிலும் ரணகளம் தான்.





  அடுத்து நமது நட்சத்திர அமைச்சர் செல்லூர் ராஜு.  தெர்மாக்கோலை வைத்து ஓவர் நைட்டில்  ஒபாமா அளவு புகழ் பெற்ற   செல்லூர் ராஜுதான். ஆர் கே நகரில் போட்டியிடும் மதுசூதனனை  முதலமைச்சர் மதுசூதனன்  என்றார். மதுசூதனனுக்கு அது குளிர்ச்சியாக இருந்திருக்கலாம்;  மற்றவர்களை சூடாக்கியது. அமைச்சர்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும், அதனால் அனைத்து பெயர்களையும் நினைவு வைக்க முடியாது என்ற ரீதியில் பார்த்தாலும், தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கும்  சாதனைகளையும் மக்களுக்காக சிந்தித்து உருவாக்கியிருக்கும் திட்டங்களையும் பார்த்தால், அப்படி ஒன்றும் தெரியவில்லை.   ஒருவேளை எழுதித்  தரவேண்டியவர் சரியாக எழுதவில்லையா என்னவோ... 





ஆள்பவர்கள் தான்  இந்த நிலையில்  என்றால், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவிலும் செயல் தலைவர்  ஸ்டாலின் அவ்வப்போது மீம் மேட்டர் தருகிறார். ஒரு மேடையில் சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் மீண்டும் மீண்டும்  மாற்றி மாற்றி  சொல்லிக்கொண்டே இருந்தார். ஆகஸ்ட் 15ஐ  ஜனவரி 15 என்றும் குடியரசு தினம் டிசம்பர் 15 என்றும்  கூறினார்.  மேடையில் இருப்பவர்கள் அறிவுறுத்த முயன்றும் முடியவில்லை. நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் குழம்பும் அளவிற்கு இருக்கிறது. ஏற்கனவே 'நீட்'டால் மரணம் தழுவிய அனிதா பெயரை சரிதா என்று கூறினார்.  முன்னாள் எதிர்க்கட்சி தலைவரை எண்ணிப் பார்த்தால், இந்த எதிர் கட்சித் தலைவர் பரவாயில்லை என்று தோன்றும்.  விஜயகாந்த் பேசுவதை கேட்க ஒரு மொழிபெயர்ப்பாளரே தேவைப்படும் அளவிற்கு பேசினார். உடல்நிலையினால் தான் அவரது பேச்சு அப்படி இருக்கிறது என்று கூறப்படுவதால் அதை விமர்சிக்கவேண்டியதில்லை.   பேச்சால்  மக்கள் மனதில் இடம் பிடித்து, பின் ஆட்சியையும் பிடித்த   தமிழகத்தில் தலைவர்கள் பலரும்  மழலைகளாய் குளறுகின்றனர். இதையெல்லாம்  காது கொடுத்து கேட்கையில் , "பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டார் போல.... " என்னும் காமெடிதான் நினைவிற்கு வருகிறது.

சந்தோஷ் குமார் 

சார்ந்த செய்திகள்