
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி என்ற பெண்ணிடம் சில தினங்களுக்கு முன்பு 8 பவுன் நகையை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதேபோன்று நாவல்குளம் பகுதியைச் சேர்ந்த ஏஞ்சல் ராணி, இவருடைய மாமியார் பாக்கியசீலி ஆகிய இருவரையும் மொபட்டில் செல்லும்போது தாக்கி, 4 சவரன் நகைகளை பறித்துச் சென்றனர்.
இதே போன்று, இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி செய்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல், இருதயராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கொள்ளையர்கள் வைத்திருந்த செல்ஃபோனை போலீசார் ஆய்வு செய்துவந்து அதனடிப்படையில், கொள்ளையர்களை பிடித்துள்ளனர். கொள்ளையர்கள் மூவரும் பண்ருட்டி அருகில் உள்ள முத்து நாராயணபுரத்தைச் சேர்ந்த சரவணன், கடலூர் பழைய நகரைச் சேர்ந்த ஷாஜகான், பண்ருட்டி பாலூர் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பது தெரியவந்துள்ளது. மேற்படி மூவரும் ஆரோவில், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அவர்கள், கொள்ளையடித்த நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன்மதிப்பு, சுமார் ரூ.15 லட்சம் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. போலீசார் மூன்று கொள்ளையர்களையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.