Poultry farming in 9 central prisons in Tamil Nadu

Advertisment

தமிழ் நாட்டில் வேலூர், சேலம், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை, புழல், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 9 மத்தியச் சிறைகள் உள்பட மாவட்ட மற்றும் கிளைச்சிறைகள் என 138 சிறைச்சாலைகள் உள்ளன. இச்சிறைகளில் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் கடந்த 2023ம் ஆண்டு முதல் வாரத்திற்கு 2 நாட்கள் சிக்கன் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் புதன்கிழமையும் சிக்கின் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு கைதிக்கு வாரத்திற்கு 300 கிராம் சிக்கன் வழங்கப்படுகிறது.

வேலூர் மத்திய சிறை நன்னடத்தை கைதிகளால் வளர்க்கப்படும் கோழிகள் மூலம் அரசுக்கு செலவு குறைந்துள்ளது. இந்நிலையில் வெளியில் இருந்து கைதிகளுக்கு இறைச்சி வாங்குவதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில், 9 மத்திய சிறைகளில் கறிக்கோழி வளர்க்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நன்னடத்தை கைதிகளுக்கு கோழி வளர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. நன்னடத்தை கைதிகள் கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர். இந்த கோழிகள் 7 வாரத்தில் இறைச்சிக்காக தயாராகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகள் கைதிகளுக்கே இறைச்சியாக சமைத்து வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் கூறியதாவது: சிறைகளை பொருத்த வரையில் கைதிகளுக்கு பல்வேறு வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதனால் கைதிகள் விடுதலையான பிறகு சுயதொழில் தொடங்கி சாதாரண மனிதர்களை போல வாழலாம் என்பதால் கோழி வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பண்ணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

வேலூர் மத்தியச் சிறையில் தற்போது 800 கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. 3வது கட்டமாக 400 கோழிக்குஞ்சுகள் இன்று வர உள்ளது. கைதிகளுக்கான இறைச்சி வழங்கப்படுவதோடு, விரைவில் பொதுமக்களுக்கும் நன்னடத்தை கைதிகள் மூலம் இறைச்சி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறையில் வளர்க்கப்படும் கறிக்கோழிகள் முழு கவனத்துடனும், சுகாதாரத்துடனும் வளர்க்கப்படுகிறது. சிறைகளில் உள்ள பண்ணையில் வளர்க்கப்படும் கறிக்கோழிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளை கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.