Skip to main content

போட்டியிடுவது அதிமுக தான்...அதிக அக்கறை காட்டுவது பாஜக...ரெய்டு பின்னணி!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

இந்திய பிரதமராக நரேந்திர மோடியை இரண்டாவது முறை தேர்ந்தெடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பங்கெடுக்காத மக்கள், வேலூர் எம்.பி. தொகுதி மக்கள். அந்தத் தொகுதியில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெறும் தேர்தலில் உன்னிப்பாக கவனம் செலுத்தி, முழு பலத்துடன் களமிறங்கியுள்ளார் பிரதமர் என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தனை தி.மு.க. வி.ஐ.பி.க்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், கார் ஓட்டுநர்கள், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என ஆயிரக்கணக்கானவர்களின் செல்போன்களை வருமான வரித்துறை டேப் செய்யத் தொடங்கிவிட்டது.

 

dmk



இதற்கான அதிகாரத்தை மத்திய அரசின் நேரடி உதவியின்றிப் பெறமுடியாது. தி.மு.க. பிரமுகர்களின் அலுவலகங்களில் முக்கிய இடத்தில் இருக்கும் நபர்களை வருமான வரித்துறையினர் சந்திக்கின்றனர். "தி.மு.க. பிரபலங்கள் எவ்வளவு பணம் எடுக்கிறார்கள். அதை எப்படி செலவு செய்கிறார்கள் என நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் சும்மா சொல்ல வேண் டாம். இதுபோல தகவல் தரும் ஆட்களுக்கென கோடிக் கணக்கான பணத்தை மத்திய அரசு கொடுக்கிறது. நீங்கள் தகவல் கொடுப்பதற்கேற்றவாறு உங்களுக்குப் பணம் கொடுக்கப்படும்' என பெரிதாக வலைவீசப்படுகிறது.

 

admk



இப்படிப் பெறப்படும் தகவல்களை வைத்து வருமான வரித்துறை ரெய்டுகள் நடத்தப்படும். அதன் மூலம் தேர்தல் நேரத்தில், தி.மு.க. அசைவற்ற சக்தியாக மாறிப் போகும். அ.தி.மு.க. எளிதாக பண விநியோகத்தில் ஈடுபடும். பணவீச்சின் மூலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றதை போல வேலூர் எம்.பி. தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இதுதான் மத்திய அரசின் ஃபார்முலா. இந்த ரெய்டு ஃபார்முலா ஏற்கனவே கர்நாடகத்தில் வெற்றி பெற்றது. அங்கு பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கான அடிப்படை காரணமே காங்கிரஸ் கட்சியை ரெய்டுகள் மூலம் முடக்கியதுதான். கர்நாடகத்தில் இந்த ஃபார்முலாவை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் பி.முர்ளிகுமார் என்கிற ஐ.ஆர்.எஸ். அதிகாரி. ஆந்திராவை சேர்ந்தவரான இவர், சென்னைக்கு வந்தபிறகு தென்னக வருமான வரித்துறையின் முகமே மாறிவிட்டது என்கிறார்கள் வருமான வரித்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.


இவருக்கு முன்பு சென்னை வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் இன்வெஸ்டிகேஷன் என்ற பதவியில் இருந்தவர் பால கிருஷ்ணன். இவர்தான் இன்று சி.பி.ஐ.யின் விசாரணையில் இருக்கும் குட்கா ஊழலை கண்டுபிடித்தவர். அதில் "போலீஸ் உயரதிகாரிகள் தொடர்பில் இருக்கிறார்கள்' என தலைமைச் செயலாளருக்கே கடிதம் எழுதியவர். அவரை வட இந்தியாவிற்கு மாற்றிவிட்ட பிறகு மத்திய பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்டவர் முர்ளிகுமார். இவர் வந்தவுடன் செய்த அதிரடியான முதல் வேலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பெங்களூர் நகரில் புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளோடு எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனின் சகலையான ராமலிங்கத்தை பிடித்ததுதான். அப்போது சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த எடப்பாடி கூவத்தூர் ரிசார்ட்டில், ""எனக்கும் மத்திய அரசு தொல்லை கொடுக்குறாங்கம்மா... என் சம்பந்தியையும் மகனையும் வருமான வரித்துறை வழக்கில் சிக்க வச்சிருச்சுங்கம்மா'' என புலம்பும் அளவிற்கு செய்து, அந்த ஒரு வழக்கை வைத்தே எடப்பாடியையும் சசிகலாவையும் பிரித்தது பா.ஜ.க. மேலிடம்.

இத்துடன் நிற்காமல் சசிகலாவின் குடும்பத்தினர் மீது நடவடிக்கைகள் பாய்ந்தன. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி சசிகலா சாம்ராஜ்யத்தின் பண அதிகாரத்தை முடக்கியதில் முர்ளிகுமார் டீமுக்கு முக்கிய பங்கு உண்டு. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஆகியோர் மீது வருமான வரித்துறையை பாய்ச்ச, மேலும் அரசியலில் அதிர்வலை ஏற்பட்டது. அவர்களது சொத்துக்களை முடக்கியதோடு, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லவும் தடை பெறப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தரப்பு, மகன் உதயநிதிக்கு பைனான்ஸ் செய்த சினிமா தொழிலதிபர் என பலருக்கு வருமான வரித்துறை வலைவீசியது.

இதில் எக்ஸ்பர்ட்டான முர்ளிகுமார்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது கனிமொழி, வசந்தகுமார் உள்ளிட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை மட்டும் குறிவைத்து ரெய்டு நடத்தியவர். வேலூரில் துரைமுருகன் வீட்டிலும் அவரது கல்லூரியிலும் ரெய்டு நடத்தினார். அதன்பிறகு ஒரு சிமெண்ட் குடோனில் பணத்தை பிடித்து அதை அறிக்கையாக மத்திய தேர்தல் கமிஷனுக்கு எழுதி வேலூர் தேர்தலையே நிறுத்தி வைத்தார் என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். தான் உண்டு, தனக்கு இடப்பட்ட வேலை உண்டு என செயல்படும் முர்ளிகுமார், டெல்லியில் யாருடனும் பேச மாட்டா ராம். மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லியிடம் கூட கறாராகத்தான் இருப்பாராம். நேரடியாக பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து வரும் உத்தரவுகளை கச்சிதமாக நிறைவேற்றக் கூடியவர்.

துறை சார்ந்து, இவர் குறித்து, சி.பி.ஐ.க்கு புகார்கள் அனுப்பப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு இவரது அலுவலகத்திற்கு தினமும் வரும் தெலுங்குப் பிரமுகர்களான பிரபா கர் மற்றும் டாக்டர் சுனில் ரெட்டி ஆகியோரை விசாரித்தோம் என்கிறது சி.பி.ஐ. வட்டாரம். தமிழகத்தில் டி.ஜி.பி.யாக இருந்த வடநாட்டவரான பாண்டா என்பவரின் உறவினர் வெளிநாட்டிலிருந்து பெற்ற 400 கோடி ரூபாய் முதலீட்டு வழக்கு, வருமான வரித்துறையில் வேகம் எடுக்காமல் முடக்கப்பட்டதன் பின்னணியும் விசாரிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கிறிஸ்டிபுட், காண்ட்ராக்டர் செய்யாதுரை, வி.வி.மினரல் வைகுண்டராஜன், நெல்லை காண்ட்ராக்டர் முருகன் ஆகியோர் மீதான வருமான வரித்துறை வழக்குகளின் தற்போதைய நிலவரத்தையும் ஆராய்கிறது சி.பி.ஐ.

ஜூன் முப்பதாம் தேதியோடு ஓய்வு பெற்ற இந்த முர்ளிகுமாரைதான் இந்திய தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதிக்கான செலவினப் பார்வையாளராக நியமித்துள்ளது. வேலூர் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய ரெய்டு பார்முலா குறித்து தினமும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் பிரபாகர், டாக்டர் சுனில் ரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார் முர்ளிகுமார். இந்த தேர்தல் அசைன்மெண்ட்டில் ரெய்டு ஃபார்முலா வெற்றி பெற்று வேலூரில் அ.தி.மு.க. ஜெயித்தால் இவரை தென்மண்டல வருமான வரி தீர்ப்பாயத்தின் தலைவராக்குவார் பிரதமர் மோடி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

இதுபற்றி முர்ளிகுமாரிடம் கேட்டோம். "நான்தான் தமிழக வருமான வரித்துறை வரலாற்றிலேயே அதிக வருமான வரி கலெக்ஷனை நடத்தி காண்பித்தேன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க.வுக்கெதிரான பண விநியோக புகாரின் அடிப்படையில் நிறுத்தினேன். என் மீது பழி சொல்பவர்கள் ஆயிரம் சொல்லலாம். நான் குற்றமற்றவன் என்பதை வருமானவரித்துறை ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்'' என்றார் உறுதியான குரலில். வேலூரில் போட்டியிடுவது அ.தி.மு.க. சின்னம் என்றாலும் அதிக அக்கறை செலுத்துவது மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசுதான்.
 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.