Skip to main content

அடுத்தடுத்து மலக்குழி மரணங்கள்- அரசு நடத்தும் படுகொலைகள்!: பெசவடா வில்சன்

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
அடுத்தடுத்து மலக்குழி மரணங்கள்- அரசு நடத்தும் படுகொலைகள்!: பெசவடா வில்சன்

டெல்லியில் தொடர்ந்து 35 நாட்களில் 10 பேர் கழிவுநீர்த் தொட்டிகளில் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலரும், ராமன் மகசசே விருது பெற்றவருமான பெசவடா வில்சன், இதுவொரு அரச படுகொலை என விமர்சித்துள்ளார்.



நேற்று காலை டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில், ரிஷிபால் என்பவர் மலக்குழியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இவருடன் சேர்ந்து மேலும் மூவர் விஷவாயு தாக்கி கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து பேசிய பெசவடா வில்சன், ‘நான் மருத்துவமனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்றேன். இந்த விவகாரம் குறித்து ஒவ்வொருவரும் மற்றொருவரின் மீது பலிபோடுகிறார்கள். இதுவொரு குற்றச்செயல். இந்தப்படுகொலையில் அரசுக்குத்தான் முக்கிய பங்கு இருக்கிறது. அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் செய்வதறியாது தவிக்கின்றனர். அவர்கள் தினக்கூலிகள். அவர்களது பொருளாதார சூழல்தான் அவர்களை இந்தத் தொழிலைச் செய்ய நிர்பந்தித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒப்பந்தக்காரரின் பெயரைச் சொல்லக்கூட தயங்குகின்றனர்.

அரசு பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் அலட்சியமாக இருக்கிறது. இவர்களைப் பணியல் அமர்த்தியதில் டெல்லி குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்களுக்குப் பங்கு உள்ளது. எனவே, இந்தப்படுகொலையில் அரசு பங்கெடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர், துணைநிலை ஆளுநர் என அனைவருக்கும் கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருக்கிறேன். ஆனால், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாட்டில் மனிதக்கழிவுகளை அகற்ற இன்னும் கூடவா தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை? மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிநிலை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்
நன்றி : தி இந்து ஆங்கிலம்

சார்ந்த செய்திகள்