Skip to main content

தலைநகரில் கெஜ்ரிவால் - அமித்ஷா கரோனா அரசியல்! 

Published on 29/06/2020 | Edited on 29/06/2020
a23

 

டெல்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் தேவையான படுக்கை வசதிகள் இல்லாமல் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்! கரோனா வைரஸ் பரவிய ஆரம்பக் கட்ட காலத்திலிருந்தே முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், மாநில அரசை கட்டுப்படுத்தும் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கும் முட்டல் மோதல் அதிகரித்தபடியே இருக்கிறது.

கரோனா பரவலை தடுப்பதில் கெஜ்ரிவால் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டைப் போடும் விதத்தில் குற்றசாட்டுகளை கூறி வந்தார் அனில் பைஜால். அவரின் குற்றசாட்டுகளுக்குப் பின்னணியில் மத்திய பாஜக அரசின் அரசியல் அழுத்தம் இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. அதற்கேற்ப, பைஜாலை முன்னிறுத்தி இப்போது வரை அரவிந்த் கெஜ்ரிவாலோடு மோதல் போக்கினை நடத்திக் கொண்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

டெல்லியில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சிகிச்சை மையங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்திருக்கிறது ஆம் ஆத்மி அரசு.

டெல்லி அரசு  மருத்துவமனைகளில் கோவிட் 19-க்காக உருவாக்கப்பட்ட படுக்கைகளை மத்திய உள்துறை அமைச்சகம் ஆக்ரமிக்க திட்டமிட்ட நிலையில்தான், தலைநகரில் வசிப்பர்களுக்குத்தான் படுக்கைகளில் முன்னுரிமையளிக்கப்படும் என அறிவித்தார் கெஜ்ரிவால். இதனை சர்ச்சையாக்கிய மத்திய பாஜக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவினால் முந்தைய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார் கெஜ்ரிவால்.

ஆனால், கரோனா படுக்கை விஷயங்களை மையப்படுத்தி தொடர்ச்சியான அரசியலை செய்து வருகிறார் அமித்சா. துணை ஆளுநர் பைஜாலை தூண்டிவிட்டு, எந்த ஒரு நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க மறுக்கப்படக்கூடாது என சொல்ல வைத்ததுடன், கோவிட்-19 அறிகுறிகளை கொண்டவர்களை மட்டுமே பரிசோதிக்கும் கெஜ்ரிவால் அரசின் உத்தரவை ரத்து செய்ய வைத்தார் அமித்சா.        

 

delhi

 

இதற்கு பதிலடி தந்த கெஜ்ரிவால், “அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கோவிட் 19 சிகிச்சை வசதிகளையும் எந்த பாகுபாடு காட்டாமல் செய்து வருகிறோம். மத்திய அரசுதான் மாநில அரசின் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்தபடி இருக்கிறது. துணை நிலை ஆளுநரின் உத்தரவு டெல்லி மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையையும், சவாலையும் உருவாக்கியுள்ளது” என குற்றம் சாட்டினார்.

கெஜ்ரிவால் அரசின் அதிகாரிகள், “டெல்லி மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே 90 சதவீத படுக்கை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். ஜூன் இறுதிக்குள் மேலும் 15,000 படுக்கைகள் தேவைப்படும். அதற்கான வேகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதற்காக, 5 பேர் கொண்ட மருத்துவ குழுவின் அமைத்தார் முதல்வர் கெஜ்ரிவால். மருத்துவ குழுவின் ஆலோசனைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நாங்கள் செயலாற்றி வருகிறோம்” என தெரிவித்தனர். துணை நிலை ஆளுநர் அனில்பைஜால் மூலம் அமித்ஷா முன்னிறுத்தும் அரசியலை சுகாதார அதிகாரிகளை அவைத்து உடைக்கத் துவங்கியிருக்கிறார் கெஜ்ரிவால்.

இதற்கிடையே, மருத்துவ உபகரணங்கள் விஷயத்தில் கெஜ்ரிவால் அரசை குற்றம்சாட்ட மத்திய பாஜக அரசு பல்வேறு தகவல்களை கசியவிட்டன. இதற்கு பதிலளித்த துணை முதல்வர் சிசோடியா, “பிபிஇ கிட் மற்றும் வெண்டிலேட்டர் கொள்முதல் மோசடியில் பாஜகவினர்தான் பிஸியாக இருக்கிறார்கள். அந்த பேரழிவை ஒடுக்க டெல்லி அரசு முயற்சிக்கிறது. இதனை ஜீரணிக்க முடியாமல் மலிவான அரசியலை விளையாடுகிறார்கள் பாஜகவினர்” என ஆவேசப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், “மக்களை பாதுகாக்க டெல்லி கெஜ்ரிவால் அரசு தவறும் போதெல்லாம் அவர்களை மீட்கும் ரட்சகராக வருகிறார் அமித்சா. அவரது வழிகாட்டுதலின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கரோனா பராமரிப்பு மையம் செயல்படுகிறது’’ என்கின்றனர் பாஜக தலைவர்கள். 

 

kr4

 

அதற்கேற்ப, படுக்கை மற்றும் சிகிச்சை வசதிகளில் விளையாடத் துவங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம்,  10,000 படுக்கை வசதிகளுடன் சர்தார் வல்லாபாய் படேல் கரோனா மையத்தை உருவாக்கியது.

அதேபோல, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல விளையாட்டு மையங்களையும் கரோனா சிகிச்சை வசதிகளுக்காக மாற்றப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவ படைகளின் 1000-த்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என பலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த படுக்கை வசதிகளையும், அங்குள்ள மருத்துவ முறைகளையும்  கெஜ்ரிவால் அரசு பரிந்துரைக்கும் கரோனா நோயாளிகளுக்கு தருவதில்லை உள்துறை அமைச்சகம்.

 

delhi

 

இதற்கிடையே, கரோனா தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கெஜ்ரிவால் அரசு மறைப்பதாக ஒரு குற்றச்சாட்டை வீசியது பாஜக. அதற்கேற்ப, “இறப்பவர்களின் எண்ணிக்கையை டெல்லி மக்கள் அறிந்து கொள்ள உரிமை உண்டு. அதனால் இறப்பு விகிதங்களை மறைக்காமல் தெரிவிக்க வேண்டும்’’ என அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. 

இதற்கு பதிலளித்த ஆம் ஆத்மி அரசு, “கரோனா நோயாளிகள் விசயத்தில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. இறப்பு அறிக்கைகளை விரைவாக அனுப்புங்கள் என மருத்துவமனைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் தரும் புள்ளி விபரங்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்படுகிறது” என பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்திருக்கிறது.

இப்படி இரு தரப்புக்கும் மல்லுக்கட்டு அதிகரித்து வரும் நிலையில், கோவிட்-19 தாக்கிய நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் கெஜ்ரிவால் அரசுக்கு எந்த வகையிலும் உதவாமல் அவரோடு மோதல் போக்கினை கையாண்டு வருகிறது உள்துறை அமைச்சகம். கெஜ்ரிவாலுக்கு எதிராக கரோனா அரசியல் விளையாட்டை ஓங்கி அடித்து விளையாடி வருகிறார் அமைச்சர் அமித்ஷா! இதனால், கரோனா தாக்கத்தை விட அமித்ஷாவின் அரசியால் விளையாட்டு உச்சத்தில் இருப்பதால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் கரோனா நோயாளிகள் என டெல்லியில் பரபரப்பாக எதிரொலிக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சுகர் வருவதற்காகவே ஸ்வீட் சாப்பிடுகிறார்” - கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Kejriwal accused by the enforcement department to eats sweets just to get sugar

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 15ஆம் தேதி விசாரனைக்கு வந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடுகையில், “தன்னை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. வரும் 24 ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும். இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம்” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை அவர் அளித்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, ‘தான் சர்க்கரை நோயால் அவதிப்படுகிறேன் என்றும், தனது ரத்த அளவுகளை மருத்துவரைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும்’ கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு இன்று (18-04-24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோகப் ஹொசெயின், “சர்க்கரை நோய் அதிகம் உள்ளதாகக் கூறும் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழம் சாப்பிடுவது, இனிப்புகள் சாப்பிடுவது, சர்க்கரையுடன் டீ சாப்பிடுவது உள்ளிட்டவைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார். இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான ஒரு களமாக இதைப் பயன்படுத்த கெஜ்ரிவால் விரும்புகிறார்” என்று வாதாடினார்.

இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் விவேக் ஜெயின், ‘அமலாக்கத்துறை வைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் இது போன்றத் தகவல் பரவ வேண்டும் என்பதற்காகவே இதைச் சுமத்துகிறது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரிலேயே அவர் உணவுகளை எடுத்து வருகிறார்’ என்று கூறினார்.

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது