திருவள்ளூரில் மர்ம காய்ச்சல்: 200 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள சிறுகுமி கிராமம், இங்கு கடந்த 4 நாட்களாக ஊர் மக்களுக்கு தொடர்ந்து ஜூரம், காய்ச்சல் பரவி வருகிறது. இதில் சிறுவர்கள், முதியவர்கள் என ஒரே நேரத்தில் 200க்கும் அதிகமான ஊர் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முதலில் வீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு போதிய வசதி இல்லாததால் அவர்களுக்கு முதலுதவி செய்து வைத்து, திருத்தனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் திருத்தனி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள போதிய இடம் இல்லாத காரணத்தினால், அங்குள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் தான் என மாத்திரை மட்டும் அளித்து அனுப்பி வைத்துள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் மட்டும் காய்ச்சல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் இதுபோல் மர்மகாய்ச்சல் பாதிப்படைந்து வரும் நோயாளிக்களுக்கு இரத்த பரிசோதனை செய்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையிலும் திருத்தனி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நோய் பாதிக்கப்பட்டவர்களை சாதாரண காய்ச்சல் தான் என அனுப்பி வைத்தது. பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, சிறுகுமி கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, பாதிப்புள்ள அனைவருக்கும் இரத்த பரிசோதனை செய்து உரிய மேல்சிகிச்சை அளித்திட வேண்டும் என்பதே ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- தேவேந்திரன்