
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று (04.05.2025) நடைபெற்று முடிந்துள்ளது.
நேற்று நடந்த நீட் தேர்வின் போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்த பட்டன் நீக்கப்பட்ட சம்பவம், மாணவி ஒருவருக்கு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம், பெண்கள் அணிந்திருந்த தாலி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றிய விவகாரம் என பல்வேறு சம்பவங்கள் நடந்து நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு அனுமதிக்கான சோதனையின் போது பிராமண சமுகத்தைச் சேர்ந்த மாணவர் அணிந்திருந்த பூணூல் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கலபுராகி பகுதியில் செயிண்ட் மேரி பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுத மாணவரான ஸ்ரீபாத் பாட்டீல் என்பவரை, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் அணிந்திருந்த பூணூலை அகற்றுமாறு தேர்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த பிராமண சமுகத்தினர், அப்பகுதியில் சாலை மறியிலில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதனால், அந்த இடமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, மாணவரின் பூணூலை அகற்றச் சொன்ன அதிகாரிகள் மீது அம்மாநில அரசு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.