Skip to main content

பீகார் பாணியில் இரட்டை இலையா?

Published on 17/11/2017 | Edited on 17/11/2017
பீகார் பாணியில் இரட்டை இலையா? 
OPS-EPS மகிழ்ச்சி! சசிகலா கண்ணீர்!

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்று, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என தேர்தல் ஆனைய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. 



இந்தநிலையில், பீகார் மாநிலம் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்கிற தகராறில் இன்று தீர்ப்பளித்த தலைமை தேர்தல் ஆணையம், கட்சியும், சின்னமும் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கே ஒதுக்கப்படுகிறது என தீர்ப்பளித்துள்ளது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நிதிஷ்குமார் பக்கமே இருப்பதால் இத்தகைய முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இந்த தீர்ப்பு, இபிஎஸ்-ஓபிஎஸ்க்கு மகிழ்ச்சியையும், சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும் சரத்யாதவிற்கும் ஏற்பட்ட மோதலில் கட்சியும் சின்னமும் யாருக்கு என்கிற பஞ்சாயத்து தலைமை தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது. அதில் இன்று தீர்ப்பளித்த ஆணையம், பாஜக ஆதரவில் இருக்கும் நிதிஷ்க்கே கட்சியும் சின்னமும் கொடுத்துள்ளது. இதே பாணியில், இரட்டை இலை சின்னமும் கட்சியும் தங்களுக்கே கிடைக்கும் என குதூகலமாகியிருக்கிறது எடப்பாடி - பன்னீர் தரப்பு. 



தேர்தல் பார்வையாளர்களிடமும், பீகார் பாணியில் அதிமுகவுக்கும் தீர்ப்பளிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு எதிரொலிக்கவே செய்கிறது. அதேசமயம், ஐக்கிய ஜனதா தள விவகாரத்தையும் அதிமுக விவகாரத்தையும் ஒரே நேர்க்கோட்டில் கணிக்கக்கூடாது. ஐ.ஜ.தளம் விவகாரம் தெளிவானது. அதனால் தீர்க்கமான முடிவை ஆணையம் எடுத்துள்ளது. 

அதிமுக விவகாரம் அப்படி அல்ல. குழப்பங்கள் நிறைந்தவை. அதனால், பீகார் பாணியில் அதிமுகவின் இரட்டை இலையை அணுக முடியாது என்கிறார்கள் மற்றொரு தரப்பினர். இருப்பினும், சசிகலா குடும்பத்துக்கு எதிராக பாஜக தலைமையின் அரசியல் அதிகரித்து வருவதால், பீகார் பாணியில் அதிமுக விவகாரம் அலசப்படும் என்றும் எதிரொலிக்கிறது. 



இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை முடக்கியே தீருவேன் என கடைசிக்கட்ட முயற்சியை எடுத்து வருகிறார் சு.சாமி. 

187 இடங்களில் ரெய்டு நடத்தி உறவினர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது, இரட்டை இலை விவகாரத்தில் எதிரணிக்கு டெல்லி ஆதரவு போன்ற அதிர்ச்சி அடங்குவதற்குள் சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டாராம் சசிகலா. 

-இளையர்

சார்ந்த செய்திகள்