
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (04.05.2025) நடைபெற்று முடிந்துள்ளது.
திருப்பூரில் நீட் தேர்வு மையத்தில் மாணவி ஆடையில் இருந்த பட்டன் நீக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு வந்த போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினரை குண்டுகட்டாக கைது செய்தனர்.
திருப்பூரில் ஏழு நீட் தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 3,212 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வு எழுதினர். திருமுருகபூண்டியில் உள்ள ஏவிபி கலை கல்லூரியில் 11 மணி முதல் சோதனைக்கு பிறகு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது நீட் தேர்வு மையத்தில் மாணவி ஒருவரின் ஆடையில் இருந்த பட்டன் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சூழ்ந்து கொண்ட போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.