
நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றன இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக, திருவள்ளூர், மத்திய சென்னை, தஞ்சாவூர், விருதுநகர் மற்றும் கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி - பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் ராஜ்சபா சீட் தொடர்பாக பேசுகையில், “இது பேச்சுவார்த்தை இல்லை. கூட்டணி அமைந்தபோதே கையெழுத்து இடப்பட்டு உறுதி செய்யப்பட்டது தான் ராஜ்யசபா சீட். ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும் பொழுது தேமுதிக சார்பில் யார் ராஜ்யசபா உறுப்பினராக டெல்லிக்குச் செல்வார் என்பதை அந்த நேரத்தில் தேமுதிகவின் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், “எல்லாம் உரிய நேரத்தில்.... அதாவது கூட்டணி கிட்டணி எல்லாம் விட்டு விடுங்கள். தேவை இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம். புரிகிறதா?. நாங்கள் ஏதாவது சொன்னோமா?. யார் யாரோ சொல்கிற கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டாம். நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?. தேர்தல் அறிக்கையில் என்ன வெளியிட்டோம் எனப் படித்துப் பாருங்கள். அதன்படி நடந்து கொள்வோம்” எனத் தெரிவித்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் எல். கே. சுதீஷ் தனியார் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக கூறியது உண்மைதான். நேரம் வரும்போது இது குறித்து அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவேன். கூட்டணியின் போது அதிமுக அளித்த உத்தரவாதத்தால் தான் நான் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார் அதிமுக சார்பில் மாநிலங்களவையில் இரு காலியிடங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.