Skip to main content

வெறும் “பொம்மை” பழனிச்சாமி தமிழக அரசுக்கு இனியும் தலைமை தாங்குவது எந்த விதத்தில் சரி? வேல்முருகன்

Published on 22/08/2017 | Edited on 22/08/2017

வெறும் “பொம்மை” பழனிச்சாமி தமிழக அரசுக்கு இனியும் தலைமை தாங்குவது எந்த விதத்தில் சரி? வேல்முருகன்

வெறும் “பொம்மை” என ஆக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக அரசுக்கு இனியும் அவர் தலைமை தாங்குவது எந்த விதத்தில் சரி?  என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில, 

“போர்டு கருப்பட்டி” என்று தென் மாவட்டங்களில் சொல்லுவார்கள்.

கருப்பட்டியின் சித்திரத்தைப் போய் உண்ண முடியுமா என்பதுதான் இதன் பொருள்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியும் இந்த ரகம்தான் என்றால் அது பொய்யல்ல.

செயல்பாடே இல்லாமல் ஒப்புக்கே முதலமைச்சராக இருந்துவருகிறார் என்பதுதான் அவர் பற்றி தமிழக மக்கள் கொண்டிருக்கும் ஒருமித்த கருத்து.

இந்தக் குற்றச்சாட்டுக்கு அவரது ஆட்சியின் கீழ் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளும் சான்றுகள்!
காவிரி நீரின்றி விவசாயம் பொய்த்ததை, விவசாயிகள் மாண்டதைக் கண்டுகொண்டதில்லை.

காவிரிப் பாசனப் பகுதியைப் பாழாக்கும் ஒஎன்ஜிசிக்கு எதிராக நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மாதக்கணக்கில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை.
“நீட்”டை நுழைத்ததால் மருத்துவம் படிக்க முடியாமல் போன மாணவர்களின் குமுறலை காதில் வாங்கியதில்லை.

ஜிஎஸ்டியை ஏற்றதால் விலைகள் விண் நோக்குவது பற்றியோ, வரி விதிக்கும் உரிமை பறிபோய் தமிழக “அரசு” என்பதற்கே அர்த்தமில்லாமல் போனது பற்றியோ சிறு அதிர்ச்சிகூட அடைந்ததில்லை.

எங்கு பார்த்தாலும் குடிநீருக்கான போராட்டம், குடிக்கு எதிரான போராட்டம் வெடித்திருப்பதையோ, அதை மகளிரே நடத்துவதைப் பார்த்தோ மனம் பதைத்ததில்லை.

நீர்வளம், நிலவளம், வாழ்வாதாரமே அழிக்கப்படுவதை எதிர்த்து தமிழகமே போராடுகையில் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய மண்டலமும் வேலூர் மாவட்டத்தில் 30 கிராமங்களில் எரிவாயு திட்டமும் அமைக்க ஓஎன்ஜிசி களமிறங்கினாலும் கலக்கமே கொண்டதில்லை.

இப்படி எந்த உணர்வுமே தட்டுப்படாத, கிஞ்சிற்றும் செயல்பாடே இல்லாத ஒருவரைப் போய் முதலமைச்சர் என்று சொல்ல மனச்சாட்சிதான் இடம் தருமா?

ஆனால் நிலைமையோ நாளுக்கு நாள் மேலும் மேலும் மோசமாவதுதான் மிச்சம்!

பெயருக்கு முதல்வராயிருப்பவர் இப்போது வெறும் “பொம்மை” எனவே ஆக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் சோகத்திலும் சோகம்!

ஈபிஎஸ் – ஓபிஎஸ் இணைப்பினால் விளைந்த பாதகமும்கூட இது!

எல்லாம் டெல்லி கனவான் மோடியின் உபயம் மற்றும் உபாயம்தான்!

தமிழக அமைச்சரவையே பொம்மையாக்கப்பட்டது உண்மைதான் என்பதை நிரூபிக்கின்றன அரசின் நிர்வாக நடைமுறைகள்.

இன்று 22ந் தேதி ஜேக்டோ – ஜியோ அமைப்புகள் சார்பில் அலுவலகப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் என 18 லட்சம் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

புதிய ஓய்வூதியத்தைக் கடாசிவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்; எட்டாவது ஊதியக் கமிஷனைத் தொடங்க வேண்டும் என்பன அவர்களின் முக்கியமான கோரிக்கைகள்.

இதனைப் பேசித் தீர்க்க முன்வராவிட்டால் வரும் செப்டம்ர் 7ந் தேதி முதல் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்குவதென முடிவெடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 22ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஒடுக்கும் விதத்தில் ஆங்காங்கே அரசு ஊழியர்களைக் கைது செய்யத் தொடங்கியது எடப்பாடி அரசு.

ஆனால் இந்தக் கைது நடவடிக்கைக்கு தன்னிச்சையாக உத்தரவிட்டது தலைமைச் செயலர்தான் என்று தெரியவருகிறது.

கைது செய்வது மட்டுமல்ல; “போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் ‘கட்’ செய்யப்படும்; தற்காலிக ஊழியர்கள் பணியிலிருந்தே நீக்கப்படுவார்கள்” என்றெல்லாம் தலைமைச் செயலரிடமிருந்து மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இதிலிருந்து தெரிவதென்ன?

மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நிர்வாக நடவடிக்கைகளுக்கு உத்தரவிடாமல், தலைமைச் செயலர் மற்றும் துறைச் செயலர்களே தன்னிச்சையாக செயல்படுகிறார்கள் என்பதுதான்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியால் பொம்மையாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், தலைமைச் செயலர் மற்றும் துறைச் செயலர்களும் மோடியாலேயே இயக்கப்படுகிறார்கள்; அதை ஏற்று அவர்களும் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள்.

ஆக தமிழக மக்களின் அரசு அவர்களுக்கு எதிராகவே திருப்பிவிடப்பட்டிருக்கிறது.

இந்த அவலத்துக்குக் காரணம் பெரும் “சுயலாபங்களுக்காக” மட்டுமே வெறும் “பொம்மைகளாக” வேண்டுமானாலும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள்தான்.

எனவே இப்படிப்பட்ட ஓர் அமைச்சரவைக்கு எடப்பாடி கே.பழனிச்சாமி இனியும் தலைமை தாங்குவது எந்த விதத்தில் சரி என கேள்வி எழுப்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

சார்ந்த செய்திகள்