Skip to main content

மாணவி அனிதாவின் மரணம் அரசாங்கத்தின் படுகொலை: மு.க.ஸ்டாலின் பேட்டி

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
மாணவி அனிதாவின் மரணம் அரசாங்கத்தின் படுகொலை: மு.க.ஸ்டாலின் பேட்டி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின், மருத்துவக் கல்வியில் தமிழக ஏழை – எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் இடம்பெற முடியாத வகையில், சமூகநீதிக்கு எதிராக நடத்தப்பட்ட நீட் தேர்வினால், தனது மருத்துவக் கல்வியைப் பயிலமுடியாத வேதனையில் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்ட அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் உடலுக்கு நேற்று (02-09-2017) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், மறைந்த அனிதாவின் குடும்பத்தினருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நிதியுதவியாக ரூ.10 லட்சம் வழங்கினார்.
 
இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
 
நீட் தேர்வின் காரணமாக மாணவி அனிதாவின் மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை அவர் இழந்து விட்டார். பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, கட் ஆஃப் மதிப்பெண் 197.5 பெற்றிருந்தார். நீட் தேர்வு இல்லாமல் இருந்திருந்தால், அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். ஆனால், நீட் தேர்வினால் அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல, அவர் உச்ச நீதிமன்றம் வரைச் சென்றுப் போராடியிருக்கிறார். ஆனால், அதிலும் அவருக்குப் பயன் கிடைக்கவில்லை.
 
இதைவிடக் கொடுமை என்னவென்றால், மத்தியில் உள்ள ஆட்சியும், மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ ஆட்சியும் தவறான, பொய்யான செய்திகளை சொல்லி, முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் எல்லாம் டெல்லிக்குச் சென்று - வந்த போதெல்லாம், ”நல்ல செய்தி வரும்”, என்று ஒரு தவறான தகவலை தொடர்ந்து தெரிவித்தார்கள். ஆனால், அவர்கள் டெல்லிக்குச் சென்றதற்குக் காரணம் என்னவென்றால், தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொண்டு, ஆட்சியைத் தொடர்ந்து நடத்தி, ஊழல் செய்வதற்காக, தொடர்ந்து கொள்ளை அடிப்பதற்காகச் சென்றார்களே தவிர, நீட் தேர்வில் ஒரு நல்ல முடிவைக் காண வேண்டும் என்று அவர்கள் டெல்லிக்குச் செல்லவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
 
அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்பாக, “நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டுமென்று தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்கள் கொண்ட மசோதா எங்கே இருக்கிறது, யாரிடம் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது”, என்று தெரிவித்தார். அதன்பிறகு, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக, இப்போது, “நீட் தேர்வுக்கு நிச்சயமாக ஒரு ஆண்டுக்காவது விலக்கு கிடைத்து விடும்”, என்ற நம்பிக்கையை வெளிப்படையாக எடுத்துச் சொன்னார். இதையெல்லாம் நம்பி, எதிர்பார்ப்பில் காத்திருந்த மாணவி அனிதா இறுதியில் ஒரு பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த காரணத்தால், இப்படிப்பட்ட முடிவுக்கு வந்திருக்கிறாரே என்று நாம் வேதனைப்படுகிறோம்.
 
எனவே, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்ல மாட்டேன், இந்த கொலைக்கு, படுகொலைக்குக் காரணமாக இருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அனைவரும், இந்த இறப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, உடனடியாக கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.
 
அதுமட்டுமல்ல, நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை நான் ஆலோசனை செய்ய அழைத்திருக்கிறேன். அறிவாலயத்தில் அனைவருடனும் கலந்து பேசி, இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது என்று சிந்தித்து, அதன் பிறகு ஒரு முடிவை எடுக்கவிருக்கிறோம். அதேபோல, மாணவி அனிதாவை இழந்திருக்கக்கூடிய குடும்பத்தாருக்கு, கலைஞர் உத்திரவின் அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூ.10 லட்சத்தை உதவித்தொகையாக வழங்கியிருக்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்