Skip to main content

'அந்த வேதனைதான் என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது' -ஸ்டாலின் 

Published on 13/01/2019 | Edited on 13/01/2019

 

d


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  இன்று (13.1.2019) அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது ஸ்டாலின்,   ‘ஸ்டாலின் துணை முதல்வராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்குச் சென்றாரா என்று ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டிருக்கிறார் எடப்பாடி.  அமைச்சராக, துணை முதலமைச்சராக நான் செய்த சாதனைகளை எடப்பாடி அறிய மாட்டார்.

 

அவருக்கு எனது பதில் இதோ!   2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தியது நாங்கள்தான். பல ஆண்டுகளாக 4 ஊராட்சிகளுக்கு தேர்தலே நடத்தப்படாத நிலை இருந்தது.  பாப்பாரம்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் கொட்டக்கச்சியேந்தல் கிராமத்துக்கும் 2006ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அந்த மக்களிடத்தில் பேசி ஒரு சுமுகமான சூழ்நிலை ஏற்படுத்தி சுமுகமாக தேர்தலை நடத்திய பெருமை, நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதுதான்.

 

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க நிதி ஆதாரத்தைப் பெருக்க அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த என் தலைமையில்தான் குழு அமைக்கப்பட்டது. ஊராட்சிகளுக்கு அதிகாரம் மற்றும் நிதி வழங்கும் 99 பரிந்துரைகளை அளித்து தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றினோம்.

 

தல வரியையும், தலமேல் வரியையும் முழுமையாக, நாள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ரத்து செய்தேன்.   குட்டை பராமரிப்புப் பணியை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கினோம்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தரப்படும் நிதியை அதிகப்படுத்திக் கொடுத்தோம்.  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 - உள்ளாட்சிகள் தின விழா கொண்டாட வேண்டும் என அறிவித்துக் கொண்டாடினோம்.

 

கிராமங்களில் எல்லா மதம், சாதியைச் சேர்ந்தவர்களும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக, தந்தை பெரியார் பெயரில் “சமத்துவபுரங்கள்” உருவாக்கினோம்.

 

ஊரகப் பகுதிகளில் “நமக்கு நாமே” திட்டத்தை ஏற்படுத்தித் தந்தோம்.  “அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்” எனும் ஒரு அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்த ஒவ்வொரு ஆண்டும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களின் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் விருப்பத்துக்கேற்ப ஒரு ஊராட்சியைத் தேர்ந்தெடுத்து, அந்த ஊராட்சியின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய நிலையிலே 20 லட்ச ரூபாய், அந்தத் திட்டத்தின் அடிப்படையில் உள்ளாட்சித் துறையின் சார்பில் வழங்கினோம்.   மற்ற துறைகளெல்லாம் சேர்த்து, ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வழங்கி, பல திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.  அதுபோல் “கலைஞர்  வீடு வழங்கும் திட்டம்” எனும் பெயரில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தோம்.  அதுமட்டுமில்லை,

 

ஒரு மிகப்பெரிய சாதனையாக தமிழகத்தில் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகள் உள்ளன.  அத்தனை ஊராட்சிகளிலும் நூல் நிலையங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

2006ஆம் ஆண்டு 29 ஆயிரம் கிலோ மீட்டர் ஊரகச் சாலைகளை 54 ஆயிரம் கிலோ மீட்டர் ஊரகச் சாலைகளாக அதிகரித்து கொடுத்திருக்கிறோம்.  மகளிர் சுயஉதவிக் குழுவினரைப் பொறுத்தவரை நான் அந்தத் துறையின் அமைச்சராக இருந்த நேரத்தில், 6364 கோடி ரூபாய் சுழல் நிதி, வங்கிக் கடன், மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டது.  அதுமட்டுமில்லை, ஒவ்வொரு மாவட்டமும் நானே நேரடியாகச் சென்று அந்த திட்ட உதவிகளை நானே வழங்கியது மறக்க முடியாத ஒன்று.

 

அதுமட்டுமல்ல, தண்ணீர் தாகத்தைத் தீர்த்து வைப்பதுதான் முக்கியமான பிரச்சினை, தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 616 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.
அதேபோல, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க, ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர்த்திட்டம், இப்படிப் பல திட்டங்கள் கொண்டு வந்தோம்.


இன்னும் சொல்ல வேண்டுமேயானால் - மீஞ்சூரில், நெம்மேலி பகுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.  இப்படி பல திட்டங்களை என்னால் அடுக்கிக் காட்ட முடியும்.  இந்தத் திட்டங்களை எல்லாம் சொல்லும்போது, அவை என் பெயரைச் சொல்லும்.   ஆனால் இன்று கொலைகள் - கொள்ளைகள் - வழிப்பறிகள் - கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் இவற்றைக் குறிப்பிட்டால், அவை எடப்பாடியின் பெயரைத்தான் சொல்லணும்.  அதுதான் இன்று இருக்கக்கூடிய நிலை.

 

அதுமட்டுமில்லை, இன்னொன்றைத் தொடர்ந்து திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.   அதாவது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு, தி.மு.க. வழக்கு போட்டதுதான் காரணம் என்று சொல்கிறார்கள்.  தி.மு.க. வழக்குப் போட்டது உண்மை.  ஆனால், தேர்தலை நிறுத்த வேண்டும் என தி.மு.க. வழக்குப் போடவில்லை.  தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றுதான் எங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குப் போட்டது உண்மை.   அதில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்க வேண்டும் எனக் கோரினோம்.  முக்கியமாக, இடஒதுக்கீடு என்னென்ன சமுதாயத்திற்கு எவ்வளவு இருக்க வேண்டும் என இருக்கிறது.

 

குறிப்பாக - சென்னையைப் பொறுத்தவரை, மலைவாழ் மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என இருக்கிறது. அப்படி ஒதுக்காமல், வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தலை நடத்த முயற்சித்தார்கள்.  அந்த நேரத்தில்தான், இதனை முறைப்படுத்த வேண்டும் என நாங்கள் நீதிமன்றம் போனோம்.  நீதிமன்றம், “இதை முறைப்படுத்தி தேர்தலை நடத்துங்கள்” என உத்தரவு போட்டது.  தி.மு.க.தான் நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் நிறுத்தியது எனும் குற்றச்சாட்டை ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்.  2017 மே மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நடத்தினார்களா? இல்லை.

அதற்குப்பிறகு, 2017 - நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு போட்டது.  அப்போதும் தேர்தலை நடத்தவில்லை.    அதுமட்டுமல்ல, உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையரை கூப்பிட்டு, “உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்! நீங்கள் சிறைக்குப் போக வேண்டிய சூழ்நிலை கூட வரும்” என்று உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு போட்டது.  அதற்கும் இந்த ஆட்சியாளர்கள் பயப்படவில்லை.

 

இப்போது, கடந்த 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்துவோம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அரசு நீதிமன்றத்தில் கூறியது.  இதைச் சொல்லி 6 மாதங்கள் ஆகிறது.  ஆனால் இதுவரை இந்த ஆட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.  இது யாருடைய தவறு? என் தவறா? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தவறா? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  நான் முதலமைச்சர் இல்லை.  தேர்தல் ஆணையம் எனது கட்டுப்பாட்டிலா இருக்கிறது? இந்த அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.   ஆகவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு யார் காரணம் என்று நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.    அடுத்து இன்னொரு முக்கியமான செய்தி.  முதலமைச்சராக இருந்து மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்கு இணையானது, ஊட்டியில் இருக்கக்கூடிய கொடநாடு பங்களா!

 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்திலும், சரி அவர் மறைந்த பிறகும் சரி, கொடநாடு பங்களாவில் மர்மமான மரணங்கள், திருட்டுக்கள், கொள்ளைகள், கொலைகள், தற்கொலைகள், விபத்துக்கள் தொடர்ந்து நடந்திருக்கிறது. அதில் குறிப்பாக, கொடநாடு பங்களாவில் பணிபுரியும் காவலாளி ராவ் பகதூர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆப்பரேட்டராக இருந்த தினேஷ்குமார், தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்.

ஜெயலலிதா கார் டிரைவராக இருந்த கனகராஜ், சாலை விபத்தில் பலியாகியிருக்கிறார். கனகராஜால் கொள்ளை அடிக்க நியமிக்கப்பட்டிருக்கும் சயன் என்பவரின் மகளும், மனைவியும் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள்.

 

இந்த தற்கொலை, கொலை விபத்துகளுக்கு பின்னணி யார் என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கின்றது.  அதனைத் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் அவர்கள் விசாரணை நடத்தினார். சி.டி. தயாரித்து அதனை நேற்று முன்தினம் புதுடெல்லியில் வெளியிட்டு இருக்கிறார்.

அதுமட்டுமல்ல, சயன் என்பவரும், வலையார் மனோஜ் என்பவரும் நேற்றும் சொல்லி இருக்கிறார்கள். நேற்று முன்தினமும் சொல்லி இருக்கிறார் கள். பேட்டியும் கொடுத்து இருக்கிறார்கள்.   இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி சொல்லிதான் நாங்கள் செய்தோம். அப்படின்னு மேத்யூ சொல்கிறார்.

நேற்று எடப்பாடி பத்திரிகை யாளர் களை சந்தித்து இருக்கிறார். மேத்யூ கூறியதைப் பற்றி எடப்பாடி யால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை! பதில் சொல்ல வில்லை! எடப்பாடி பதி லைப் பார்த்தால், இந்த விவகாரத் தில் முழு குற்றவாளி அவர்தான் என்பது மிக தெளிவாகத் தெரி கின்றது.

 

கனகராஜ் என்பவரை எனக்குத் தெரியாது என்று சொல்லவில்லை. சயன் என்பவரையும் எனக்குத் தெரியாது என்று சொல்லவில்லை.

2000 கோடி ரூபாய் பணம் கொட நாட்டில் இல்லை என்றும் சொல்லவில்லை. 5 கோடி ரூபாய் பேரம் பேசப்படவில்லை என்றும் சொல்லவில்லை.

 

கனகராஜ் மரணம் விபத்துதான் என்றும் சொல்லவில்லை.  சயனின் மனைவியும் மகளும் சாலை விபத்தில் தான் இறந்தார்கள் என்றும் சொல்ல வில்லை,

தினேஷ்குமார் தற்கொலைதான் செய்து கொண்டார் என்றும் சொல்லவில்லை.

கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்தது என்று  எடப்பாடி சொல்லவில்லை - எந்த பதிலும்  சொல்லாமல், அவர் சொன்னது வழக்கு நடக்குது அதையும் தாண்டி அரசியல் சதி என்று  ஒரு பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கிறார்.

இன்றைக்கு அவர் பேட்டி தரும்போது பார்த்தால் தெரியும், அவருடைய முகம் எப்படி இருண்டு போய் இருக்கிறது. அவரால் பேசவே முடியவில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது.


    நான் கேட்கிறேன். கொலையை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று அவரால் சொல்ல முடியுமா?   இந்தப் புகாரை விசாரிக்க நீதி விசாரணை அமைக்கப்படும் என்று அவரால் சொல்ல முடியுமா?  இந்த 5 பேர் மரணம் கொலைதான் என்றும். இதில் எடப்பாடி சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் பகிரங்கமாக  மேத்யூஸ் சொல்லி   இருக்கிறார். உடனே சொன்னவர்மீது வழக்கு போடுகிறார் என்றால் ஏன் பயம்?


நடந்தது விபத்துதான் என்று முதல்வர் நிரூபிக்க வேண்டும். இது வரையில் நடந்த விசாரணைகளையும், வாக்குமூலத்தையும் மக்களுக்கு தெரியப்படுத்தட்டும், அதற்கு எடப்பாடி தயாராக இருக்கிறாரா?

சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்க முடியாத சூழ்நிலையில் இன்றைக்கு சி.பி.ஐ. இருக்கு! திக்கு முக்காடிக்கிட்டு இருக்கு!  அதனால் சிறப்பு விசாரணை ஒன்றை மத்திய அரசு உடனே அமைத்து, அமைப்பது மட்டுமல்ல, அதனை, சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் - கண்காணிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த விசாரணை ஆணையம், எடப்பாடியை எதிர்த்தல்ல, இன்றைய அமைச்சர்கள், சசிகலாவின் குடும்பத்தினர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும், அதுதான் நல்லது.

 

   கொட நாடு பங்களாவில் இருந்ததாக சொல்லப்படுகின்ற 2000 கோடி ரூபாய் எங்கே? என்று நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.    இந்திய வரலாற்றிலேயே ஒரு கொலை குற்றவாளி முதல மைச்சராக இருப்பது தமிழ்நாட்டில் தான் என்று நான் சொல்லவில்லை; பத்திரிகையாளர் மேத்யூஸ் சொல்லி இருக்கிறார்.  இதைவிட கேவலம். இதைவிட அசிங்கம் தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக இருக்க முடியாது.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கை என்னவென்று கேட்டால், எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைத்திட வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில், இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும். முதல்வரை அழைத்து குடியரசுத் தலைவரும், ஆளுநரும் இதற்கு விளக்கம் கேட்க வேண்டும்.

மேத்யூ, சயன், வலையார் மனோஜ் ஆகியோருக்கும், அவர் களுடைய குடும்பத்தாருக்கும் மத்திய அரசு உரிய வகையில் பாதுகாப்பு அளித்திட வேண்டும்.

குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை தி.மு.கழகம் கொண்டு செல்ல இருக்கின்றது.

 

நாளை கவர்னரிடம் நேரம் கேட்டு இருக்கிறோம். நாளை தந்தால் இந்த விஷயத்தை அவரிடம் தெளிவாக எடுத்துச் சொல்வோம். இந்தப் பிரச் சினையில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயமாக சொல் கிறேன், தி.மு.கழகத்தின் சார்பில் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.

 

முறையான விசாரணை செய்யப்பட்டு, ஒருவேளை முதல்வர் அவர்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக தி.மு.கழகம் மகிழ்ச்சி யடையும்,

ஏனென்றால், தமிழக முதல்வர் பதவியை வைத்துக் கொண்டு,  உயர் மனிதர்கள் வகித்த பதவியில்  முதல்வராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய ஒருவர் கொலை, கொள்ளை என்ற நிலை வருகின்றபோது தமிழகத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவாக வந்துவிடும். அதனை நினைத்துதான் தி.மு. கழகம் வருத்தப்படுகிறது. எனவே தி.மு.கழகம் தனது ஜனநாயகக் கடமையாக இதனைக் கருதி இந்தப் பிரச்சினையின் உண் மையை மக்களுக்கு தெரியப் படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத் தோடு மட்டும்தான் சொல்லப்படுகிறது என்று நான் ஊடகம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இதனைவிட கொடுமை என்ன வென்றால் அப்பவே - மருத்துவ மனையில் நடந்ததை விட, கொட நாட்டில் நடந்திருக்கிறதை விட எனக்கு அதிர்ச்சி தரக் கூடிய செய்தி எது என்று கேட்டால், இப்படி ஒரு செய்தி நேற்று முன்தினம் வெளியாகி இருக்க, ஆனால் தமிழக டி.வி. சேனல்கள் பெரும்பாலும், இதனை வெளியிட வில்லையே என்கிற அந்த வேதனைதான் என்னை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

 

நான் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அறிக்கை கொடுத்தேன்.

பாரம்பரியமிக்க பத்திரிகைகள்கூட அதனை வெளியிட வில்லை என்பது உள்ளபடியே வெட்கப்பட வேண்டிய ஒன்று, இதுதான் பத்திரிகை தர்மமா? ஊடக தர்மமா? என்ற கேள்வியைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்.

ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை, பேட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் குரல்கள், அந்த அறிக்கைகள் எல்லாம் வெளியிடப் படாததற்கு  என்ன காரணம்? தமிழ் நாட்டில்  பத்திரிகை, ஊடக நிறுவனங்கள் இருக்கின்றன. காரணம் அந்த அளவிற்கு ஊடகங்கள் எல்லாம் மிரட்டப்படுகின்றது. இதுதான் உண்மை!

 

மேத்யூ பேட்டியில் சந்தேகம் இருந்தால் என்ன செய்து இருக்க வேண்டும், அவரிடம் கேள்வியாக கேளுங்கள், மனைவியையும், மகனையும் இழந்து சயன் என்பவர்,  மனிதராக உங்களுக்குத் தெரியவில்லையா? இந்த நாட்டில் எல்லா ஊடகங்களும் இன்றைக்கு எடப்பாடிதான் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் என்பது தெரிகின்றது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதவி விலகினால், கைது  செய்யப் பட்டால் அந்த செய்தியையாவது நீங்கள் போடுவீர்களா ? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு இருக்கு! ஆகவே நான் ஊடகங்களை நோக்கி நான் கேட்கின்ற கேள்வி,  இது பத்திரிகை தர்மமா? என்ற கேள்வியைத்தான் நான் கேட்க விரும்புகிறேன்!

ஆகவே இந்தப் பத்திரிகைகள் எல்லாம் மிரட்டப்பட்டு, இந்த செய்திகள் எல்லாம் வெளியிட முடியாத அளவிற்கு இந்த ஆட்சி செய்கிறது என்றால்,  “எங்கப்பன், குதிருக்குள் இல்லை” என்பதை அவரே இன்றைக்கு வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை! ஆகவே இந்தச் செய்தியையாவது நீங்கள் போடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் என்னுடைய இந்த விளக்கத்தை முடித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்தார்.

 


தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலும் வருமாறு:-

செய்தியாளர் :-           எடப்பாடி நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் ஒன்றரை வருடங் களாக நடக்கிறது. சயன் என்பவரும் மற்றவர்களும் 22 முறை நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்கள். அப்போது சொல்லாதவர்கள், இப்போது சொல்வது ஏன் என்று கேட்டு இருக் கிறாரே?

மு.க.ஸ்டாலின்:-    அதற்கு முறையான விசாரணை கமிஷன் அமையுங்கள், அப்போது உண்மை வெளி வரும். எடப்பாடியிடமே கேளுங்கள்!

 

செய்தியாளர்:-            இதில் அரசியல் பின்னணி இருக்குன்னு சொல்கிறாரே எடப்பாடி?

மு.க.ஸ்டாலின்:-    அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்; அதனால்தான், தான் தப்பித்துக் கொள்வதற்காக எதை எதையோ சொல்லிக் கொண்டு இருக்கிறார். நான் எது சொன்னாலும் நீங்கள் போடப் போவதில்லை. மேலும் நீங்கள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டு இருக்கக் கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிகிட்டேயே நேரில் போய் கேளுங்கள்!

படம்: ஸ்டாலின்

சார்ந்த செய்திகள்