நடிகையான கலெக்டர்!
அடிப்படையில் டாக்டர் இப்போது நடிகை

நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்த 'அறம்' படம் பரபரப்பாகப் பேசப்பட்டது. கலெக்டராக நடித்த நயன்தாராவின் நடிப்பும் உணர்வுகளை அவர் வெளிப்படுத்திய விதமும் அவரை ஒரு நடிகையாகவே அவதானிக்க முடியவில்லை; அசல் கலெக்டராக அவர் பரிணமித்திருந்தார். நிஜ கலெக்டராகவே வாழ்ந்திருந்தார் நயன்தாரா. ஒரு நடிகை கலெக்டராக சினிமாவில் அவதாரமெடுத்த நிலையில், நிஜ கலெக்டர் ஒருவர் சினிமா நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சப் கலெக்டராக இருப்பவர் திவ்யா அய்யர். மலையாள இயக்குநர் பென்னி ஆசம்மா இயக்கும் ' எளிஅம்மச்சிடே கிறிஸ்துமஸ் ' எனும் மலையாள படத்தில் அறிமுக நாயகியாக கன்னியாஸ்திரி வேடத்தில் நடித்திருக்கிறார் திவ்யா. இப்படத்தின் சூட்டிங் தொடர்பாக சில அனுமதிகளைப் பெற வேண்டி கலெக்டர் அலுவலகத்திற்கு இயக்குநர் சென்ற நிலையில்தான் திவ்யாவை சந்தித்திருக்கிறார் இயக்குநர் பென்னி. சந்தித்துவிட்டு திரும்பியநிலையில், திவ்யாவின் தோற்றம் பென்னிக்குப் பிடித்துப்போக, திவ்யா மீண்டும் சந்தித்து படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பல ஆலோசனைகளுக்குப்பிறகு, சம்மதம் தெரிவித்துள்ளார் திவ்யா. அடிப்படையில் திவ்யா ஒரு டாக்டர். வேலூர் சி.எம்.சி.யில் தான் படித்தார். அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தற்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் திவ்யா. 'எளிஅம்மச்சிடே கிறிஸ்துமஸ்' படம் விரைவில் வெளிவரவிருக்கிறது.


திவ்யா ஏற்கனவே கேரளா தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் பாடிய விழிப்புணர்வு பாடல் அங்கு பிரபலம். மேலும், இவர் கடந்த ஜூன் மாதத்தில் கேரளா அருவிக்கரை தொகுதி எம்எல்ஏவான சபரிநாதனை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல வகைகளிலும், கேரளாவின் புகழ் பெற்ற நட்சத்திர கலெக்டராக திகழ்கிறார் திவ்யா. நடிகை நயன்தாரா கலெக்டர் அவதாரம் எடுக்க, ஒரு கலெக்டர் நடிகையாகி இருக்கிறார்!
-இளையர்