
தன் மீது கார் ஏற்றி கொல்ல, கொலை முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் காவல்துறை அதை முழுவதுமாக மறுத்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் பயணித்த பொழுது உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தூர்பேட்டை-சேலம் சந்திப்பு சாலையில் அவர் சென்ற கார் மீது மற்றொரு கார் ஒன்று மோதும்படி வந்ததாக தெரிவித்திருந்தார்.
அன்று நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம், ''கொலை செய்ய சதி பண்ணிவிட்டார்கள். தருமை ஆதீனத்தின் ஆசி தான் என்னைக் காப்பாற்றியது. மீனாட்சி சுந்தரேசர் பெருமாள் தானே என்னைக் காப்பாற்றினார். இல்லையென்றால் இந்த இடத்தில் நான் இருப்பேனா'' என பேசி இருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அந்த சம்பவம் விபத்து எனவும், கொலை செய்வதற்கான முயற்சி எதுவும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளனர்.