Skip to main content

மாவட்ட ஆட்சியரை சமூக வலைதளத்தில் விமர்சனம்.. வருவாய் ஆய்வாளர் கைது!! 

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல வருடங்களாக பதவி உயர்வுக்காக காத்திருந்த சுமார் 38 வருவாய் ஆய்வாளர்கள் கடந்த வாரம் துணை வட்டாட்சியராக பதவி உயர்வு வழங்கப்பட்டனர். இந்த பதவி உயர்வில் மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டியுள்ளதாக கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் மாநில வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, இரவிலும் தர்ணா போராட்டம் என்று தொடர் போராட்டங்களை நடத்தினார்கள்.
 

revenue officer suspended


போராட்ட நேரத்தில் ஒரு சமூக வலைதளத்தில போராட்டம் பற்றிய தகவல்கள் பறிமாற்றம் செய்து கொண்டனர். அதில் கந்தர்வகோட்டை பகுதி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரியை தகாத வார்த்தைகளை பதிவிட்டு விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விமர்சனம் பற்றி அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் "மாவட்டத்தில் நல்ல முறையில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சித்தலைவரை பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளது ஏற்க முடியாத செயல். அதனால் சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கம் இணைந்து போராட்டங்களை நடத்துவோம்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார், சமூக வலைதளத்தில் மாவட்ட ஆட்சியரை தகாத வார்த்தைகளில் விமர்சனம் செய்த வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதுக்கோட்டை வருவாய் அலவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
        
 

சார்ந்த செய்திகள்