Skip to main content

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்து கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருநெல்வேலி மாவட்டம்,  இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சம்பந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் செய்தி வெளியிட்ட மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது பணகுடி காவல்துறையினர் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இஸ்ரோ மூலம் காவல்துறைக்கு எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் காழ்ப்புணர்ச்சியோடும், எழுத்துரிமை, பேச்சுரிமையை நசுக்கும் வகையிலும் பணகுடி காவல்துறையினர் தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட பத்திரிகையாளர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் தொடுத்து கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகள் ஒடுக்கப்படும் நிலை தீவிரமடைந்து வருகிறது. உரிமைகளுக்காகவும், மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகளை எதிர்த்தும் நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் நசுக்கப்படுகின்றன. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் தனிநபர்களும், தன்னார்வ அமைப்புகளும் கூட மிரட்டப்படுகின்றனர். 

போராடுபவர்கள் மீது ஏராளமான கடும் சட்டப் பிரிவுகளில் பொய் வழக்கு போடப்படுவதுடன், போராட்டங்களை ஒடுக்கவும், போராடுபவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படும் என பகிரங்கமாக காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. தற்போது திருநெல்வேலி பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்தது இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என நிரூபிக்கிறது.

எனவே பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்றும், தாக்குதல் தொடுத்துள்ள காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஜனநாயக இயக்கங்களை ஒடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சார்ந்த செய்திகள்