
சென்னை அருகே அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த ஜனப்பன் சத்திரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (26). அதிமுக பிரமுகரான இவர், சோழவரம் ஒன்றிய பேரவை துணைத்தலைவராகவும், எம்.ஜி.ஆர் நகர் கிளைச் செயலாளராகவும் இருந்துவந்தார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (16.08.2021) இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சிலம்பரசனை ஓட ஓட விரட்டி தலை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் சிலம்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சிலம்பரசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்துவந்த நிலையில், கொலை தொடர்பாக ஜனப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித்குமார் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் குறித்து சிலம்பரசன் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள், சிலம்பரசனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. கொலை சம்பவத்தில் மேலும் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்துவருகின்றனர்.