Skip to main content

மூன்றாண்டு கால மத்திய ஆட்சி! முச்சந்தியில் நாட்டு மக்கள்! மு.க.ஸ்டாலின் மடல்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
மூன்றாண்டு கால  மத்திய ஆட்சி! முச்சந்தியில் நாட்டு மக்கள்! மு.க.ஸ்டாலின் மடல்
 
என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நாட்டு நிலவரம் குறித்த மடல்.
 
வண்ண வண்ண மத்தாப்புகளால் வாணவேடிக்கை காட்டுவது போல, வாக்குறுதிகளை அள்ளி வீசி, பெரும் பொருட்செலவில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இடைவிடாத பிரசாரம் செய்து, தனிப் பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆட்சி செய்யும் வகையில் வாக்குகளைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. 

அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா எனக் கேட்டால் மத்திய ஆட்சியில் இருப்பவர்களால் பதில் சொல்ல முடியாது. ஆனால், ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்து வரும் தண்டனைகளை, அவர்களைச் சார்ந்தவர்களே வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருப்பதில் இருந்து, மத்திய ஆட்சியின் மூன்றாண்டு கால செயல்பாடுகள் சாதனையா - வேதனையா என்பது அம்பலமாகியுள்ளது.
 
“வளர்ச்சி” என்ற முழக்கத்தை 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முன்வைத்து, வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மூன்று வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, நாட்டை “வீழ்ச்சி” என்ற பாதைக்குக் கொண்டு போய்விட்டது. 
“அடித்தட்டு மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும், அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ‘ஆதார் எண்’ கட்டாயமாகக் கொடுக்க வேண்டும், ரொக்கமாக பணம் பரிவர்த்தனை செய்வதை கைவிட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்”, என்று கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியுள்ள கெடுபிடியான நடவடிக்கைகள் இன்றைக்கு அனைத்துத் தரப்பையும் பாதித்து விட்டது.
 
“ஆதார் கார்டுகளை கட்டாயமாக்கக்கூடாது”, என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது. ஆனால், அதையும் மீறி, ‘எதிலும் ஆதார் மயம்’, என்று மக்களை இந்த மூன்று வருட காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது இந்த அரசு. ஆதார் கார்டுகளின் நம்பகத்தன்மை, தனிமனித பாதுகாப்பு குறித்த நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, சர்வாதிகாரமாக செயல்படுகிறது மத்திய அரசு.
 
அதன் காரணமாக, அனைத்துத்தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானதற்குச் சரியான எடுத்துக்காட்டாக, 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட விவகாரம் அமைந்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, இரவோடு இரவாக செல்லாதவை என்று அறிவித்து, இந்திய நாட்டின் 90 சதவீத மக்களுக்கு தாங்க முடியாத துயரத்தை மாதக்கணக்கில் கொடுத்த அரசுதான் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 

அதன் காரணமாக, வங்கிகளின் முன்பு வரிசையில் நின்றே உயிரைப் பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் அதிகம். ‘நீண்ட வரிசையில் நின்று பா.ஜ.க.விற்கு வாக்களித்த ஒரே பாவத்திற்காக, அதேபோன்று நீண்ட வரிசையில் நின்றதால் மாண்ட சோகம்’, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டது.
 
தாங்கள் உழைத்து சம்பாதித்து சேமித்தப் பணத்தை எடுப்பதற்காக வங்கி வாசலிலும், ஏ.டி.எம்.கள் முன்பாகவும் நீண்ட வரிசையில் நின்றவர்களில் ஒருவராக நீங்களும் இருந்திருப்பீர்கள். கூலி வேலைக்கு செல்வோரும், அமைப்பு சாரா தொழிலாளர்களும் தங்கள் பணிகளுக்குச் செல்ல முடியாமல், வங்கிகளின் முன்பு கொடுமையான வகையில் நீண்ட வரிசைகளில் கால் கடுக்க நின்றார்கள்.
 
உச்சநீதிமன்றமே தலையிட்டு சில நிவாரணங்களை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தபோது கூட, “அதெல்லாம் முடியாது”, என்று ஆணவத்துடன் மறுத்தது இந்த பா.ஜ.க. அரசு. முன்னால் பிரதமரும், சிறந்த பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், “பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு இமாலய தவறு”, என்று பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக வாதிட்டபோது, பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர்களும், தலைவர்களும் அவரை எள்ளி நகையாடினார்கள்.
 
பா.ஜ.க.வில் உள்ள சில அறிவு ஜீவிகள் “பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகச்சிறந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை”, என்று பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி, மோடி தலைமையிலான  அரசுக்கு முட்டுக் கொடுத்தார்கள். ஆனால், அப்படிப்பட்ட அறிவுஜீவிகள் எல்லாமே இப்போது, “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது”, என்று மனம் திருந்திய மைந்தர்களாக கருத்துச் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது. 

ஆதார், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற தாக்குதல்களில் இருந்து மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்பாகவே, அடுத்த ‘சுனாமி தாக்குதலாக’ சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எனும் ஜி.எஸ்.டி.யும் நடு இரவிலேயே நாடாளுமன்றத்தைக் கூட்டி அமல்படுத்தப்பட்டது.
 
இந்தச் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களுக்கு, “முறையாக திட்டமிடல் செய்யும்வரை ஜி.எஸ்.டி. அமல்படுத்தவதை தள்ளி வையுங்கள்”, என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தார்கள். 

அதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு பாதிப்பு என்றும், வர்த்தகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சிக்கு உள்ளாகும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்று, அனைத்து எதிர்கட்சிகளுமே எச்சரித்தோம். ஆனால், ‘தனி மெஜாரிட்டி’ இருக்கிறது என்ற அதிகார போதையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த 8 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்து விட்டது.
 
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. பாதிப்புகள் குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள பொருளாதார பாதிப்புகள் கடுமையானவை. 

அந்தக் கட்டுரையில், “இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனியார் முதலீடுகள் குறைந்து விட்டன. தொழில் உற்பத்தி சீர்குலைந்துவிட்டது. விவசாயம் பேரிடரில் மாட்டிக் கொண்டுள்ளது. கட்டுமானத் தொழில் நிலைகுலைந்து விட்டது. ஏற்றுமதி குறைந்துவிட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சீர் செய்யமுடியாத பொருளாதாரப் பேரிடரை ஏற்படுத்தியிருக்கிறது. பல லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டார்கள். பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. வழக்கமான அளவுகோளின்படி பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட்டால், இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 3.7 சதவீதமாகக் குறைந்து விட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பண பரிவர்த்தனை முடங்கி விட்டது”, என்றெல்லாம் அவர் கூறிவிட்டு, “ஏழ்மையை நெருங்கிய வட்டத்தில் இருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று பிரதமர் கூறியிருக்கிறார். 

ஆனால் அவரது நிதியமைச்சரோ அனைத்து இந்தியர்களும் ஏழ்மையை நெருங்கிய வட்டத்தில் இருந்து பாருங்கள் என்பதற்காக கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்”, என்று நெற்றியில் அடித்தார் போல் மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதார சீரழிவுகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.
 
சுயவிமர்சனம் என்று சொல்வதுபோல சொந்தக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே பா.ஜ.க.வின் மூன்றாண்டு கால அரசின் பொருளாதாரச் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சரிசெய்து மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, கட்டுரை எழுதிய கட்சிக்காரரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 

திரு.யஷ்வந்த் சின்ஹா மட்டுமல்ல, பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவரும், பொருளாதார நிலவரங்கள் குறித்து அலசுபவருமான டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி அவர்கள், “ஏற்றுமதியும், இறக்குமதியும் தொடர்ந்துக் குறைந்து கொண்டே வருகிறது. இல்லத்தரசிகளின் சேமிப்பும் குறைந்து விட்டது. மிகப்பெரிய பொருளாதார சீரழிவை நாடு சந்தித்துள்ளது. வங்கிகளும், தொழிற்சாலைகளும் மூடப்படும் என்பதை எல்லாம் விளக்கி, பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு முன்கூட்டியே 16 பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறேன்”, என வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

மேலும், “பொருளாதார பேரிடர் உருவாகப் போகிறது”, என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆகவே, எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விட மிக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களே முன்வைத்து, பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் பொருளாதாரம் எப்படி வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 
தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே! பா.ஜ.க. ஆட்சியை, அக்கட்சியைச் சார்ந்தவர்களே விமர்சித்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பதை முழுமையாக அறியும்போது அதிர்ச்சியும், வேதனையுமே மிஞ்சுகிறது. அதுதொடர்பாக மேலும் சில பொருளாதார வல்லுநர்கள் தரும் தகவல்களை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். 

2014 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சமயத்தில், உலக அளவிலான ஜி.டி.பி. உயர்ந்து கொண்டிருந்தது. இந்தியாவில் அது வேகமெடுத்தது. ரூபாய் நோட்டின் மதிப்பு நிலைப்படுத்தப்பட்டது. ஏற்றுமதி என்பது இரட்டை இலக்கத்தில் இருந்தது. இதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பெருமிதப்பட்ட பிரதமர் மோடி அவர்கள், “இந்திய மக்களுக்கு நல்லநாள் வந்து கொண்டிருக்கிறது. அச்சா தின்”, என்றார். அந்த நாள் வந்ததா, வருமா என்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் பிரதமரால் உத்திரவாதம் தர முடியாத நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
 
கடந்த 30 ஆண்டுகளில் முழுமையான பெரும்பான்மையுடன் மத்தியில் அமைந்த அரசு என்ற பெருமையைப் பெற்ற நிலையிலும், மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றாமல், அதனை வீணடித்த சாதனையைத்தான் செய்திருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒருபங்கு அளவில்தான் உலகளாவிய கச்சா எண்ணெய்யின் விலை இருக்கிறது. 

ஆனால், பெட்ரோல் - டீசல் விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டது. வாகன எரிபொருளான பெட்ரோலும், டீசலும் விலை உயர்ந்தால், மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் என்பது பொருளாதாரத்தின் அரிச்சுவடி. அதுதான் நடந்துள்ளது.
 
தனியார் முதலீடுகளும் தகர்ந்துவிட்டன. இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி பலமடங்கு சரிந்துவிட்டது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதுடன் இருந்த வேலைவாய்ப்புகளும் பறிபோகின்றன. வணிகம் சார்ந்த நம்பிக்கைகள் பொய்த்துப் போகின்றன. வங்கிகளில் உரிய கடனுதவிகள் வழங்கப்படவில்லை. கடனுதவி இல்லாத நிலையில் வணிகம் மேம்படாது. வணிகம் மேம்படாவிட்டால் வேலைவாய்ப்புகள் பெருகாது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு போன்ற அபாயகரமான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் உடைந்து நொறுங்குகிறது.
 
ஜி.டி.பி. என்கிற மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுகோலைக் காட்டி, ஆரம்பத்தில் பிரதமர் மோடியும், பா.ஜ.க. அரசும் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டிருந்தன. அந்தக் கணக்கும் கூட, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக செயற்கையாக அமைந்ததே தவிர, இந்த ஆட்சியின் சாதனை அல்ல. பெட்ரோலிய பொருட்கள் மீது பலவித வரிகளை விதித்து, வணிக வளர்ச்சியை சிதைத்து, பொருளாதாரத்தை சீரழித்ததுதான் மோடி அரசின் வேதனை மிகுந்த சாதனை. கச்சா எண்ணெய்யின் விலை, சர்வதேச சந்தையில் மீண்டும் உயருமானால், இந்திய பொருளாதாரம் என்னாகுமோ என்ற அச்சம் அனைத்துத் தரப்பையும் சூழ்ந்துள்ளது.
 
அதன் மோசமான விளைவுகளை இந்தியா முழுவதும் காண்கிறோம். உங்களில் ஒருவனாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பயணிக்கும் போது நானும் அதனை உணர்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் ‘டாலர் நகரம்’ எனப்படும் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் நசிவடைந்ததும், திண்டுக்கல்லில் தோல் ஏற்றுமதி வணிகம் முடங்கியதும், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் நிர்வாகத்திறன் எப்படி இருக்கிறது என்பதற்கு வேதனைக்குரிய சாட்சிகளாக இருக்கின்றன.
 
’வளர்ச்சியும் ஏற்படவில்லை, ஊழலும் ஒழியவில்லை, கறுப்புப் பணமும் ஒழியவில்லை, ஊழல் புரிந்தோரை தண்டிக்கும் லோக்பாலும் இதுவரை அமைக்கப்படவில்லை, ஏழ்மையும் நீங்கவில்லை’. அதற்கெல்லாம் மாறாக, மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியில் ஏழை எளியவர்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியும் காணவில்லை. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிற்கும் 15 லட்சம் ரூபாயும் வரவில்லை. ‘வளர்ச்சி’ என்று கூறிவிட்டு தங்களின் ‘காவிக் கொள்கை’யைப் புகுத்தி, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் இந்தியாவில், மதத்தின் பெயரால் மாட்டிறைச்சி உண்பதைத் தடுத்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களிடம் துவேஷத்தை எழுப்பி, நாட்டுப் பற்று மிக்கவர்களைக் கூட, “தேசவிரோதிகள்”, என்று சித்தரிக்கும் போக்கினால், உழைக்கும் மக்களை முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.
 
ஆட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற அதிகார போதையில் செயல்படும் முறையற்ற போக்கினை உடனடியாக கைவிட்டு, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவர்களும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
 

சார்ந்த செய்திகள்