
அழகும் அப்சரசும் கண்களுக்கு வண்ணமாக இருக்கும். ஆனால் அந்த அழகு ஆபத்தை உள்ளடக்கியது என்பது அப்போதைக்கு தெரிய வாய்ப்பில்லை தான். அப்படி ஒரு திகிலான சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தின் உடன்குடி அருகே உள்ள மெஞ்ஞானபுரம் தேரிப்பனை ஏரியாவை உலுக்கி இருக்கிறது.
மெஞ்ஞானபுரம் தேரிப்பனை பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மனைவி வசந்தா. 70 வயதான வசந்தா கணவர் மறைந்த பிறகு 7 ஆண்டுகளாக தனியே வசித்து வந்திருக்கிறார். இவர்களின் இரண்டு மகன்களான வினோத், விக்ராந்த், மகள் சபிதா மூவருமே திருமணமாகி செட்டிலானவர்கள் மகள் சபிதாவும், வினோத்தும் கோவையில் வசித்து வந்தாலும் இன்னொரு மகனான விக்ராந்த் போலீஸ்காரர். அருகிலுள்ள ஆனந்தபுரத்தில் வசித்து வருபவர்.
வெளியூரில் மகள் சபிதா இருந்தாலும் அன்றாடம் தன் தாயிடம் அலைபேசியில் பேசுவதுடன் அவரின் உடல் நிலை மற்றும் தேவைகளைக் கேட்டறிவார். தாயை இரண்டு மகன்களும், மகளும், முகம் வாடாமல் கவனித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் ஏப்-16 அன்று கோவையில் இருந்த மகள் சபிதா வழக்கம்போல் தனது தாய் வசந்தாவுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் அட்டென்ட் செய்யப்படாமல் நீண்ட நேரம், மறுபடியும் மறுபடியும் ரிங் போய்க் கொண்டிருந்ததே தவிர பதிலில்லை.
சந்தேகப்பட்ட சபிதா, போலீஸ்காரரான தன் சகோதரர் விக்ராந்தை போனில் அழைத்தவர், அம்மாவுக்கு போன் செய்தேன் ரொம்ப நேரம் எடுக்கல்ல. என்னாச்சுன்னு தெரியல பயமாயிருக்கு தாமதிக்காமல் போய்ப் பார் என்று படபடத்திருக்கிறார். பதறிப் போன போலீஸ்காரரான விக்ராந்த் அந்தப் பக்கமாயுள்ள தனது உறவினரை நேரில் போகச் சொல்லி, தாய்க்கு என்னாச்சுன்னு பார்க்ககச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து மெஞ்ஞானபுரம் தேரிப்பனைப் பகுதிக்கு விரைந்த அந்த உறவினர் வசந்தாவின் வீட்டு முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டியிருக்க, பின்பக்கக் கதவு திறந்தே கிடந்திருக்கிறது.
அந்த வழியாக உள்ளே சென்று பார்த்தவர் அங்குள்ள நார் கட்டிலில் பேச்சு மூச்சின்றி வசந்தா அலங்கோலமாகக் கிடந்ததைப் பார்த்து அலறி இருக்கிறார். தலையணையால் அமுக்கி அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் கட்டிலில் ரத்தக்கறைகள் படிந்திருந்ததைப் பார்த்தும் கூச்சலிட்டிருக்கிறார். கூடவே வசந்தா அணிந்திருந்த தங்க நகைகள் காதிலுள்ளவைகள் காணாமல் போயிருந்ததைப் பார்த்து திகைத்த உறவினர் தகவலை போலீஸ்காரர் விக்ராந்த்திற்குத் தெரிவித்திருக்கிறார். பிள்ளைகள் கண்ணீரும் கம்பலையுமாய் தேரிப்பணை கிராமத்திற்கு விரைந்திருக்கிறார்கள். தகவல்கள் போய் அங்கு வந்த மெஞ்ஞானபுரம் போலீசார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி.க்களான சுகுமார், மகேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை அணு அணுவாக ஆராய்ந்திருக்கிறார்கள்.
வசந்தாவின் உடலிலுள்ள ஆடைகள் களையப்பட்டும் ஜாக்கெட் கிழிக்கப்பட்டும் அலங்கோலமாகவும், அணிந்திருந்த நகைகள் மாயமாகிப் போனதையும் அறிந்த போலீஸ் அதிகாரிகள் ஆதாயக் கொலையா அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொலையா என முடிவுக்கு வராமல் குழப்பத்தில் திணறி இருக்கிறார்கள்.
ஆதே சமயம் எப்பேர்ப்பட்ட சம்பவங்களும் சிக்கலுக்கான ஒரு க்ளூவை உணர்த்திவிடும் என்பதற்கேற்ப அருகிலுள்ள தலையணையால், அமுக்கிக் கொலை செய்யப்பட்டிருப்பதால் ஈடுபட்டது ஒருவராகவுமிருக்கலாம் என்றும் தோன்றியிருக்கிறது. அன்றைய தினம் மதிய வேளை நடந்த இந்தக் கொலை பாதகம் இரவில் தான் கிராமத்தில் பரவி, மெஞ்ஞானபுரம் தேரிப்பனை ஏரியாவே அரண்டிருக்கிறது.
உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிய போலீஸ் அதிகாரிகள் புலன் விசாரணையைக் கூர்மையாக்கியிருக்கிறார்கள். வருடங்களாகத் தனியாக வசித்து வந்த வசந்தாவை திட்டமிட்டே கொலை செய்திருக்கிறார்கள். குறிப்பாக அவரது தனிமை பற்றி அறிந்தவர்களே இதனை நடத்தியிருக்கலாம். அதுவும் இந்த ஏரியாவைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு எவருமில்லை என்பதே எங்களின் திடமான எண்ணம் என்கின்றனர் எஸ்.ஐ.டி.யினர், சம்பவத்தில் ஒருவர் ஈடுபட்டிருப்பதால் தான், நாள் கடந்தும் க்ளூ கிடைக்கவில்லை. காரணம், கிராமத்துச் சொலவடையைப் போல் களவுக்கு ஒருவர், காதலுக்கு இருவர், என்ற கணக்கிருந்தால் சம்பவங்கள் நிச்சயம் வெளியே வராது. அதைத் தாண்டி கூடுதலாக ஒருவர் இணைந்திருந்தால் சம்பவங்கள் நிச்சயம் வெடித்துவிடும். அதனால் தான் இக்கொலையின் முடிச்சு அவிழவில்லையாம்.

ஆனாலும் சவாலான, சிக்கலான இந்த படுகொலையில் போலீஸ் தரப்பில் கிரிமினல் விசாரணையில் தேர்ந்தவர்கள் மூளையைக் கசக்கி இருக்கிறார்கள். ஆலோசனைப்படி, மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், சாத்தான்குளம் என்று அருகிலுள்ள காவல் நிலைய போலீசாரெல்லாம் தேரிப்பனைப் பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். பல டீம்களாகப் பிரிக்கப்பட்ட போலீசார் தேரிப்பனைப் பகுதியின் அத்தனை வீடுகளுக்குள்ளும் ஒரே சமயத்தில் புகுந்தவர்கள் அந்தந்த வீடுகளில் உள்ள ரேஷன் கார்டு படி அந்த வீட்டிலும் உரியவர்கள் இருக்கிறார்களா இல்லையா? அப்படி எனில் அவர்கள் யார் என்ற கணக்கை எடுத்திருக்கிறார்கள். இந்தக் குடைச்சலில் அனைத்து வீடுகளிலும் உரியவர்களிருக்க ஒரே ஒரு வீட்டில் மட்டும் 24 வயதேயான செல்வரதி என்ற திருமணமான இளம்பெண் மிஸ்ஸிங் ஆனதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அதேவேளையில் வசந்தாவின் வீட்டருகே யார், யார் வந்து சென்றார்கள் என்ற போலீசாரின் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த செல்வரதி என்ற இளம் பெண் அடிக்கடி அந்தப் பகுதியில் வந்து சென்றது தெரிய வந்திருக்கிறது. புலனாய்வுக் கணக்குகள் ஒத்துப் போக இளம் பெண் செல்வரதியைப் போலீஸ் தேடும் பணியை மேற்கொண்டது, திருமணமான செல்வரதி அருகிலுள்ள அவரது கணவர் வீட்டில் வசித்து வருவதும், சில நாட்களுக்கு முன்பு தேரிப்பனையிலுள்ள தனது தாய் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்திருக்கிறது. அத்துடன் சம்பவத்திற்கு முதல் நாள் வசந்தாவின் வீட்டருகே அவர் சுற்றித் திரிந்ததையும், போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கடின முயற்சியால் புலன் விசாரணை சரியான கோணத்தில் சென்றதையடுத்து அவளின் கணவரின் ஊரான அருகிலுள்ள மீரான்குளத்திற்குச் சென்ற விசாரணை டீம் அங்கே வீட்டில் எதுவும் தெரியாத அப்பாவியாய் இருந்த செல்வரதியை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணையின் போது கூட தனக்கு எதுவுமே தெரியாது. நான் அப்பாவி என்று அழுத்தமாகவே சொன்ன செல்வரதியின் முந்தைய சம்பவங்களின் ஈடுபாடுகளை விவரித்ததும் அரண்டு போன செல்வரதியிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் வசந்தா அணிந்திருந்த 7 பவுன் நகை செல்வரதி வசமிருந்ததைக் கைப்பற்றிய பிறகே நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில் செல்வரதி, வசந்தாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறாராம். கொலைக்கான அவளின் நோக்கத்தையும் கிளறியிருக்கிறார்கள்.
சந்தேகத்திற்கிடமில்லாமல் பெயருக்கேற்றார் போல அப்சரஸ் போன்றிருந்த செல்வரதி, அதன் பிறகே தன் மௌனத்தைக் கலைத்திருக்கிறார். அந்த இளம் வயதிலும் தான் நடத்திய அந்தப் படுகொலையையும் அதனைத் திசை திருப்ப தான் நடத்திய கிரிமினல் வேலையையும் அவள் வெளிப்படுத்தியது விசாரணை போலீசாரையே விதிர் விதிர்க்க வைத்திருக்கிறது.
சிறு வயது முதலே தனக்குத் திருடுகிற பழக்கமிருந்தது. சின்ன சின்ன திருட்டுகளிலும் ஈடுபட்டதுண்டு. தனியாக வசித்து வந்த வசந்தா வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தவர், வீட்டின் பின்புறம் எலுமிச்சை மரம் ஒன்றையும் வளர்த்திருக்கிறார். மரத்திலிருந்த எலுமிச்சைகள் காணாமல் போனதுடன், கோழிகளும் திருடு போயிருக்கிறது. அவரது வீட்டுப் பக்கம் செல்வரதி வந்து சென்றதால் எலுமிச்சம் பழங்களையும் கோழிகளையும் அவள் திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வசந்தா செல்வரதியை அழைத்து விசாரிக்க, அது சமயம் செல்வரதி என்னயா திருடின்னு சொல்ற. உன்னய என்ன பண்றேம் பார்?. என்று மிரட்டிச் சென்றிருக்கிறார். அதே சமயம் வசந்தா அணிந்திருந்த கனமான செயின் செல்வரதியின் கண்ணை உறுத்தியிருக்கிறது. அதையடுத்தே அதனைத் திருடத் திட்டமிட்ட செல்வரதி மறு நாள் மதியம் வசந்தாவின் வீட்டுக்குப் போயிருக்கிறார்.
கட்டிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வசந்தாவின் நகையை திருட வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட செல்வரதி, தலையணையால் வசந்தாவின் தலையைக் கடுமையாக அமுக்கித் துடிக்கத் துடிக்கக் கொடூரமாக கொலை செய்திருக்கிறார். பின்பு அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயின் பிற சிறிய ஆபரணங்களையும் திருடியவர், தன்னுடைய கொலை பாதகம் வெளியே தெரியாமலிருக்கவும், போலீசாரின் விசாரணைப் போக்கையும் திசை திருப்பும் வகையில் வசந்தாவின் ஜாக்கெட்டைக் கிழித்துக் கழட்டியும் அவரது உள்ளாடையையும் களைந்து ஒதுக்கியவர் அவரது கால் பாகங்கள் வெளியே தெரியும்படி அலங்கோலமாய் செட் செய்திருக்கிறார்
உடலைப் பார்க்கிற போலீசார் பாலியல் சம்பவம் காரணமாயிருக்கலாம் என நம்பும்படியாக வசந்தாவின் உடலைக் கிடத்தியதாகவும், ஆடம்பர வாழ்விற்காகவே நகையைத் திருடியதாகவும் வாக்குமூலமாய் செல்வரதி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் மெஞ்ஞானபுரம் போலீசார். தொடர்ந்து செல்வரதியிடமிருநு்து 7.5 பவுன் நகையைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
கைது செய்யப்பட்ட இளம் பெண் செல்வரதியை ஜெயிலில் அடைப்பதில் போலீசாருக்கு பெரிய சிக்கல். செல்வரதிக்கு பால்மணம் பச்சைமணம் மாறாத இரண்டரை மாதக் கைக் குழந்தை உள்ளதால் அந்தப் பச்சப்புள்ளயுடன் அவரை சிறைக்கு அனுப்புவதா, அல்லது அந்தக் குழந்தையை காப்பகத்தில் சேர்ப்பதா என்ற குழப்பத்தில் மூன்று நாட்களிருந்திருக்கிறார்கள். இதுகுறித்து சட்ட நிபுணர்கள், அரசு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் லீகல் ஒப்பீனியன் பெற்ற பிறகே, தாயிடமிருந்து கைக் குழந்தையைப் பிரிக்கவேண்டாம் என்ற முடிவுக்கு வந்த போலீசார் பேய்க்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தில் கணவர் சாலமோன் ஐசக் வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண் செல்வரதி மற்றும் அவரது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் மதுரை பெண்கள் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஆனாலும் ஒன்றுமறியாத, மண்ணில் பிறந்த மணம் கலையாத இரண்டரை மாதக் கைக்குழந்தை கூட சிறைக்குள் அடைக்கப்பட்டது காண்பவர்களின் உயிர் நாடியை வேதனையில் அறுத்திருக்கிறது.
இதுகுறித்து நாம் தூத்துக்குடி எஸ்.பி.யான ஆல்பர்ட் ஜானிடம் பேசியதில் இந்தச் சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிப்பதில் சவாலாக இருந்தது. அதனால்தான் டோர்-பை-டோர் செக்கப்பில் சிக்கினார். கெட்டப்பை மாற்றி புலன் விசாரணையை திசை திருப்பும்படி செய்திருக்கிறார். செல்வரதி மீது திருட்டு வழக்கும், அதே ஊரில் ஒருவரைக் கொலை செய்த வழக்கும் அவர் மீதிருக்கிறது. நடந்தவைகளை ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றார்.