
பொள்ளாச்சியில் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு சிறுமியின் உடலில் பல்வேறு பாகங்களை கொடூரமாக தாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அண்மையில் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் ஆறு வருடங்களுக்கு பின் நீண்ட சிபிஐ விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில் அதே பொள்ளாச்சியில் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள செட்டிபாளையம் பகுதியில் தென்னை நார் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் அருண்குமார். அவருடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர் அருண்குமாரிடம் கடனாக பணம் பெற்றுள்ளார். பணத்தை திரும்ப தராத நிலையில் அவருடைய 17 வயது சிறுமியிடம் அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் தாய் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சிறுமி பாட்டியினுடைய பராமரிப்பில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய தந்தை பணியாற்றும் நார் ஏற்றுமதி பணிக்கு அவரும் வந்துள்ளார். இந்நிலையில்தான் சிறுமியின் தந்தை வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காததால் நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். சிறுமியின் உடலில் பல்வேறு இடங்களில் கொடூர பாலியல் தாக்குதலையும் அருண்குமார் அரங்கேற்றியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தப்பிக்க வேறு வழியில்லாமல் பொள்ளாச்சியில் உள்ள மற்றொரு கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த கடையில் சிறுமி பணத்தை திருடியதாக அக்கடையின் உரிமையாளர் நார் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் அருண்குமாரிடம் தெரிவித்துள்ளார். ஏன் திருடினாய் என தந்தையும் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார். அருண்குமாரும் கண்மூடித்தனமாக சிறுமியை தாக்கியுள்ளார். இதில் சிறுமியின் கை, தோள்பட்டை, மார்பு பகுதி, பிட்டம் என பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை எப்படியோ தாயிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அருண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அருண்குமார் தற்பொழுது தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாலியல் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாமல் மற்றொரு கடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி மீது உடனடியாக திருட்டு பட்டத்தை போட்ட கடையின் உரிமையாளர் சிறுமியின் தந்தையிடம் கூறாமல் அருண்குமாரிடம் இதுகுறித்து ஏன் தெரிவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் சிறுமியின் தந்தை மட்டுமல்லாது சிறுமியினுடைய தூரத்து அத்தையும் சிறுமியை தாக்க அருண்குமாரிடம் குச்சியை எடுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் சிறுமியின் தந்தை மற்றும் தூரத்து அத்தை ஆகியோருக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.