
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (04.05.2025) நடைபெற உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் தேர்வர்கள் எழுத உள்ளனர்.
இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. 180 கேள்விகளைக் கொண்டுள்ள இந்த தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.20 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர். முன்னதாக நீட் நுழைவுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் தேர்வர்கள் 3 ஆண்டுகள் தேர்வு தடை செய்யப்படுவார்கள் என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரித்து விடுத்திருந்தது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிவு, நீட் தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாகவும் பெரும் சர்ச்சை எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இந்த ஆண்டு தேர்வு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அகிளியைச் சேர்ந்த மாணவி கயல்விழி நீட் தேர்வு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.