Skip to main content

'கொம்பன்' கம்பெடுத்தா வீட்டுக்கு முழுசாப் போவ முடியாது... வெறித்தனம் காட்டிய எஸ்.ஐ.ரகுகணேஷ்!!!

 

Raghu Ganesh

 

சித்ரவதைச் செய்யப்பட்டு கொலைக்குள்ளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடற்கூறாய்வு பாளை அரசு மருத்துவமனையில் 24 அன்று இரவு ஆரம்பிக்கப்பட்ட போது அங்கே நாடார் சமூகத்தின் ராக்கெட்ராஜா, ஹரி நாடார் அடங்கிய முக்கியப் புள்ளிகளுடன் மக்கள் கூட்டம் திரண்டுவிட்டது.

 

இரவு நேரத்தில் போஸ்ட்மார்ட்டம் நடந்ததில்லை. அதனால், பகலில்தான் நடத்தப்படவேண்டும் என்று ராக்கெட் ராஜாவும் ஹரிநாடாரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட போலீசார் மீது 302 செக்ஷன் போடப்பட்டு கைது செய்யப்பட வேண்டும்.

 

அதுவரையிலும் உடல்களை வாங்கப் போவதில்லை என்று ஜெயராஜின் மனைவி பிள்ளைகள், உள்ளிட்ட பொதுமக்களே ஆத்திரம் காட்டியது தூத்துக்குடி போலீசாரைப் பதற்றத்திலும் பதைபதைப்பிலும் தள்ளிவிட்டது.

 

சமாதானப் படலத்தை போலீஸ் உயரதிகாரிகளும் வருவாய் உயரதிகாரிகளும் நடத்தினர். விசாரணை நீதிபதியான கோவில்பட்டி ஜே.எம். பாரதிதாசன், ஜெயராஜ் குடும்பத்தார்களிடம் வாக்குமூலம் பெற்றார். போஸ்ட் மார்ட்டம் நள்ளிரவு முடிந்தது.

 

sathankulam

 

வாக்குமூலம் பற்றி விசாரித்தோம். ஜெயராஜையும், மகன் பென்னிக்சையும் கோவில்பட்டி சப்-ஜெயிலில் அடைத்த சாத்தான்குளம் போலீசார், "இவனுக போலீசையே அசால்ட் பண்ண வந்தவங்க. கவனியுங்க'' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் இருவரின் உடல்களில், தாக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தது என்று சிறைக் கண்காணிப்பாளர் குறிப்பெழுதியிருக்கிறார்.

 

அதை விசாரணை நீதிபதி ஆவணமாக்கிக் கொண்டார். அதன் பிறகே நீதிபதியிடம், "போலீசார்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. உடல்களைப் பெற்றுக் கொள்கிறோம்'' என்று செல்வராணியும், மகள் பெர்சியும் சொன்ன பிறகே இருவரின் உடல்களும் வாங்கப்பட்டது.

 

பின்னர் முறைப்படி உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. தவிர, தந்தையும் மகனும் சித்ரவதைக்குள்ளாக்கப் பட்டபோது உடனிருந்து கால்களை மிதித்துப் பிடித்துக் கொண்டவர்கள் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசின் கண்ணன், தளபதி, ஜேக்கப், எலிசா ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப் பெறுகிறது.

 

காரணம், வியாபாரிகளான ஜெயராஜூம் அவர் மகன் பென்னிக்சும், போலீஸின் சித்ரவதையால் பலியானது, முதல் சம்பவமல்ல. ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவத்தின் மூன்றாவது டார்ச்சர் கொலைகள். சாத்தான்குளம் காவல் சரகத்தில் வரும் தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்ற 28 வயது இளைஞனை அவரது அண்ணன் துரை மீதான வழக்கிற்காக அழைத்துச் சென்றதுடன், துரையின் மாமனாரையும் தூக்கிச் சென்று, லாக்கப்பில் வெளுத்து வாங்கி, வீட்டுக்கு அனுப்பினார்.

 

உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன் 13.6.2020 அன்று இறந்து போனார். இப்போதுதான் இந்த விவகாரம் பரபரப்பாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. போலீஸ் அடியால் செத்தது பற்றி ஏற்கனவே தனது அம்மா, அக்கா ஆகியோரிடம் மகேந்திரன் தெரிவித்திருந்தது, பின்னர் அவர்களின் வாக்குமூலமாகப் பதிவாகியுள்ளது. தற்போது வைரலாகும் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் இருவர் பேசிக்கொண்ட ஆடியோவிலும் மகேந்திரன் பெயர் உள்ளது. 

 

வழக்கு ஒன்றில் தேடப்பட்டு பின் ஸ்டேஷனில் சரண்டரான பனைகுளத்தின் வார்டு கவுன்சிலர் ராஜாசிங்கை லட்டியால் வெளுத்த எஸ்.ஐ. ரகுகணேஷ், அவரை கோவில்பட்டி கிளைச் சிறையில் போட்டிருக்கிறார். தற்போது நெஞ்சுவலி காரணமாக ராஜா சிங்கை, கிளைச் சிறையினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தந்தை மகனின், சாவுக்கு முந்தைய சம்பவம்.

 

http://onelink.to/nknapp

 

"இந்த ஊர்ப் பசங்கள அடி உறிச்சாத்தான்டே வசத்துக்கு வருவானுங்கடேய்'' என்று அடிக்கடி வார்த்தையில் வெறித்தனம் காட்டும் எஸ்.ஐ.ரகுகணேஷ், "கொம்பன் கம்பெடுத்தாலும், பச்ச மட்டய தூக்குனாலும் தோல உருச்சிறிவேம்லேய். வீட்டுக்கு முழுசாப் போவ முடியாதுலேய்னே, பசங்கள வெளுத்து வாங்கிருவாறு. சுரேஷ், ராஜதுரை, பாலகுமார்னு 15க்கும் மேற்பட்ட பசங்க அவரோட அடியால புட்டம் பழுத்துப் போய் நடக்க முடியாமக் கிடக்கானுவ என்கிறார்கள் ஊர்க்காரர்கள். வெறித்தனமான அடியாலேயே சாத்தான்குளத்தைப் பதட்டத்தில் வைத்திருக்கும் எஸ்.ஐ.ரகுகணேஷ், 'கொம்பன்' என்று தனக்கு அடையாளமாகப் பெயர் வைத்துக் கொண்டதற்கும் காரணமிருக்கிறதாம்.

 

1967களில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தூத்துக்குடியில் பிரபலமான டாக்டர் மரகதவேல். அவர், அவரின் மனைவி, ஒரு குழந்தை என மூன்று பேரும் பனங் கருக்குமட்டையால் வெறித்தனமாக அடித்துத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். டாக்டரின் ஒரு குழந்தை பீரோவின் பின்னால் மறைந்து கொண்டதால் அது தப்பியது. அப்போதே அங்கிருந்த ஆயிரம் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மூர்க்கத்தனமாக நடத்தப்பட்ட இந்தப் படுகொலை தமிழகத்தையே உலுக்கியது. அந்தக் கொலையில் அந்தப் பகுதியின் ஆண்டி, கொம்பன் இருவரும் குற்றவாளிகள்.

 

அவர்களின் பெயரைக் கேட்டால் ஊரே அதிரும். அதுபோல அதிர வேண்டும் என்பதற்காக ஒரு குற்றவாளியின் பெயரை போலீஸ் அதிகாரியான தனக்குப் பட்டப்பெயர் வைத்துக்கொண்டு ஈரப்பனமட்டைக்குப் பதில் தண்ணீரில் நனைத்த லத்தியால் வெளுத்து வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் எஸ்.ஐ. ரகுகணேஷ். தண்ணீரில் ஊறப்போட்ட லட்டிக் கம்பு, கைநழுவாமல் இருப்பதற்கு கிரிப்பாக இருக்கும். ஒரே அடி, சதையைப் பிய்த்துவிடும். உள்ளே எரியும் ஆனா ரத்தம் வராது.