ADMK former minister case Police paste leaflet at the house of the offender who did not appear

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமானவர் வடகாடு அ. வெங்கடாசலம். இவர் கடந்த 2010 அக்டோபர் 7 ஆம் தேதி மாலை அவரது வீட்டில் வைத்து ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தையடுத்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து பேராவூரணி கணேசன், வீரக்குடி முத்துக்குமார் உள்ளிட்ட இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு - பாண்டிச்சேரி எல்லையில் பதுங்கி இருந்த போது கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் சில மாதங்களில் பிணையில் வெளியே வந்தவர்களில் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரக்குடி கிராமத்தைச் சேர்ந்த இராமசாமி மகன் குமார் என்கிற (வீரக்குடி) முத்துக்குமார் (வயது 45) என்பவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகாத முத்துக்குமாருக்கு ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிரப்பித்த நிலையில் வடகாடு போலீசார் மீண்டும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

Advertisment

ADMK former minister case Police paste leaflet at the house of the offender who did not appear

இதனால் தலைமறைவான முத்துக்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக, “அறிவிக்கப்பட்ட குற்றவாளி”யாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் வீரக்குடி கிராமத்தில் உள்ள முத்துக்குமாரின் வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையை வடகாடு போலீசார் ஒட்டியுள்ளனர். முத்துக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் 15 ஆண்டுகளாக வழக்கு முடிவடையாமல் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.