Skip to main content

மருத்துவர் செல்போனில் பிசி... சிகிச்சைக்கு வந்த கோழிகள் சாவு மாடுகள் மயக்கம் மக்கள் கூச்சல்!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி பகுதியில் கால்நடை மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் சுற்றுபகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த கால்நடை மருத்துவமனையில் பயனடைந்து வருகின்றனர். இந்த மருத்துவமனை தினந்தோறும் திறப்பது இல்லை, பல நாட்கள் மதியம் திறப்பது, பல நாட்களில் பூட்டியே கிடப்பது, நீண்ட நாட்கள் இங்கு பணிபுரியும் மருத்துவரே வருவதில்லை, இதில் பணியாற்றும் உதவியாளர்கள்தான் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது என்ற நிலையில் இந்த கால்நடை மருத்துவமனையின் பரிதாப நிலை என்று இப்பகுதி மக்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் உயரதிகாரிகளுக்கு புகாருக்கு மேல் புகார் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

medi

 

இந்தநிலையில் இன்று வழக்கம்போல் கால்நடை மருத்துவமனை திறக்கும் நேரத்திற்கு முன்பு சுற்றுபகுதியை சேர்ந்த மக்கள், முதியவர்கள் தங்களது மாடுகள், ஆடுகள், கோழிகளுக்கு சிகிச்சை அளிக்க வந்திருந்தனர். வழக்கம்போல் திறக்கும் நேரத்தை கடந்தும் மருத்துவமனைக்கு மருத்துவர் வரவில்லை. இதனால் பொறுமை இழந்த மக்கள் இங்கு பணிபுரியும் மருத்துவர் மகேந்திரன் செல் நம்பருக்கு தொடர்புக்கொண்டனர். போன் பலமணிநேரம் பிசியாகவே (மற்றொருவரிடம் தொடர்பில் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே) இருந்தது. மதியம் 12 மணியாகியும் இந்தநிலை நீடித்தது.

 

medi

 

இதனால் அதிருப்தி அடைந்த பாதி பேர் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். பலர் மருத்துவர் வரும் வரை இங்கிருந்து செல்வதில்லை என்று பிடிவாதமாக இருந்தனர். அப்போது சிகிச்சைக்கு ஜாம்புவானோடை கிராமத்திலிருந்து கொண்டு வந்த இரண்டு கோழிகள் இறந்தது. இதனால் அதர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மக்கள் கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இந்த தகவல் அறிந்து 12.10 மணிக்கு வந்த மருத்துவர் மகேந்திரன், அவசர அவசரமாக மருத்துவமனையை பின்பக்கம் திறந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க துவங்கினார். இதில் மருத்துவரை பார்த்ததும் மக்கள் கூச்சலிட்டனர்.

 

 

medi

 

அப்போது மருத்துவர் 'என்னா பண்றது ஆள் பற்றாக்குறைதான் முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சென்று மாடுகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி போட்டுவிட்டு வருகிறேன்.. கலெக்டர் என்னா நீங்க எங்கே வேண்டுமென்றாலும் புகார் கொடுங்க என்றார். அப்போது சிகிச்சைக்கு வந்த மக்கள் 'ஏன் சார் பொய் சொல்றீங்க? வீட்டில் இருந்துக்கொண்டு போனில் கும்மாளம் அடித்துவிட்டு பத்திரிக்கையாளர்கள் வந்துளத்தை அறிந்து இப்போ இங்கு வந்திருக்கீங்க.. இல்லனா வர மாடீங்க.. நேற்று எங்கே போனீங்க..? ஏன் நாலுநாளா மருத்துவமனை திறக்கல எங்கே போனீங்க?' என்று அடுக்கடுக்கான புகார்களை கூறி வாக்குவாதம் செய்தனர். அப்செட்டான  மருத்துவர் எதுவும் பேசாமல் வேறுவழியின்றி வந்திருந்த கால்நடைகளுக்கு அரைமணிநேரம் சிகிச்சை அளித்துவிட்டு மீண்டும் மருத்துவமனையை பூட்டிவிட்டு சென்றார். 

 

medi

 

பொதுமக்கள் கூறும்போது.. இதற்கு முன்பு இருந்த மருத்துவர் காங்காசூடன் எந்தநேரமும் மருத்துவமனையில் இருப்பார் கால்நடைகளுக்கு ஆபத்து என்றால் இரவு ஒரு மணி என்றால் கூட வீடுதேடி வருவார். அவர் போனதிலிருந்து இந்த மருத்துவமனை சரிவர இயங்கவில்லை. தற்பொழுது வந்துள்ள மருத்துவரை யாரும் பார்த்ததுகூட இல்லை. கால் நடைகளுக்கு உதவியாளர்தான் சிகிச்சை அளிக்கிறார். நாங்கள் நான்கு நாளாக சிகிச்சைக்கு கால்நடைகளை கொண்டு வருகிறோம். தினமும் வந்து திறக்காததால் ஏமார்ந்து செல்கிறோம். போனில் தொடர்புக்கொண்டால் எந்தநேரமும் பிசியாகவே இருக்கார். அப்படியே போனில் சிக்கினால் இன்று மருத்துவமனை கிடையாது நாளை வாங்க என்கிறார். எப்படி அவசரத்துக்கு பார்க்கமுடியும்? இதனால் தினமும் கால்நடைகள் இறக்கும் அவலநிலை உள்ளது எனவே கால்நடை துறை இந்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த மருத்துவமனைக்கு முன்பு இருந்ததை போல நேர்மையான மருத்துவரை நியமனம் செய்யவேண்டும் என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்