
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொகுதி முட்டுக்காடு ஊராட்சி இறையூர் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு குடி தண்ணீர் வழங்கப்படும் தண்ணீர்த் தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்திருந்ததால் 4 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குடி தண்ணீரில் மலம் கலந்த சம்பவம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் இறையூர் கிராமத்திற்குச் சென்று விசாரணை செய்த போது, தங்கள் கிராமத்தில் தங்களைக் கோயிலுக்குள் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை, டீ கடையில் தனி குவளையில் டீ கொடுக்கிறார்கள் என்று தீண்டாமை குறித்த புகார்களை பட்டியலின மக்கள் கூறினார்கள்.
அதனையடுத்து அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு அவர்களை அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தார் மாவட்ட ஆட்சியர். அப்போது சாமியாடிய பெண் சிங்கம்மாள் பேசியது தீண்டாமையை வலியுறுத்துவது போல இருப்பதாகக் கூறி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதே போல, கோயில் வழக்கம் இப்படித்தான் என விளக்கமளித்த அஞ்சப்பன் மீதும் வழக்கு பாய்ந்தது. அதே போல மூக்கையன் என்பவரின் டீ கடைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் குழுவினர், அங்கு இரட்டைக்குவளை முறை செயல்படுவதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்து மூக்கையாவை கைது செய்தனர்.
இந்த நிலையில், இன்று அய்யனார் கோயில் வளாகத்தில் கூடிய கிராம மக்கள் நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம். தற்போது பிரிவினையை ஏற்படுத்தியுள்ளனர். விசாரணை செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீரில் மலம் கலந்தவர்களைக் கண்டறிய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லத் தயாராகி வருகின்றனர்.
இறையூர் கிராமம் கடந்த 3 நாட்களாக பரபரப்பாகவே காணப்படுகிறது.