Skip to main content

நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவிகள்; வேன்களில் அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்! 

Published on 04/05/2025 | Edited on 04/05/2025

 

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு இன்று (04.05.2025) மதியம் நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3000 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் கடந்த 5 ஆண்டுகளில் 27 மாணவிகள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5% உள் இட ஒதுக்கீட்டில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதி 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சாதித்த ஒரு பள்ளியாக உள்ளது கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி.

இந்த நிலையில் இன்று நடக்கும் நீட் தேர்விற்கு கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புதிய மாணவிகள் 55 பேரும் பழைய மாணவிகள் 25க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 80 மாணவிகள் தேர்வு எழுதச் சென்றனர். இவர்களுக்குப் புதுக்கோட்டை, திருச்சி, கந்தர்வக்கோட்டை என பல்வேறு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மாணவிகள் அவதிப்படக் கூடாது என்பதற்காக வழக்கம் போலப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேன்கள் ஏற்பாடு செய்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாதுகாப்பில் அனுப்பி வைத்தனர். முன்னதாக மாணவிகளுக்குப் பதற்றத்தைக் குறைக்க அறிவுரைகள் கூறி தலைமை ஆசிரியை வள்ளிநாயகி  மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகள் கூறினார்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறும் போது, “எங்கள் பள்ளியில் நீட் வருவதற்கு முன்பே பல மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவராகி உள்ளனர். அதன் பிறகு நீட் தேர்வு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு அரசின் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எங்கள் பள்ளி மாணவிகள் 27 பேர் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கின்றனர். 7.5% உள் இட ஒதுக்கீட்டில் அதிகமான மருத்துவ மாணவிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி என்ற பெருமை எங்கள் பள்ளிக்கு உள்ளது. இந்த வருடம் புதிய மாணவிகள் 55 பேரும், பழைய மாணவிகள் 25 பேருக்கு மேல் என 80 மாணவிகள் நீட் தேர்வு எழுதச் செல்கிறார்கள். அவர்களை வழக்கம் போலவே பாதுகாப்பாக அழைத்துச் சென்று தேர்வு எழுதப் பள்ளி நிர்வாகம் மூலம் வாகன ஏற்பாடு செய்து ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் உடன் அனுப்பி இருக்கிறோம்.

அதனால் இந்த வருடமும் எங்கள் பள்ளி மாணவிகள் அதிகமானோர் மருத்துவம் படிக்கச் செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றனர். தொடர்ந்து சாதிக்கும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளையும், பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள், தொடர்ந்து ஊக்கமளிக்கும் கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்.எம்.சி, முன்னாள் மாணவிகள், பெற்றோர்களையும் பாராட்டுவோம். மீண்டும் சாதிக்க வாழ்த்துகள்!. 

சார்ந்த செய்திகள்