
திருச்சி TVS டோல்கேட் உலகநாதபுரத்தைச் சேர்ந்தவர் நம்பிதாசன் (50). கப்பல் என்ஜீனியரான இவருடைய மனைவி சீலா என்கிற சசிகலா (40), இவர்களுடைய மகன் கார்த்திகேயன் (21). குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நம்பிதாசனும், சசிகலாவும் பிரிந்து வாழ்ந்துவந்தனர்.
வெளிநாட்டில் வேலை செய்த நம்பிதாசன், 2016ஆம் ஆண்டு திருச்சிக்கு வந்தார். அப்போது விமான நிலையத்திலிருந்து நம்பிதாசனை அவருடைய மனைவி சசிகலா, மகன் கார்த்திகேயன் ஆகியோர் காரில் சோமரசம்பேட்டைக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர்.
இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசில் நம்பிதாசன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து, சசிகலா மற்றும் கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி கோர்ட்டில் நடைபெற்றுவருகிறது. ஆனால், ஜாமீனில் இருந்த தாயும் மகனும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துவந்தனர்.
இதையடுத்து அவர்களுக்குப் பிடிவாரண்டு பிறப்பித்து 2018ஆம் ஆண்டு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த தாய், மகனைப் பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை கொட்டிவாக்கத்தில் பதுங்கியிருந்த 2 பேரையும் நேற்று முன்தினம் (02.08.2021) தனிப்படை போலீசார் கைதுசெய்து திருச்சிக்கு அழைத்துவந்தனர். பின்னர் இருவரும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.