
எந்தவொரு நாடாக இருந்தாலும், மாநிலமாக இருந்தாலும் உளவுத்துறையே அதன் பாதுகாப்பின் முதுகெலும்பாகும். இவர்கள், மாவட்டம் மற்றும் தாலுகா வாரியாக காவல்துறை தலைமையகம் மற்றும் காவல் நிலையங்களில் பணியாற்றிக்கொண்டு, அன்றாடம் நடக்கும் குற்றச்செயல்கள் முதல் நாட்டு நடப்பு மற்றும் அரசியல் சூழல்கள் வரை அவ்வப்போது தங்கள் மேலிடத்திற்கு தகவல்களை தெரிவிப்பார்கள். இதனை அடிப்படையாகக்கொண்டே அரசும் முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு முறையும் புதிய அரசு பதிவியேற்ற உடனேயே இந்த உளவுத்துறை காவலர்களின் முந்தைய செயல்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, அவர்களைப் பணியிடமாற்றம் செய்வதோ அல்லது அதே இடத்தில் நீட்டிக்க வைப்பதோ உண்டு.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டு உளவுத்துறை அதிகாரிகளை உடனே பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை காவல்துறை வட்டாரத்தில் இருந்து தற்போது கசிந்துள்ளது. அதாவது, திருச்சி மாநகர உளவுத்துறையில் பணியாற்றி வரும் கணித மேதையின் பெயர் கொண்ட ஆய்வாளரும், அதே பிரிவில் பணியாற்றும் ‘மணக்கும்’ சிரிப்பு நடிகரின் பெயர்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளரும் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திருச்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்காக களமிறங்கி வேலை பார்த்ததாகவும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் வீக்காக உள்ளது?
அதிமுக வேட்பாளர்கள் தங்கள் நிர்வாகிகள் மூலமாக ஓட்டுக்காக ஒப்படைத்த பணம் முழுமையாக பொதுமக்களை சென்று சேர்ந்ததா? போன்ற தகவல்களை அவ்வப்போது சேகரித்து, அந்தந்த அதிமுக வேட்பாளர்களுக்குத் தெரியப்படுத்தி வந்ததாகவும், தனியார் நிறுவனங்களைப் போல அவர்களுக்காக ‘பேக்கேஜிங்’ அடிப்படையில் பணியாற்றியதாகவும், இதற்காக, அந்த உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் ஒவ்வொரு வேட்பாளரிடமிருந்தும் பல லகரங்களைக் கூலியாக பெற்றதாகவும் அதிர்ச்சித் தகவல்களைக் கசிய விடுகிறது திருச்சி காவல்துறை வட்டாரம். காவல்துறையின் அந்த 2 கருப்பு ஆடுகளையும் பின்னின்று இயக்கியது இதே திருச்சி மாநகர நுண்ணறிவுப் பிரிவில் இதற்கு முன்பு உதவி ஆணையர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற நான்கெழுத்து பெயர்கொண்ட அதிகாரியும், அவருக்கு முன்பு அதே சீட்டில் இருந்து ஓய்வுபெற்ற மூன்றெழுத்து அதிகாரியும்தான் என அடித்துக் கூறுகிறது விபரமறிந்த அந்த வட்டாரம்.
காரணம், பணி ஓய்விற்கு பிறகும் தங்களின் அரசியல் தொடர்புகள் மூலம் காரியங்கள் சாதித்து, அதன் மூலமும் அவர்கள் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே, தற்போது திமுக ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற அந்த இரு அதிகாரிகளும் தங்களுக்கு வேண்டிய சிலர் மூலம் திமுக முக்கியப் புள்ளிகள் சிலரை அணுக முயற்சி செய்து வருவதாகவும், அவர்கள் மூலமாக அந்த 2 கருப்பு ஆடுகளும் இதே உளவுத்துறையில் தொடர முயற்சி செய்து வருவதாகவும் கூறும் காவல்துறை வட்டாரம், ‘அந்த இருவரையும் உடனே களையெடுத்தால் மட்டுமே திருச்சி சிட்டியில் காவல்துறையால் சிறப்பாக செயல்பட முடியும்’ எனவும் சைரன் அடிக்கிறது. திருச்சி மாநகரக் கவல்துறையின் இந்தப் புலம்பல்கள் புதிய ஆட்சியாளர்களின் காதுகளை எட்டுமா...?