Skip to main content

3 நாள் ரெய்டு! வெற்றியா? தோல்வியா? (EXCLUSIVE)

Published on 11/11/2017 | Edited on 11/11/2017
3 நாள் ரெய்டு! 
வெற்றியா? தோல்வியா? 



சசிகலா, தினரகன் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு அலுவலகங்கள், எஸ்டேட்டுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனைகளை மீடியாக்கள் பூதாகரமாக ஊதிப்பெரிதாக்கிய நிலையில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான, பினாமி சொத்து பத்திரங்கள் மற்றும் முறைகேடான முதலீட்டு ஆவணங்கள் சிக்கியுள்ளன. ரொக்கப் பணம், தங்கம், ரோலக்ஸ் வாட்ச்சுகள் சிக்கியுள்ளன. அவற்றை சூட்கேசுகளில் எடுத்துச் சென்றனர் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதெல்லாம் உண்மையா? இந்தத் தகவல்களை மீடியாக்களுக்கு யார் தருகிறார்கள் என்று வருமான வரித்துறை வட்டாரங்களிலும், அரசியல் விமர்சிகர்களிடமும் நாம் விசாரித்தோம்.



விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. அவற்றை இங்கே தொகுத்து தருகிறோம்...

சாதாரண நேரங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் ஏதாவது தகவல் சொல்வார்கள். ஆனால் ரெய்டு நேரங்களில் எந்தவித தகவல்களையும் வெளியே கசிய விடமாட்டார்கள். அதற்கு அவர்களுக்கு அனுமதியும் கிடையாது. அப்படி சொன்னால் அந்த அதிகாரிகள், மேலதிகாரியின் கடும் கோபத்திற்கு ஆளாவார்கள். எதிர்க்கட்சிகள் கேட்டால், சோதனை நடத்துகிறோம் என அறிக்கை சமர்பிப்பார்கள். அவ்வளவுதான். இந்த விவகாரத்தில் தற்போது எதிர்க்கட்சிகள் எல்லோரும், இதுவரை நடந்த ரெய்டுகளின் முடிவு என்ன ஆனது. தற்போது நடக்கும் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நடவடிக்கை என்றே சொல்கின்றனர்.



கணக்கில் காட்டப்படாத பணம், தங்கம் உள்ளிட்டவை இருந்திருந்தால் அந்த இடத்திலேயே படம் எடுத்து ரிலீஸ் ஆக்கியிருப்பார்கள். உதாரணத்திற்கு சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோது, டைரி கிடைத்தது, ரொக்கப்பணம் கோடிக்கணக்கில் கிடைத்தது, தங்கம் கிடைத்தது என வெளியிட்டார்கள். தற்போது தினகரனுடன் தொடர்புடையவர்களிடம் 3வது நாளாக ரெய்டு நடக்கிறது. இதுவரை எதுவும் பிடித்ததாக படமோ, ஆவணங்களோ வெளியிடவில்லை.



தினகரனுடன் தொடர்புடையவர்களிடம் ரெய்டு நடத்தி சூட்கேஸ் எடுத்துச் செல்வதுபோல் படம் வெளியாகிறது. அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என்பது யாருக்கு தெரியும். அப்படியே அதில் டாக்குமெண்டுகள் இருந்தாலும்கூட, கணக்கு காட்டப்பட்ட டாக்குமெண்டுகளாகத்தான் இருக்கும். ஒன்றிரண்டு கணக்கில் காட்டப்படாதவைகளாக இருக்கும். சம்மன் அனுப்பும்போது, அதற்கான கணக்கை காட்டிவிட்டால் போதுமானது. இல்லை அரசு விதிப்படி அபராதம் செலுத்தினாலும் போதுமானது. முறையான கணக்கு காண்பித்து மீண்டும் டாக்குமெண்டுகளை திருப்பி வாங்கும்போது பெரிதாக பேசப்படாது. ஆனால் முதலில் எடுத்துச் செல்லப்படுவதுதான் பெரிதாக பேசப்படுகிறது.



கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம், நகைகள் இருந்திருந்தால், இது வாட்ஸ் ஆப் காலம், இந்நேரம் புகைப்படம் எடுத்து பரப்பி விட்டிருப்பார்கள். அரசின் அனுமதிப்பெற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடாவிட்டாலும், எப்படியாவது வெளியிட்டிருப்பார்கள்.

விஜயபாஸ்கர் வீடு வரை ரெய்டு நடத்தி, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் வரை எப்.ஐ.ஆரில் கொண்டுவருகிறார்கள் என்பதை பார்க்கும்போதே, தங்கள் குடும்பத்தினருக்கு எதிராகவும் பாஜக இருக்கிறது என சசிகலா குடும்பத்தினர் புரிந்துகொண்டிருப்பார்கள்.



எப்படியும் தங்களுக்கு எதிராகவும் ரெய்டு நடக்க வாய்ப்புள்ளது என்பதையும் அறிந்திருப்பார்கள். அதனால், சட்டவிரோதமாக மாற்றப்பட்ட டாக்குமெண்டுகளோ, கணக்கில் காட்டப்படாமல் வாங்கப்பட்ட சொத்துக்களையோ, பினாமியின் பெயரில் உள்ள சொத்துக்களையோ இவர்கள் தங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஜெயலலிதாவுடன் இவ்வளவு நாட்கள் இருந்தவர்களுக்கு தங்களுடைய அரசியல் எதிரிகள் எப்படி திட்டமிடுவார்கள் என்பதைக்கூடவா யூகிக்க முடியாது? 

சில டாக்குமெண்டுகள் கிடைத்தது. அவையெல்லாம் கணக்கில் காட்டப்பட்டதாகத்தான் தெரிகிறது. கணக்கில் காட்டப்படாத டாக்குமெண்டுகளோ, பணமோ, நகைகளோ எதுவும் கிடைக்கவில்லை. அப்படியிருந்தால் எங்கள் கட்டுப்பாட்டையும் மீறி எப்படியாவது படம் வெளியாகி இருக்கும். சேகர் ரெட்டி வீட்டில் முதல் நாள் ரெய்டிலேயே பணம் கைப்பற்றப்பட்டது. உடனே படமும் எங்கள் கட்டுப்பாட்டை மீறி வெளியானது. மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. 3 நாள் ஆகியும் எந்த படங்களையும் வெளியிட முடியவில்லை என்பதை பார்க்கும்போது எதுவும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாக சில டாக்குமெண்டுகள் கிடைத்துள்ளன, அவற்றை அவர்கள் விளக்கம் கூறி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். உங்களைப் போன்றே எங்களுக்கு வந்த தகவலின்படிதான் ரெய்டு நடத்தினோம், ஆனால் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றனர்.

ஆனால் சில ஐ.டி. அதிகாரிகளோ, சசிகலா குடும்பம் இந்த ரெய்டுகளில் பலமாக சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறையும் சிபிஐயும் களத்தில் இறங்கும், கைதுகளும் நடக்கும் என தெரிவிக்கின்றன. ராஜசேகரன் என்கிற ஜெயலலிதா ஆடிட்டர் வீட்டில் 96 97ல் ஒருமுறை வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அந்த ஒரு ரெய்டின் விளைவாக ஜெயலலிதா மேல், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கு பாய்ந்தது. டிடிவி தினகரன், காபிபோசா சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்தார். ஒரு தடவை ரெய்டு நடத்தியதற்கே கடந்த 20 வருடங்களாக வழக்குகளை சசிகலா குடும்பம் சந்தித்து வருகிறது. 187 இடங்களில் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த ரெய்டில் பல வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.




முதல் நாள் பேட்டி கொடுத்த தினகரன், வருமான வரித்துறை சோதனையில் 1000 கோடிக்கு மேல் சிக்கிவிட்டதால் இரண்டாம் நாள் அடங்கிவிட்டார் என செய்திகள் வெளியானது. அதற்காக 3வது நாள் சோதனை நடக்கும்போது செய்தியாளர்களை சந்தித்தார்...

"வருமான வரி சோதனையை யாரும் எதிர்க்கவில்லை. உள்நோக்கம் கொண்டது என்றுதான் கூறுகிறோம். 1800 பேரை அனுப்பி சோதனை செய்யக்கூடிய உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. நான் காந்தியின் பேரன் அல்ல. என் மீது குற்றம் சுமத்துபவர்கள் காந்தியின் பேரன்களா? நான் தூய்மையானவன் என என்னால் கூற முடியும். எனது உறவினர்கள் குறித்து என்னால் எப்படி கூறமுடியும்? எனக்குத் தெரியாது. இன்கம்டேக்ஸை பொறுத்தவரை எங்கப்பா தனிநபர், நான் தனிநபர், என் மனைவி தனிநபர், நான் எனக்கு மட்டும்தான் சொல்ல முடியும். அதிகபட்சம் என் மனைவிக்காக சொல்ல முடியும். தங்கம் எடுத்தார்கள் என்றால் அது டிக்ளர்டா, அன்டிக்ளர்டா என பின்னர்தான் தெரியும். அரசியல்வாதிகள் என்றால் கோவணத்தோடுதான் அலைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா என்று எப்பவும் போல புன்னகையுடன் கூறினார் தினகரன்.

-நமது சிறப்பு செய்தியாளர்
படங்கள்: எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக்குமார், குமரேஷ்

சார்ந்த செய்திகள்