Skip to main content

நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: மத்திய, மாநில அரசுகள் கூட்டு துரோகம்! அன்புமணி

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை: 
மத்திய, மாநில அரசுகள் கூட்டு துரோகம்! அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை:
’’மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான விஷயத்தில் தமிழகத்தை  அடுத்தடுத்து இரட்டை இடிகள் தாக்கியிருக்கின்றன. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்ட நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு காரணமாக  தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்களும் தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு வேறு வழிகளில் நீதி பெற்றுத்தர முடியுமா? என்பது குறித்தெல்லாம் ஆராயாமல் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த  ஒப்புக்கொண்டிருக்கிறது. நீட் மதிப்பெண் அடிப்படையிலான தர வரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றும், நாளை மறுநாள் முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு தொடங்கும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும் வரை நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு சரிபாதி வாய்ப்புகள் இருந்தன. ஆனால், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் நேர்நின்ற தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்றும், இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடையாது என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தான் இவ்வழக்கில் அடுத்த கட்ட வாதங்களைக் கூட கேட்காமல்  நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் கூட்டணி அமைத்து நாடகம் நடத்தி வந்தன. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து விட்ட நிலையில், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு பெறுவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு தயாரித்தது. அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் வழங்கப் படும் என்றும், சட்ட அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது என்றும் மத்திய அமைச்சர்கள்  தெரிவித்தனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் பல நாட்கள் தில்லியில் முகாமிட்டு பல மத்திய அமைச்சர்களை சந்திப்பது போன்ற நாடகத்தை நடத்தினர். தமிழக பினாமி முதலமைச்சரும் தில்லி சென்று பிரதமரை சந்தித்து நீட் விலக்குக்காக வலியுறுத்தியதாக செய்திகள் பரப்பப்பட்டன.

ஆனால், அத்தனையும் நாடகம் என்பது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இப்போது மேற்கொண்ட நிலைப்பாடு மூலம் உறுதியாகி விட்டது. ‘‘நான் அடிப்பது போல அடிக்கிறேன்... நீ அழுவதைப் போல அழு’’ என்பதைப் போல மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் நாடகமாடியிருக்கின்றன. தமிழக முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் தில்லியில் பல நாட்கள் முகாமிட்டிருந்ததெல்லாம் தங்களின் ஊழல் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதற்காகவும், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தானே தவிர நீட் விலக்கு பெறுவதற்காக அல்ல என்பது இப்போது தெளிவாகி விட்டது. மருத்துவம்  படிக்க விரும்பிய தமிழக மாணவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்த தமிழக ஆட்சியாளர்களையும்,  மத்திய ஆட்சியாளர்களையும் தமிழ்நாட்டு மக்கள் நூற்றாண்டுகள் ஆனாலும் மன்னிக்க மாட்டார்கள்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு தவறிய துரோகத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி  தலைமையிலான பினாமி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’   

சார்ந்த செய்திகள்